2014-04-02 15:19:05

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


ஏப்ரல்02,2014. ஏப்ரல் மாதம் துவங்கியவுடனேயே உரோம் நகருக்கு கோடைக்காலம் துவங்கிவிட்டதைப் போன்ற ஓர் உணர்வைத் தந்துகொண்டிருக்கின்றன சூரியனின் வெப்பமும் ஒளியும். வழக்கமாக இத்தாலிக்கு ஏப்ரல் மாதமும் குளிர்காலம் தான். ஆனால், இவ்வாண்டு மார்ச் மாத இறுதியிலேயே வெப்பம் உணரப்பட்டது, உலகம் வெப்பமாகி வருகிறது என்பதன் உண்மை வெளிப்பாடாக இருக்கிறது. கோடைக்காலம்போல் சூரியன் அதிக ஒளியைப் பரப்பிக்கொண்டிருக்க, தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு உள்ளூர் நேரம் 10.15 மணியளவில் தன் புதன் மறைபோதகத்தை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருமணம் எனும் அருளடையாளம் குறித்த இன்றைய மறைக்கல்விப் போதனையுடன், அருளடையாளங்கள் பற்றிய மறைபோதகத் தொடரை நிறைவு செய்வோம். திருமணம் எனும் அருளடையாளம், மனித குடும்பத்திற்கான இறைவனின் அன்புத் திட்டத்தின் மையத்திற்கு நம்மைக் கொணர்கிறது. ஆணும் பெண்ணுமாக நம்மை தன் சாயலில் படைத்த மூவொரு கடவுள், தன் அன்பெனும் மறையுண்மையை நாம் பிரதிபலிக்க வேண்டும் என அழைப்புவிடுக்கிறார். இந்த அழைப்பை, திருமணமான தம்பதியர் தங்கள் வாழ்வின் முழுமையான, தீர்மானமான பிணைப்பில் நிறைவேற்றுகின்றனர். ஒரே உடலாக இருக்கும் அவர்கள், இவ்வுலகில் திருஅவையை ஐக்கியத்திலும் பற்றுமாறா உறுதிப்பாட்டிலும் கட்டியெழுப்புவதுடன், இறைஅன்பின் வாழும் அடையாளங்களாக மாறுகின்றனர். அதேவேளை, திருமணமானது, கிறிஸ்து தன் திருஅவைக்காகக் கொண்டிருக்கும் நம்பகத்தன்மையும் தியாகமும் இணைந்த அன்பெனும் மறையுண்மையைப் பிரதிபலிப்பதாகவும் உள்ளது. இவ்வாறு, கிறிஸ்தவத் தம்பதியர் ஒரு தனிச்சிறப்பு திருநிலைப்பாட்டையும் அழைப்பையும் பெறுகின்றனர். திருமணம் ஓர் உன்னத அழைப்பாக இருக்கின்ற அதேவேளை, அது எளிதான ஒன்றல்ல. காலையும் மாலையும் உணவு வேளைகளிலும் செபிப்பதிலும், செபமாலை செபிப்பதிலும், எல்லாவற்றிற்கும் மேலாக ஞாயிறு திருப்பலிகளில் பங்குபெறுவதிலும் என இறைவனுடன் நாம் செபம் வழி கொள்ளும் உயிருள்ள உறவால் இந்த அழைப்பு தொடர்ந்து பலப்படுத்தப்படவேண்டும். இன்று நாம் அனைத்துக் குடும்பங்களுக்காக, குறிப்பாக, இடர்பாடுகளை எதிர்நோக்கும் குடும்பங்களுக்காகச் செபிப்போம். இதன்வழி, அவர்கள் கடவுளின் கருணையைப் பெற்று, சமூகத்தில் விசுவாசம், அன்பு, தாராளமனப்பான்மையுடன்கூடிய சேவை ஆகியவைகளின் மகிழ்வுநிறை எடுத்துக்காட்டுகளாக செயல்படுவார்களாக.
இவ்வாறு தன் புதன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.







All the contents on this site are copyrighted ©.