2014-04-03 17:34:38

Autism விழிப்புணர்வு நாளையொட்டி திருத்தந்தைக்கு "HugBike" பரிசு


ஏப்.03,2014. முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் புனிதராக உயர்த்தப்படவிருக்கும் விழாவை, நாம் ஆன்மீக வழிகளில் கொண்டாட முயல்வோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
ஏப்ரல் 2, இப்புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய புதன் மறையுரையின் இறுதியில், 2005ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி மறைந்த முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களைச் சிறப்பாக நினைவுகூர்ந்தோடு, அத்திருத்தந்தை நமக்கு வழங்கிச் சென்றுள்ள நம்பிக்கை என்ற கொடையை நமக்குள் புதுப்பிப்போம் என்று கூறினார்.
மறைந்த திருத்தந்தையின் 9ம் ஆண்டு நிறைவையொட்டி, போலந்து நாட்டிலிருந்து புனித பேதுரு பசிலிக்கா வளாகத்திற்கு வந்திருந்த திருப்பயணிகளைச் சிறப்பாக வாழ்த்திய திருத்தந்தை, கூடியிருந்த அனைவரையும் முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களின் பாதுகாவலில் ஒப்படைத்தார்.
மேலும், ஏப்ரல் 2 உலகெங்கும் கடைபிடிக்கப்படும் Autism என்ற மாற்றுத்திறன் குறித்த விழிப்புணர்வு நாளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு "HugBike" என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு சைக்கிள் வண்டி பரிசாக அளிக்கப்பட்டது.
இத்தாலியின் Treviso பகுதியில் அமைந்துள்ள Godega4Autism என்ற அமைப்பினரால் உருவாக்கப்பட்ட இந்தச் சிறப்பு சைக்கிள், முழுவதும் வெள்ளை வண்ணம் பூசப்பட்டு, திருத்தந்தைக்குப் பரிசாக அளிக்கப்பட்டது.
Autism கொண்ட குழந்தைகளுக்கெனப் பணியாற்றும் "Oltre il Labirinto Onlus" அதாவது, "சிக்கலான வழியைக் கடந்து" எனப்படும் அறக்கட்டளையினர் இந்தப் பரிசைத் திருத்தந்தைக்கு அளித்ததாக, அவ்வறக்கட்டளையின் தலைவர் Mario Pagnessi அவர்கள் வத்திக்கான் வானொலியிடம் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.