2014-04-09 14:21:27

அமைதி ஆர்வலர்கள் – 1917ல் நொபெல் அமைதி விருது


ஏப்.09,2014. "தென்கிழக்கு ஆசியா 2004ம் ஆண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட பின்னர், உணவு, தண்ணீர், குடியிருப்பு போன்ற எனது உயிர் வாழ்வுக்கு மிகவும் தேவைப்படும் அடிப்படை வசதிகளின்றி இருந்தேன். யாராவது உதவி செய்யமாட்டார்களா எனத் தவித்துக் கொண்டிருந்தபோது எனக்கு உதவி செய்தவர்கள் செஞ்சிலுவைச் சங்கத் தன்னார்வப் பணியாளர்கள். எனக்கு மட்டுமல்ல, சுனாமியால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களுக்கு அவர்கள் உதவி செய்தனர்". இப்படிச் சொன்னவர் Nate Berkus. சுனாமி ஆழிப்பேரலை சமயத்தில் இச்சங்கத்தின் நாற்பதுக்கும் மேற்பட்ட தேசிய அமைப்புகளில் 22 ஆயிரத்துக்கு மேற்பட்ட தன்னார்வப் பணியாளர்கள் இடர்துடைப்புப் பணிகளை மேற்கொண்டனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு Trace Adkins சொல்கிறார்.... கடந்த ஆண்டில் எனது வீடு தீப்பிடித்தபோது நான் அங்கு இல்லை. ஆனால் உடனடியாக அங்குச் சென்று எனது குடும்பத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்தவர்கள் செஞ்சிலுவைச் சங்கத் தன்னார்வப் பணியாளர்கள் என்று.
இலங்கையின் உள்நாட்டுப்போரின் போதும், அதற்குப் பின்னும் செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் ஆற்றிய மற்றும் ஆற்றிவரும் பணிகள் ஏராளம். 2012ம் ஆண்டில் இலங்கை டெங்கு காய்ச்சலால் கடுமையாய்த் தாக்கப்பட்டபோது 12 மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகளை இச்சங்கத்தினர் மேற்கொண்டனர். மேலும், சண்டைகள் இடம்பெறும் சிரியா, மத்திய ஆப்ரிக்கக் குடியரசு என பல நாடுகளில் இச்சங்கத்தினர் துன்புறும் மனிதர்க்குப் பாகுபாடின்றி மனிதாபிமானப் பணிகளைச் செய்து வருகின்றனர்.
மனிதாபிமானம், பாரபட்சமின்மை, நடுநிலமை, சுதந்திரம், தொண்டுபுரிதல், ஒற்றுமை, பரந்த மனப்பான்மை ஆகிய கொள்கைகளுடன் செயல்பட்டு வரும் IFRC என்ற அனைத்துலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கங்களின் கூட்டமைப்பு, முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின்போது ஆற்றிய மனிதாபிமானப் பணிகளுக்காக, 1917, 1944 ஆகிய ஆண்டுகளில் நொபெல் அமைதி விருதைப் பெற்றது. பின்னர் இந்தக் அனைத்துலக கூட்டமைப்பு தொடங்கப்பட்டதன் நூறாம் ஆண்டை முன்னிட்டு 1963ம் ஆண்டில் மூன்றாவது முறையாக நொபெல் அமைதி விருதைப் பெற்றது. 1913ம் ஆண்டுக்குப் பின்னர் 1917ம் ஆண்டில்தான் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. முதல் உலகப் போர் நடந்த 1914, 1915, மற்றும் 1916ம் ஆண்டுகளில் இவ்விருது யாருக்கும் வழங்கப்படவில்லை. இந்த விருதுகளின் நிதி இவ்விருதுக்கான சிறப்பு சேமிப்புக்குச் சென்றது. முதல் உலகப் போரின் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட போர்க் கைதிகள் விடுதலைச் செய்யப்பட்டு தாய்நாடுகளுக்குத் திரும்புவதற்கு இச்சங்கம் உதவியது. அப்போரின்போது இரண்டு கோடிக் கடிதங்களையும் செய்திகளையும், பத்தொன்பது இலட்சம் பாக்கெட்டுகளையும், பரிமாறியதுடன், ஒரு கோடியே எண்பது இலட்சம் சுவிஸ் பிராங்க் பண உதவியையும் போர்க் கைதிகளுக்குக் கொடுத்து உதவியது இவ்வமைப்பு.
