2014-04-05 16:30:01

நாடோடி இனத்தவர், சிறுபான்மை இனக்குழுவாக அங்கீகரிக்கப்பட வேண்டும், திருப்பீட உயர் அதிகாரி


ஏப்.05,2014. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வாழ்கின்ற சிறுபான்மை இனங்களில், நாடோடி இனத்தவர், மிகப்பெரிய சிறுபான்மை இனமாக இருக்கும்வேளை, அவ்வினத்தவர் வாழும் நாடுகளில், குறைந்தபட்சம் சிறுபான்மை இனக் குழுக்களாக அங்கீகரிக்கப்படுவதற்கு அவர்கள் உரிமையைக் கொண்டுள்ளார்கள் என, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
நாடோடி இனத்தவர்க்கான அனைத்துலக கத்தோலிக்கக் குழு நடத்திய கூட்டத்துக்குச் செய்தி அனுப்பிய, திருப்பீட குடியேற்றதாரர் அவைத் தலைவர் கர்தினால் அந்தோணியோ மரிய வேலியோ அவர்கள், ரோமா மக்கள் எனவும் அழைக்கப்படும் இந்த இனத்தவர் தாங்கள் மனிதக் குடும்பத்தின் உறுப்பினர்கள் என்று உணரும் வகையில் அவர்கள் வாழும் சமுதாயம் அமைய உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
ஒரே கண்டத்தில், ஒரே நாட்டில், ஒரே நகரில் வாழும் மக்களைப் பிரிக்கின்ற சுவர்கள் தொடர்ந்து கட்டப்பட்டு வருகின்றன என்றும், இந்தச் சுவர்களை இடித்து அழிப்பதற்கான கூறுகள், ஒவ்வொருவரின் இதயத்திலிருந்து தொடங்கப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார் கர்தினால் வேலியோ.
சமுதாயத்தில் யாரும் ஒதுக்கப்படாமல், மற்றவர்களை ஏற்கும் இதயங்கள் தேவை என்றும் கர்தினாலின் செய்தி கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.