2014-04-07 17:20:03

திருத்தந்தை, டான்சானியா ஆயர்களிடம் வேண்டுகோள் - நற்செய்தியின் சாரம் ஆழமாக வேரூன்ற ஒவ்வொருவரும் உழைக்கவேண்டும்


ஏப்.07,2014. டான்சானியா நாட்டில் நற்செய்தியை முதன்முதலில் அறிவித்த மறைபோதகர்களின் அதே ஆர்வத்துடன் இப்போதும் நற்செய்திப் பணி தொடரப்படவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டான்சானியா ஆயர்களிடம் கூறினார்.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை, பல்வேறு நாட்டு ஆயர்கள், புனித பேதுருவின் கல்லறையைத் தரிசித்து, திருத்தந்தையைச் சந்திக்கும் 'அத் லிமினா' சந்திப்பையொட்டி, உரோம் நகர் வந்திருந்த டான்சானியா ஆயர்களை, இத்திங்கள் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.
டான்சானியா நாட்டில் நற்செய்தியை முதன்முதலில் அறிவித்த பணியாளர்களின் தியாக வாழ்வைப் பின்பற்றி, சமுதாயத்தில் நற்செய்தியின் சாரம் ஆழமாக வேரூன்ற ஒவ்வொருவரும் உழைக்கவேண்டும் என்று அழைப்புவிடுத்தத் திருத்தந்தை, அந்நாட்டில் கத்தோலிக்க நலப்பணியாளர்கள் AIDS நோயுற்றோரிடையே ஆற்றும் பணிகளை வெகுவாகப் பாராட்டியதுடன், தலத்திருஅவை ஆற்றிவரும் கல்விப்பணியையும் பாராட்டிப் பேசினார்.
2012ம் ஆண்டில், டான்சானியாவில் நடைபெற்ற தேசிய நற்கருணை மாநாடு, மற்றும் நம்பிக்கை ஆண்டின் இறுதியில் அந்நாட்டில் நடத்தப்பட்ட மாபெரும் கருத்தரங்கு ஆகிய இரு நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டிப் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய நிகழ்வுகள் மக்களின் நம்பிக்கையை ஆழப்படுத்த பெரிய அளவில் உதவுகின்றன என்று டான்சானியா ஆயர்களிடம் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.