2014-04-04 16:00:16

இப்பூமியின் தட்பவெப்பநிலையின் அச்சுறுத்தும் தாக்கங்களைத் தடுக்க அதிகமான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும், பான் கி மூன்


ஏப்.04,2014. வெப்பமண்டல நாடுகளிலிருந்து துருவப் பிரதேசங்கள்வரை, சிறிய தீவு களிலிருந்து பெரிய கண்டங்கள்வரை, ஏழை நாடுகளிலிருந்து செல்வந்த நாடுகள்வரை எல்லா இடங்களிலும், இப்பூமியின் தட்பவெப்பநிலையின் அச்சுறுத்தும் அடையாளங்கள் மிகத் தெளிவாகத் தெரிகின்றன எனக் கூறியுள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.
இப்பூமியின் தட்பவெப்பநிலையின் அச்சுறுத்தும் மாற்றங்கள், மனித சமுதாயத்தின் வருங்காலப் பாதுகாப்புக்கும், வளமைக்கும், வளர்ச்சிக்கும் பெரும் தடையாக இருப்பதால், ஐ.நா.வின் உறுப்பு நாடுகளும், உலக வணிக அமைப்புகளும், பொது மக்களும் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுள்ளார் பான் கி மூன்.
உலகை அச்சுறுத்தும் விவகாரங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் இவ்வாரத்தில் பிரசல்சில் கலந்துரையாடல்களை நடத்திவரும் பான் கி மூன் அவர்கள், சிரியா, மத்திய ஆப்ரிக்கக் குடியரசு மற்றும் பிரச்சனைகள் அதிகமுள்ள நாடுகளின் அரசியல் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள விவகாரங்கள் குறித்து கவனம் செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.
உலக அளவில் தட்ப வெப்பநிலை அதிகரிப்பதற்குக் காரணமாகியுள்ள வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு நாடுகள் வழங்கியுள்ள உறுதியை நினைவுபடுத்தியுள்ள ஐ.நா.பொதுச் செயலர், வருகிற செப்டம்பர் 23ம் தேதி நியுயார்க்கில் தட்ப வெப்பநிலை குறித்த மாநாடு ஒன்றை, தான் நடத்தவிருப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.