2014-04-07 16:23:00

வாரம் ஓர் அலசல் – ஒரு நல்ல மனிதரின் பன்முகங்கள்(திருத்தந்தை 23ம் ஜான்)


ஏப்.07,201 RealAudioMP3 4. அது 1958ம் ஆண்டு. அதிகபட்ச பாதுகாப்புடன் இருந்த சமயத் தலைவர் ஒருவர், அவ்வாண்டில் ஒருநாள், அந்த மாநகரின் மத்திய சிறைச்சாலைக்கு, குறுகிய கால முன்னறிவிப்புடன், கைதிகளைப் பார்வையிடச் சென்றார். அச்சிறைச்சாலையின் இருண்ட, பழைய வராந்தா வழியாக நடந்துகொண்டிருந்தபோது, கடும் வன்முறைக் குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்த இடத்துக்கு வந்தார் அவர். கைதிகள் இன்னும் கம்பிகளுக்குள்தான் இருக்கிறார்கள் என்பதை அறிந்து, கதவுகளைத் திறந்து விடுங்கள், அவர்களை என்னிடமிருந்து தடை செய்யாதீர்கள், அவர்கள் அனைவரும் நம் ஆண்டவரின் குழந்தைகள்.... என, எவ்வளவு சப்தமாகச் சொல்ல முடியுமோ அவ்வளவு சப்தமாகச் சொன்னார் அவர். இவர்கள் அனைவரும் அறைகளைவிட்டு வெளியே வந்தால்தான் சிறை வளாகத்தில் உரையாற்ற முடியும் என்றும் அவர் சொன்னார். இப்படிச் சொன்னவர்தான் முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான். வருகிற 27ம் தேதி புனிதர் என அறிவிக்கப்பட இருக்கும் இவர் 1958ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி திருஅவையின் 261வது திருத்தந்தையாகப் பணியேற்றார். அதே ஆண்டு டிசம்பர் 26ம் தேதியன்று, உரோம் நகரின் மிகப் பழமையான(1654) விண்ணரசி மத்திய சிறைக்குச் சென்று ஏறக்குறைய ஆயிரம் கைதிகளுக்கு உரையாற்றினார். RealAudioMP3
என் அன்பு மகன்களே, சகோதரர்களே, நீங்கள் என்னிடம் வர முடியாது, அதனால் நான் உங்களிடம் வந்துள்ளேன். உரிய அனுமதியின்றி வேட்டையாடியதற்காக எனது சகோதரர் ஒருவரும் ஒருசமயம் சிறையில் இருந்தார், பசியால் வாடிய எங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு அவர் சட்டத்தை மீற வேண்டியிருந்தது...என்று சொன்னார் திருத்தந்தை 23ம் ஜான். அவர் உரையாற்றி முடித்தபின்னர், அச்சிறையில் அதிக காலம் தண்டனை அனுபவித்த ஒரு வயதான கைதி திருத்தந்தையிடம் சென்று முழந்தாளிட்டு, திருத்தந்தையே, நான் நிறையத் தவறுகள் செய்திருக்கிறேன் என்று சொல்லி அழுதார். அக்கைதியின் கண்ணீரைத் துடைத்து அவரை அன்போடு தூக்கிவிட்டு, அணைத்து முத்தமிட்டார் திருத்தந்தை. பின்னர் பேசினார் திருத்தந்தை... நான் வந்திருக்கிறேன், நீங்கள் என்னைப் பார்க்கிறீர்கள், நான் உங்கள் கண்களுக்குள் உங்களைப் பார்க்கிறேன், எனது இதயத்தை உங்கள் இதயங்களோடு வைத்துள்ளேன்... என்று கூறினார் திருத்தந்தை 23ம் ஜான். RealAudioMP3 இவர் திருஅவையை தலைமையேற்று நடத்தியது ஐந்து ஆண்டுகள்தான் எனினும், குறுகிய காலத்தில் கத்தோலிக்கர் மற்றும் கத்தோலிக்கரல்லாதவர் அனைவரையும் கவர்ந்திருப்பவர். நல்ல திருத்தந்தை 23ம் ஜான்
என அழைக்கப்படும் திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், ஐந்து ஆண்டுகளில் ஆற்றியுள்ள பணிகளை விவரிக்க முற்பட்டால் ஆழ்கடல் சென்று அபூர்வ முத்துக்களை முகழ்ந்தெடுத்த மகிழ்ச்சி கிடைக்கும். 98 வயது கர்தினால் லோரிஸ் காப்போவில்லா அவர்கள், “திருத்தந்தை 23ம் ஜான் அவர்களின் இதயமும் மனதும்”(The Heart and Mind of John XXIII)என்ற நூலிலும், எண்ணற்ற கட்டுரைகளிலும் பகிர்ந்து கொண்டுள்ளதைத் தெரிந்துகொண்டாலே இந்த மகிழ்ச்சி நமக்கு இரட்டிப்பாகிவிடும். கர்தினால் ஆஞ்சலோ ஜூசப்பே ரொன்காலி அவர்கள், வெனிஸ் நகர் முதுபெரும் தந்தைப் பொறுப்பேற்றதிலிருந்து, திருத்தந்தையாகப் பணியாற்றி இறக்கும்வரை அவரின் செயலராக இருந்தவர் கர்தினால் லோரிஸ் காப்போவில்லா. கர்தினால் ஆஞ்சலோ ரொன்காலி அவர்கள்தான் பின்னாளைய திருத்தந்தை 23ம் ஜான்.
திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் 1958ம் ஆண்டில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாள்களிலேயே வரலாற்று சிறப்புமிக்க இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தைக் கூட்ட வேண்டுமென்ற எண்ணம் அவரில் உருவாகியது. திருவழிபாடு, தூதரகப்பணி, கல்வி, குருக்களின் நடத்தைகள் உட்பட பல துறைகளில் திருஅவை எதிர்நோக்கிய கோட்பாட்டுச் சவால்கள் மட்டுமல்ல, மேய்ப்புப்பணி சார்ந்த சவால்களையும் பெரிய பட்டியலாக, கர்தினால்களும் ஆயர்களும் திருத்தந்தையிடம் சமர்ப்பித்தனர். அதற்கு அவர் தனது செயலரிடம், பிரச்சனைகள், கேள்விகள், வேண்டுகோள்கள், நம்பிக்கைகள் ஆகியவை எனது மேஜையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன, இதற்கு உண்மையிலேயே தேவைப்படுவது பொதுச்சங்கம்" என்று சொன்னார். இப்படி ஒரு தடவைக்குமேல் திருத்தந்தை சொன்னபோது, அவரின் செயலர் பதில் ஏதும் சொல்லாமல் மௌனமாக இருந்ததால் அவர் மீண்டும் கூறினாராம்... "எனக்கு வயதாகி விட்டது என நீர் நினைக்கின்றார். ஏனெனில் திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், திருஅவையின் தலைமைப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவருக்கு வயது 76. இந்த மாபெரும் பணியினால் நான் குழப்பி விடுவேன், எனக்கு நேரமில்லை என நினைக்கின்றீர்...., ஆனால், இப்படி நினைப்பது விசுவாசத்தோடு ஒத்துப்போகாது, அதேபோல், 1962ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி 2ம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைக் கூட்டி வரலாறு படைத்த திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், 1965ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி அச்சங்கம் நிறைவுற்றபோது அவர் விண்ணில் இருந்தார். 1963ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி அவர் இறந்ததை அறிவித்த திருப்பீட பத்திரிகை அலுவலகம், இனி அவர் துன்பப்படமாட்டார் என்று கூறியது. புற்றுநோயால் துன்புற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், 1963ம் ஆண்டு மே 23ம் தேதி தனது அறையின் ஜன்னல் வழியாக, வத்திக்கான் பேதுரு வளாகத்தில் இருந்த மக்களிடம் கடைசியாகப் பேசினார்.
எனது பயணப் பைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுவிட்டன. நான் செல்வதற்கு, தயாராக, மிகவும் தயாராகவுள்ளேன் என்று கூறினார். அதேநாளில் தனது மூத்த சகோதரர் சவேரியோவுக்கு எழுதிய கடிதத்தில், எனது 80 வருட வாழ்வு எனக்கும், உமக்கும் சொல்வது இதுதான். திடீர் எனப் புறப்படுவதற்கு நாம் நன்கு தயாராக இருக்க வேண்டும். அனைத்தையும் பார்த்து எல்லாருக்கும் வாய்ப்பு வழங்கும் ஆண்டவரின் நன்மைத்தனத்தில் நம்பிக்கை வைத்து நித்திய வாழ்வுக்குத் தயாராக வேண்டும் என்று எழுதினார் நல்ல திருத்தந்தை 23ம் ஜான். 1963ம் ஆண்டில் பொதுச்சங்கத்தைக் கூட்டுவது கடினம் என ஒருவர் சொல்ல, அப்படியானால்,1962ம் ஆண்டில் கூட்டுவோம் எனச் சொல்லித் துணிச்சலுடன் அதனைத் தொடங்கியவர் திருத்தந்தை 23ம் ஜான். அப்பொதுச்சங்கம் தொடங்கிய முதல் நாள் இரவு வத்திக்கான் பேதுரு வளாகத்தில் பெருந்திரளான மக்கள் மெழுகுதிரிகளை ஏந்திச் செபித்துக் கொண்டிருந்தனர். அன்றையப் பணியால் மிகவும் களைப்படைந்திருந்தாலும், அம்மக்களிடம் தனது அறையின் ஜன்னல் வழியாகப் பேசிய திருத்தந்தை, "இப்பொழுது உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லுங்கள், இது திருத்தந்தை ஜான் அவர்களின் முத்தம் எனச் சொல்லி, உங்கள் பிள்ளைகளுக்கு முத்தம் கொடுங்கள்" எனச் சொல்லி அனைவரையும் ஆசீர்வதித்தார். ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் அதிகம் வாழுகின்ற நாடுகளில் திருப்பீடத் தூதராகப் பணியாற்றி அனைவரிடமிருந்து நற்பெயரைப் பெற்றிருந்த இவர், திருஅவையின் உலகளாவிய தன்மையையும் பண்புகளையும் நன்றாக உணர்ந்திருந்தார். அமெரிக்க ஐக்கிய நாட்டின் பன்மைத்தன்மையை பெரிதும் வியந்த இவருக்கு, அந்நாட்டில் செயல்படும் ஐக்கிய நாடுகள் நிறுவனம் 2ம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைக் கூட்டுவதற்குத் தூண்டுதலாக இருந்துள்ளது. புகழ்பெற்ற Trappist துறவு சபை கவிஞர் தாமஸ் மெர்ட்டன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அப்பொதுச்சங்கத்தில் கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூறைப் புகுத்தினார். இப்பொதுச்சங்கமே, பிரிந்த கிறிஸ்தவ சபை பிரதிநிதிகளை முதன்முதலாகக் கொண்டிருந்தது.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் நடைபெற்றுவந்த காலத்தில், அமெரிக்காவும் இரஷ்யாவும் மூன்றாம் உலகப் போரைத் துவக்கும் அளவுக்கு உருவான 'கியூபா ஏவுகணை நெருக்கடி' (Cuban Missile Crisis) என்ற சூழல் உருவாகியிருந்தது. திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் 'Pacem in Terris', அதாவது, 'உலகில் அமைதி' என்ற திருமடலை 1963ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதியன்று வெளியிட்டார். பொதுவாக, திருத்தந்தையர் எழுதும் திருமடல்கள் “கத்தோலிக்கருக்கு” என்று மட்டும் இருக்கும். ஆனால், இத்திருமடல், கத்தோலிக்கர்களுக்கு மட்டுமல்லாமல், உலகில் நல்மனம் கொண்ட அனைவருக்காகவும் எழுதிய திருமடலாக அமைந்து, திருஅவை வரலாற்றில் தனியிடம் பெற்றுள்ளது. இதுவே அவர் வெளியிட்ட இறுதித் திருமடல். இறைவனால் வகுக்கப்பட்ட சமூக நியதி முழுமையாய்க் கடைப்பிடிக்கப்பட்டால் மட்டுமே உலகில் அமைதி கிட்டும் என்பதை அவர் அம்மடலில் வலியுறுத்தியிருந்தார்.
இக்கால நவீன ஊடகங்கள் இல்லாத அக்காலத்தில் திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், பொது மக்களோடு கொண்டிருந்த தொடர்புகள் திருத்தந்தையர் மரபுகளை உடைத்துவிட்டன. அவர் திருத்தந்தை பணியேற்ற புதிதில், தனது வாகன ஓட்டுனரிடம், வத்திக்கான் தோட்டத்தையே எட்டு நாள்களாக பார்த்து வருகிறோம், என்னை வெளியே அழைத்துச் செல் என்று சொல்லி உரோம் நகருக்குள் சென்றார். தனது குடும்பத்தின் ஏழ்மையை நன்கு உணர்ந்திருந்த இத்திருத்தந்தையிடம், பொதுச்சங்கம் முடிந்து என்ன செய்வீர்கள் எனக் கேட்டதற்கு, ஒரு நாள் முழுவதும் எனது சகோதரர்களோடு வயலில் வேலை செய்வேன் எனச் சொன்ன எளிய மனம் படைத்தவர் இவர்.
திருத்தந்தை 23ம் ஜான் அவர்களின் பட்லர் Guido Gusso அவர்கள், திருத்தந்தை பேசும்போதெல்லாம் முழங்காலில் இருந்து அவரது அறிவுரைகளைக் கேட்பதைப் பார்த்தார் திருத்தந்தை. இதற்கு என்ன காரணம் எனக் கேட்டபோது, திருத்தந்தையர்களிடம் முழங்காலிலிருந்துகொண்டு கேட்பதுதான் மரபு என்று பதில் சொன்னார். அதற்கு திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், Gussoவிடம், நீர் கோவிலுக்குச் செல்லும்போது எத்தனைமுறை முழந்தாலிட்டாலும் பரவாயில்லை, ஆனால் வேலையின்போது அப்படிச் செய்யக்கூடாது என்று சொன்னார்.
திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, நானே இதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ளவர் என்பதை என்னிடமிருந்து கற்றுக்கொள் என்ற இயேசுவின் எச்சரிக்கையை நினவுகூர்ந்ததாக அவரே சொல்லியுள்ளார். இப்புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் சொன்ன சில அறிவுரைகளை நினைவுபடுத்துவோம்.


நல்ல திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள்போல் எப்படி வாழ்வது?
இறைநம்பிக்கையோடு வாழ்தல், எல்லா நேரங்களிலும் மகிழ்வாய் இருத்தல், தனக்காகப் பிறரைச் செபிக்கக் கேட்டல், சுயக் கட்டுப்பாட்டில் வளர்தல், தூய மனிதர்களின் வாழ்க்கை வரலாறை வாசித்தல், போதிப்பதை நடைமுறைப்படுத்துதல், கனிவாக இருத்தல், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாய் வாழ்தல்.....
நல்ல திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள்போல் வாழ முயற்சிப்போம்.







All the contents on this site are copyrighted ©.