IFRC கூட்டமைப்பு, மனிதாபிமானக் கொள்கைகளையும், விழுமியங்களையும் ஊக்குவித்து, தேசியக் கழகங்களுக்கும், நிதி கிடைக்கும் இடங்களில் துயர்துடைப்புத் திட்டங்களுக்கும் ஆதரவு வழங்கி வருகிறது. உலகின் மிகப் பெரிய மனிதாபிமான அமைப்பான இக்கூட்டமைப்பு, 189 நாடுகளில் ஒரு இலட்சத்து அறுபதாயிரத்துக்கு மேற்பட்ட தேசியக் கழகங்களில் ஏறக்குறைய 16 கோடி தன்னார்வப் பணியாளர்களைக் கொண்டுள்ளது. இவர்களில் 4,15,000த்துக்கு மேற்பட்டோர் ஊதியம் பெறுகின்றனர். இதன் தேசியக் கழகங்களில் 3 கோடியே 39 இலட்சம் பேர் இரத்த தானம் செய்துள்ளனர். 2012ம் ஆண்டில் மட்டும் 11 கோடியே 54 இலட்சம் பேர் பேரிடர் நிவாரண உதவிகளைப் பெற்றுள்ளனர். இவ்வாறு இச்சங்கத்தின் பணிகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
முதல் நொபெல் அமைதி விருதை 1901ம் ஆண்டில் பெற்றவர் சுவிட்சர்லாந்து நாட்டுத் தொழிலதிபர் ஹென்றி டுனான்ட். 1859ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி வட இத்தாலியின் சொல்ஃபெரினோ என்ற கிராமத்துக்கு வெளியே சர்தீனியாவுக்கும், ஆஸ்ட்ரியா-ஹங்கேரி கூட்டமைப்புக்கும் இடையே 16 மணிநேரம் தொடர்ந்து இடம்பெற்ற போரில் நாற்பதாயிரம் படை வீரர்கள் போர்க்களத்தில் குற்றுயிராய்க் கவனிப்பாரற்றுக் கிடந்தனர். அச்சமயம் தனது சொந்த வணிகம் தொடர்பாக அங்குச் சென்றிருந்த டுனான்ட், தான் வந்த காரணத்தை மறந்து இந்த வீரர்களை மருத்துவமனையில் சேர்த்து, அவர்களுக்குத் தேவையான பிற உதவிகளையும் செய்தார். அந்த ஊரிலிருந்த பெண்களைக் கூட்டிச் சேர்த்து அனைவரும் நம் சகோதரர்கள் என்று சொல்லி பாரபட்சமின்றி எல்லா வீரர்களுக்கும் உதவி செய்யச் செய்தார். பின்னர் சுவிட்சர்லாந்து திரும்பி டுனான்ட் தொடங்கிய மனிதாபிமான அமைப்பே செஞ்சிலுவை சங்கமாகும். பின்னர் அது எல்லா நாடுகளிலும் கிளைகளை அமைத்து அனைத்துலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறைத் சங்கமானது. 1990ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியன்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, செஞ்சிலுவைச் சங்கத்தை அதன் துணைக்குழுக் கூட்டங்களுக்கு பிரதிநிதியாகச் செயல்பட அனுமதித்தது. இவ்வாறு வெளி அமைப்பு ஒன்றை ஐ.நா.பொது அவை அனுமதித்தது இதுவே முதல் முறையாகும்.
தேசிய செஞ்சிலுவைச் சங்கங்கள், அந்தந்த நாடுகளில் இயற்கைப் பேரிடர்கள் காலத்தில் இடர்துடைப்புப் பணிகளைச் செய்து வருகிறது. நோய் பரவும் காலத்தில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. போர்க் காலங்களில் காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்வதுடன், போர்க் கைதிகளைப் பார்வையிட்டு அவர்களின் விடுதலைக்காக உழைக்கிறது. முக்கிய அனைத்துலக தினங்களில் அறிக்கைகளை வெளியிட்டு மக்களின் நல்வாழ்வுக்காகக் குரல் கொடுக்கிறது. ஏப்ரல் 7, கடந்த திங்களன்று கடைப்பிடிக்கப்பட்ட அனைத்துலக நலவாழ்வு தினத்துக்கும், அன்றைய நாளில் நினைவுகூரப்பட்ட ருவாண்டா இனப்படுகொலைகளின் இருபதாம் ஆண்டு தினத்துக்குமென அறிக்கைகளை வெளியிட்டது இச்செஞ்சிலுவை சங்கம். 2013ம் ஆண்டில் தன்னார்வ மருத்துவர்கள் 1800க்கு மேற்பட்ட வன்முறைத் தாக்குதல்களை எதிர்கொண்டனர். 2012க்கும் 2013க்கும் இடைப்பட்ட காலத்தில் 23 நாடுகளில் நோயாளிகள், மருத்துவர்கள், மருத்துவ வாகனங்கள், மருத்துவ வசதிகள் ஆகியவை 1809 வன்முறைத் தாக்குதல்களை எதிர்கொண்டன.
இவ்வாறு அறிக்கைகளை வெளியிட்டு உலகினரின் விழிப்புணர்வைத் தூண்டி வருகிறது அனைத்துலக செஞ்சிலுவை சங்கம். நீங்கள் உங்கள் வாழ்வை வழங்காவிட்டாலும், ஒரு வாழ்வைக் காப்பாற்ற முடியும் என்கிறது இந்தத் தன்னார்வ மனிதாபிமான அமைப்பு. தன்னார்வ மனிதாபிமானப் பணிகளுக்கு நம்மை அர்ப்பணிக்க முன்வருவோம்.








All the contents on this site are copyrighted ©.