2014-04-05 16:29:52

இளையோரிடம் திருத்தந்தை : உங்கள் இதயத்துக்கு விருப்பமானது எது எனக் கண்டறியுங்கள், நேர்மையாக வாழுங்கள்


ஏப்.05,2014. ஒவ்வொருவரும் தனக்குத்தானேயும், பிறருடனும் நேர்மையாக வாழுமாறும், தங்கள் இதயத்துக்கு விருப்பமானது எது எனக் கண்டறியும்படியும் பெல்ஜிய நாட்டு இளையோரிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பெல்ஜிய கத்தோலிக்க இளையோர் பணிக்குழுவின் வேண்டுகோளின்பேரில் வத்திக்கான் அப்போஸ்தலிக்க மாளிகையில் பெல்ஜிய இளையோருடன் நடந்த நேர்காணல் நிகழ்ச்சியில், இளையோரின் கேள்விகளுக்குப் பதில் அளித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பணமும் பெருமையுமா? அல்லது நன்மை செய்யும் ஆவலா? எது உங்கள் இதயத்தை நிறைத்துள்ளது என்று இளையோரிடம் கேட்ட திருத்தந்தை, மனித சமுதாயம் மட்டுமே ஒரே கிணற்றில் இருமுறை விழுகின்றது எனச் சொல்லப்படுவதுபோல, தானும் தனது வாழ்வில் நிறையத் தவறுகளைச் செய்ததாகவும், தனது தவறுகளிலிருந்து தான் நிறையக் கற்றுக்கொண்டதாகவும் கூறினார்.
ஏழ்மை, ஏழைகள் பற்றித் தான் அதிகம் பேசுவதால் தன்னை ஒரு கம்யுனிசவாதி என சில மாதங்களுக்கு முன்னர் ஒருவர் சொன்னதைக் கேட்டேன், ஆனால், இயேசுவின் நற்செய்தியில் ஏழைகள் மைய இடத்தைக் கொண்டிருக்கின்றனர் என்றும் திருத்தந்தை தெரிவித்தார்.
தவறுகள் வாழ்வில் பெரும் ஆசிரியர்கள் என்று சொல்வார்கள், ஆனால், சில தவறுகளிலிருந்து தான் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், அக அமைதி பற்றிப் பேசியபோது தான் உள்ளத்தில் அமைதியாக வாழ்வதாகவும் கூறினார்.
நான் ஏதாவது ஒன்றைப் பற்றிக் கவலைப்படுகிறேன் என்றால் அது தன்னைப் பற்றியே என்றும் திருத்தந்தை கூறினார்.
கடந்த மார்ச் 31ம் தேதி, பெல்ஜியத்தின் கென்ட் ஆயர் Lucas Van Looy அவர்களின் தலைமையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் நேர்காணல் எடுக்க வந்த இளையோர் குழுவுக்கு முதலில் 20 நிமிடங்களே ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இதைவிட இருமடங்கு நேரத்துக்கு அதிகமாகவே இளையோரின் கேள்விகளுக்குப் பதில் சொன்னார். இந்த நேர்காணல் பெல்ஜியத் தொலைக்காட்சியில் ஏப்ரல் 3, இவ்வியாழனன்று ஒளிபரப்பானது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.