2014-04-03 17:28:22

திருத்தந்தை பிரான்சிஸ் - நாம் எழுப்பும் செபங்கள், இறைவனுடன் நாம் மேற்கொள்ளும் ஒரு போராட்டம்


ஏப்.03,2014. நாம் எழுப்பும் செபங்கள், இறைவனுடன் நாம் மேற்கொள்ளும் ஒரு போராட்டம் என்றும், இப்போராட்டத்தை உண்மையான உள்ளத்துடனும், உறுதியுடனும் நாம் மேற்கொள்ளவேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இவ்வியாழன் காலை புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலியாற்றியத் திருத்தந்தை, சீனாய் மலைமீது மோசேயுடன் இறைவன் மேற்கொண்ட உரையாடலை, தன் மறையுரையின் மையப்போருளாக்கினார்.
மோசேக்கும், இறைவனுக்கும் இடையே நிகழ்ந்த இந்த உரையாடலின் இறுதியில், இறைவன் தன் முடிவை மாற்றியதுபோல் தெரிந்தாலும், மாற்றங்கள் ஏற்பட்டது இறைவனிடம் அல்ல, மோசேயிடம்தான் என்று திருத்தந்தை விளக்கினார்.
இறைவன் தன் மக்களை அழித்துவிடுவார் என்று அஞ்சிய மோசே, இந்த உரையாடலின் இறுதியில் தன் எண்ணங்களில் மாறி, இறைவன் தன் மக்களைக் காப்பார் என்று நம்புகிறார் என்றுரைத்தார் திருத்தந்தை.
இறைவன் இரக்கமுள்ளவர் என்பதை, ஒரு தெளிவில்லாத, உறுதியற்ற வழியில் நம்பிவந்த மோசே, மலையிலிருந்து இறங்கிவரும்போது, முற்றிலும் மாறியிருந்தார்; அதாவது, இறைவனின் அன்புக்கும், இரக்கத்திற்கும் அளவே இல்லை என்ற உறுதி அவருக்குள் பிறந்ததென்று திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
மோசே இறைவனுடன் ஒரு நண்பரைப்போல், நேருக்கு நேர் பேசினார் என்று விவிலியம் சொல்வதைச் சுட்டிக்காட்டிப் பேசியத் திருத்தந்தை, இத்தகைய ஓர் உறவை நம் செபங்களில் வளர்க்க முயலவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், இவ்வியாழனன்று திருத்தந்தை தன் Twitter செய்தியில், "நம்மைச் சுற்றி நிலவும் வறுமையையும், அழிவையும் ஏற்று மனம் தளராமல், அவற்றைத் தீர்க்கும் வழிகளில் செயல்படுவதே கிறிஸ்தவர்களின் அழகு" என்று எழுதியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.