2014-04-02 15:54:15

பிலிப்பின்ஸ் நாட்டில் எளிய மக்களின் வாழ்வுத்தரம் ஒவ்வொரு நாளும் சீரழிந்து வருவது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதி - கர்தினால் தாக்லே


ஏப்.2,2014. பிலிப்பின்ஸ் நாட்டில் உருவாகியுள்ள பொருளாதார வளர்ச்சியில் எளிய மக்கள் பங்குபெறும் வாய்ப்பில்லை என்பது பெரும் அவமானம் என்று மணிலா பேராயர் கர்தினால் லூயில் அந்தோனியோ தாக்லே அவர்கள் கூறினார்.
Everyday Faith Live, அதாவது, உயிரோட்டமுள்ள ஒவ்வொருநாள் நம்பிக்கை என்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேட்டியளித்த கர்தினால் தாக்லே அவர்கள், நாட்டின் மேல்தட்டு மக்கள் மற்றும் செல்வந்தர்களின் வாழ்வுத்தரம் வெகுவாக உயர்ந்துவரும் வேளையில், எளிய மக்களின் வாழ்வுத்தரம் ஒவ்வொரு நாளும் சீரழிந்து வருவது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதி என்று கூறினார்.
நாட்டில் நிலவும் ஊழலையும், வறுமையையும் ஒழிப்பதாக வாக்களித்து மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சி நடத்தும் தற்போதைய அரசு, ஊழலையும் வறுமையையும் வளர்த்துள்ளதே தவிர அழிக்கவில்லை என்று கர்தினால் தாக்லே அவர்கள், புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டினார்.
உள்நாட்டு வளர்ச்சி என்ற அளவுக் குறியீட்டில், தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பிலிப்பின்ஸ் நாடு கடந்த ஆண்டு முதலிடம் பெற்றுள்ளது என்பதைச் சுட்டக்காட்டிய கர்தினால் தாக்லே அவர்கள், இந்த வளர்ச்சியால் பலனடைவது செல்வந்தர்கள் மட்டுமே என்பது வருத்தம் தரும் உண்மை என்று கூறினார்.

ஆதாரம் : AsiaNews/CBCP








All the contents on this site are copyrighted ©.