2014-04-07 17:17:56

திருத்தந்தை பிரான்சிஸ் - என்ன பாவம் செய்தாய் என்று இறைவன் நம்மிடம் துருவித் துருவிக் கேட்பதில்லை


ஏப்.07,2014. இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது, பாவிகளுக்குத் தண்டனை தீர்ப்பு வழங்கவில்லை, மாறாக, இரக்கத்துடன் அவர்களை மன்னித்து, அமைதியை அளித்தார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கியத் திருத்தந்தை, கடவுளின் மன்னிப்பே நம் பாவங்களை இல்லாததாக்குகிறது, இரக்கத்தின் வழியே அவர் நம்மை மன்னிக்கிறார் என்று கூறினார்.
மன்னிக்கும் அவரது இரக்கத்தினால் முடக்குவாதமுற்றவரிடம், "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன, நீ அமைதியாகப் போ' என்று கூறிய இயேசு, விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணிடம் பேசும்போது, 'இனி பாவம் செய்யாதே' என்று கூறுவதையும் நாம் காண்கிறோம் என்று இன்றைய நற்செய்தியை ஒட்டியச் சிந்தனைகளைப் பகிர்ந்தார் திருத்தந்தை.
என்ன பாவம் செய்தாய், யாருடன் செய்தாய் என்றெல்லாம் இறைவன் நம்மிடம் துருவித் துருவிக் கேட்பதில்லை, அவர் மன்னிப்பும், இரக்கமும் நிறைந்தவர் என்பதை நினைவில் கொண்டு வாழ்வோம் என்று தன் மறையுரையில் மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.