2014-04-02 15:50:48

வத்திக்கானில்2ம் ஜான்பால் - மனிதர், திருத்தந்தை, புனிதர் நூல் வெளியீடு


ஏப்.2,2014. இம்மாதம் ஏப்ரல் 27ம் தேதி புனிதராக உயர்த்தப்படவிருக்கும் முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களைப் பற்றிய நூல் ஒன்று ஏப்ரல் 1, இச்செவ்வாயன்று வத்திக்கானில் வெளியிடப்பட்டது.
“2ம் ஜான்பால் - மனிதர், திருத்தந்தை, புனிதர்” என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்நூலை, திருப்பீடக் காலாச்சார அவையின் தலைவர் கர்தினால் Gianfranco Ravasi அவர்கள் வெளியிட்டபோது, இந்நூலின் சிறப்பு அம்சங்களைக் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களின் வாழ்வில் தொடர்புகொண்ட பலர் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பாக, 235 பக்கங்கள் அடங்கிய இந்நூல் அமைந்துள்ளது.
20 மற்றும் 21 ஆகிய இரு நூற்றாண்டுகளுக்கு இடையே ஒரு பாலம்போல் அமைந்து, திருஅவையை வழிநடத்திய திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களின் வாழ்வுச் சரிதையாக அமையாமல், இந்நூல், அப்பெரும் மனிதரின் பல்வேறு பரிமாணங்களை விளக்கும் நூலாக அமைந்துள்ளது என்று கர்தினால் Ravasi அவர்கள் எடுத்துரைத்தார்.
கிறிஸ்து, மரியன்னை, துன்பம் என்ற மூன்று கோணங்களில் திருத்தந்தையின் வாழ்வை அலசும் பலரில், திருத்தந்தையின் துன்பம் மிகுந்த இறுதி ஆண்டுகளில் அவருடன் மிக நெருங்கிய வகையில் தொடர்புகொண்ட பேராயர் Piero Marini அவர்கள் திருத்தந்தை அடைந்த துன்பங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் என்று கர்தினால் Ravasi அவர்கள், சிறப்பான முறையில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.