2014-04-04 15:59:33

ஏப்ரல் 6 ஞாயிறன்று திருத்தந்தையின் புதிய பரிசு


ஏப்.04,2014. கையடக்க நற்செய்திப் பிரதிகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதிய பரிசாக, ஏப்ரல் 6, வருகிற ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப் பின்னர் விசுவாசிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு விசுவாசியும், கையடக்க நற்செய்திப் பிரதி ஒன்றை எப்பொழுதும் தன்னோடு வைத்திருந்து, அடிக்கடி அதை வாசித்து இயேசுவின் செயல்களைத் தியானிக்குமாறு, ஞாயிறு மூவேளை செப உரைகள், இன்னும் பிற தருணங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். குறிப்பாக, ஒவ்வொரு நாளையத் திருவழிபாட்டு வாசகத்தை வாசித்து தியானிக்குமாறும் வலியுறுத்தி வருகிறார் திருத்தந்தை. மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், ஒவ்வொரு நாளும் திருப்பலியிலும் அன்றைய வாசகத்தை மையமாக வைத்து சிந்தனைகளை வழங்கி வருகிறார்.
இந்த தனது வேண்டுகோளை விசுவாசிகள் செயல்படுத்துவதற்கு உதவியாக, வருகிற ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு வளாகத்துக்கு வரும் விசுவாசிகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதிய பரிசாக, கையடக்க நற்செய்திப் பிரதிகள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, சில மாதங்களுக்கு முன்னர், எண்ணற்ற தன்னார்வத் தொண்டர்களின் உதவியுடன் “Misericordine” என்ற செபமாலை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், இயேசுவோடு நம் வாழ்வு முழுமையானதாக மாறுகிறது. அவரில் ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளதாகிறது என்று, தனது டுவிட்டர் செய்தியில் இவ்வெள்ளியன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.