2014-04-02 15:51:51

முத்திப்பெறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் மறைந்த 9ம் ஆண்டு நிறைவு நாளையொட்டி கர்தினால் Dziwisz பேட்டி


ஏப்.2,2014. இளையோர் மட்டில் தனிப்பட்ட அக்கறை கொண்டிருந்தவரும், வெகு விரைவில் புனிதராக உயர்த்தப்படவிருப்பவருமான முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களுக்கு, 2016ம் ஆண்டு போலந்து நாட்டில் நடைபெறவிருக்கும் அகில உலக இளையோர் நாள் அர்ப்பணிக்கப்படும் என்று அந்நாட்டின் கர்தினால் ஒருவர் கூறினார்.
2005ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி, இறை இரக்க ஞாயிறுக்கு முந்திய நாள் இறையடி சேர்ந்த முத்திப்பெறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் மறைந்த 9ம் ஆண்டு நிறைவு நாளையொட்டி, வத்திகான் நாளிதழ் L'Osservarore Romanoவுக்கு அளித்த பேட்டியில் Krakow பேராயர், கர்தினால் Stanislaw Dziwisz அவர்கள் இவ்வாறு கூறினார்.
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், Krakow பேராயராக பணியாற்றியபோதும், பின்னர் அவர் திருஅவைத் தலைவராகப் பணியேற்றபோதும் அவரது செயலாராகப் பணியாற்றிய கர்தினால் Dziwisz அவர்கள், தன் அனுபவங்களை இப்பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.
திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், இளையோர் நாளை உருவாக்கக் காரணமாக இருந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட கர்தினால் Dziwisz அவர்கள், இளையோரை இந்தப் புதிய நூற்றாண்டின் துவக்கத்தில் வழிநடத்த திருஅவைக்குக் கிடைத்த மாபெரும் கருவூலம் திருத்தந்தை 2ம் ஜான்பால் என்று சுட்டிக்காட்டினார்.
திருத்தந்தையின் இறுதி நாட்கள் துன்பத்தில் தோய்ந்திருந்தாலும், உயிர்ப்பிலும், இறை இரக்கத்திலும் அவர் முழு நம்பிக்கை கொண்டிருந்ததால், அவர் அடைந்த துன்பங்கள் பொருளுள்ளதாக ஒளிர்ந்தன என்று கர்தினால் Dziwisz அவர்கள், தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.