2014-04-07 17:27:38

கையடக்க விவிலியப் பிரதிகளை இலவசமாக வழங்கினார் திருத்தந்தை


ஏப்ரல் 07,2014. ஒவ்வொருவர் வாழ்விலும் விவிலியம் வாசிப்பதன் முக்கியத்துவம் குறித்து கடந்த பல நாட்களாக வலியுறுத்திவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று மூவேளை செப உரையைக் கேட்க கூடியிருந்த மக்களுக்கு கையடக்க விவிலியப் பிரதிகளை இலவசமாக வழங்கினார்.
வத்திக்கான் அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு, தூய பேதுரு வளாகத்தில் துறவுசபை சகோதரர்களாலும் அருட்கன்னியர்களாலும் இலவசமாக விநியோகிக்கப்பட்ட கையடக்க விவிலியப் பிரதிகள் பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், ‘இவ்விவிலியப் பிரதிகளை உங்களோடு எடுத்துச் செல்வதோடு, தினமும் வாசியுங்கள், ஏனெனில் இதன்வழி இயேசு உங்களுடன் பேசுகிறார்' என்றார்.
ஒவ்வொருவருக்கும் கையடக்க விவிலியப்பிரதியின் அவசியம் குறித்து நான் ஏற்கனவே கடந்த சில ஞாயிறுகளில் பேசியுள்ள நிலையில், இந்த தவக்காலத்தில் அதனை உங்களுக்குக் கொடையாக வழங்க ஆவல் கொள்கிறேன், இலவசமாக வழங்கப்படும் இப்பிரதிக்கு நீங்கள் ஏதாவது கைம்மாறு செய்யவேண்டுமென விரும்பினால், ஒப்புரவின் அடையாளமாக உங்கள் பகைவர்க்கு ஒரு செபத்தை ஒப்புக்கொடுங்கள் என்ற அழைப்பை முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில், ருவாண்டா நாட்டில் இனப்படுகொலைகள் இடம்பெற்றதன் 20ம் ஆண்டு நினைவு இத்திங்களன்று நிகழ்வதையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒப்புரவின் செயல்பாடுகள் தொடர்ந்து இடம்பெறட்டும் என அழைப்புவிடுத்தார்.
இத்தாலியின் L’Aquila நகரில் பலத்த சேதங்களுக்குக் காரணமான நில நடுக்கம் இடம்பெற்றதன் 5ம் ஆண்டு நினைவையும் எடுத்துரைத்து, அம்மக்களுக்காக செபிப்பதற்கும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.