2014-04-04 16:00:01

கிழக்கத்திய கிறிஸ்தவர்களின் எதிர்காலம் நிச்சயமற்றது, கல்தேய முதுபெரும் தந்தை


ஏப்.04,2014. ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் நடந்துவரும் போர்கள் அப்பாவி மக்களுக்கு, குறிப்பாக, சிறுபான்மை குழுக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்று, கல்தேய வழிபாட்டுமுறையின் கத்தோலிக்க முதுபெரும் தந்தை லூயிஸ் சாக்கோ இரபேல் அவர்கள் தெரிவித்தார்.
பிரான்சின் லியோன் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் கிழக்கத்திய கிறிஸ்தவர்களின் அழைப்பு என்ற தலைப்பில் நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராய்க் கருதப்படக் கூடாது, மாறாக, அவர்கள் மதிக்கப்படும் குடிமக்களாகக் கருதப்பட வேண்டுமெனக் கூறினார்.
மேற்கத்திய கொள்கைகள் தோல்வியடைந்துள்ள நிலையில், அரபு வசந்தம் என்ற எழுச்சியோடு வளர்ந்துள்ள அடிப்படைவாதம், பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது என்றும் கருத்து தெரிவித்தார் முதுபெரும் தந்தை சாக்கோ.
முஸ்லிம் அதிகாரிகள், அரபு நாடுகளில் உரிமைகளயும் சமய சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டிய கடமையைக் கொண்டிருக்கின்றனர் எனவும், இந்நாடுகளில் கிறிஸ்தவர்களின் இருப்பு, முஸ்லிம்களுக்கு மிகவும் இன்றியமையாதது எனவும் கூறினார் முதுபெரும் தந்தை சாக்கோ.
கிறிஸ்தவர்களுக்குச் சம உரிமை வழங்குமாறு முஸ்லிம் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ள முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், கிறிஸ்தவர்கள் தங்களின் பூர்வீக இடங்களிலிருந்து வெளியேற வேண்டாமென உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.