2014-04-08 15:23:39

திருத்தந்தை பிரான்சிஸ், ஜோர்டன் அரசர் சந்திப்பு


ஏப்.08,2014. புனிதபூமிக்குத் திருப்பயணம் மேற்கொள்வதற்கு இன்னும் ஏழு வாரங்களே உள்ள நிலையில், ஜோர்டன் அரசர் 2ம் அப்துல்லா, இளவரசர் Ghazi bin Muhammad bin Talal ஆகிய இருவரையும் இத்திங்கள் மாலை வத்திக்கான் புனித மார்த்தா இல்லத்தில் வரவேற்று அவர்களுடன் தேனீர் அருந்தி உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
45 நிமிடங்கள் நடந்த இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புனித பூமித் திருப்பபயணம் பற்றிய கலந்துரையாடல் இச்சந்திப்பில் இடம்பெற்றதாக அறிவித்தார்.
வருகிற மே 24ம் தேதி ஜோர்டன் தலைநகர் அம்மான் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு முதலில் ஜோர்டன் அரசர் மாளிகையில் வரவேற்பு வழங்கப்படும். பின்னர் அந்நகர் விளையாட்டு அரங்கத்தில் திருப்பலி நிகழ்த்துவார் திருத்தந்தை. மேலும், அந்நாளில், இயேசு திருமுழுக்குப் பெற்ற ஜோர்டன் ஆற்றுப் பக்கம், புலம்பெயர்ந்தோர் மற்றும் இளம் மாற்றுத் திறனாளிகளைச் சந்திப்பார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜோர்டன் இளவரசர் முகமது, சமய மற்றும் கலாச்சார விவகாரங்களில் அரசருக்கு ஆலோசகராகப் பணியாற்றுவதோடு, பல்சமய உரையாடலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தியானிக்கின்ற மனநிலையை நாம் மீண்டும் கண்டுணர வேண்டும், அதன்மூலம் இறையன்பு நம் இதயங்களை வெப்பமூட்டும் என, இச்செவ்வாய் தனது டுவிட்டர் செய்தியில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.