2014-04-01 14:43:12

விவிலியத்
தேடல் பரிசேயரும் வரிதண்டுபவரும் உவமை பகுதி 2


RealAudioMP3 "இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்." (லூக்கா நற்செய்தி 18:10) ‘பரிசேயரும் வரிதண்டுபவரும்’ என்ற உவமையின் ஆரம்ப வரிகள் இவை. இவ்வரிகளை நான் இதுவரை பலமுறை வாசித்திருக்கிறேன். ஆனால், இம்முறை வாசித்தபோது, ஒரு நுட்பமான, கலைநயம் மிக்க உண்மையை நான் உணர்ந்தேன். கதையோடு கருத்தையும் இணைத்துச் சொல்லும் கலையில் இயேசு தலைச்சிறந்தவர் என்பதை இவ்விரு வாக்கியங்கள் எனக்கு உணர்த்தின.
"ஒரு ஊர்ல ஒரு ராஜா, ராணி இருந்தாங்க" என்ற வழக்கமான பாணியில் இக்கதையைச் சொல்வதாக இருந்தால், "பரிசேயர் ஒருவரும், வரிதண்டுபவர் ஒருவரும் இறைவனிடம் வேண்ட கோவிலுக்குச் சென்றனர்" என்று இயேசு இக்கதையை ஆரம்பித்திருக்கலாம். ஆனால், இயேசுவோ, "இருவர் இறைவனிடம் வேண்ட கோவிலுக்குச் சென்றனர்" என்று பொதுவாக ஆரம்பித்து, பின்னர், "ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்" என்று இவ்விருவரின் அடையாளங்களை குறிப்பிட்டுள்ளது என் கவனத்தை ஈர்த்தது. இந்த அறிமுக வரிகளில் ஒரு பாடத்தை இயேசு கூறுவதுபோல் உணர்கிறேன். இறைவனிடம் வேண்ட கோவிலுக்குச் செல்லும்போது, அனைவரும் சமம். அங்கு அவர், இவர் என்ற தனிப்பட்ட அடையாளங்கள் தேவையில்லை. ஆனால், அங்கு செல்லும்போது 'நான்' என்ற அடையாளத்தை, அகந்தையை நாம் ஏந்திச் செல்வதால் வேறுபாடுகள் எழுகின்றன என்பதை இயேசு இந்த முதலிரு வாக்கியங்களில் கூறுவதாக நான் உணர்கிறேன்.

இறைவனின் இல்லத்தில் நாம் அனைவரும் சமம் என்ற உணர்வை கடந்த வெள்ளி, சனி ஆகிய இரு நாட்கள் நாம் உணர்ந்திருப்போம் என்று நம்புகிறேன். கடந்த வெள்ளி, சனிக் கிழமைகளை 'மன்னிப்பின் திருவிழா'வாகக் கொண்டாட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நம்மை அழைத்தார். வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் அவர் நடத்திய மன்னிப்புத் திருவழிபாட்டில், "நம்மில் பாவமற்றவர் யார்? ஒருவரும் கிடையாது என்ற எண்ணத்துடன் தன் மறையுரையைத் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். இதைத் தொடர்ந்து இடம்பெற்ற ஒப்புரவு அருள் அடையாளத் திருச்சடங்கின் துவக்கத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மற்றொரு அருள் பணியாளர் முன் முழந்தாளிட்டு, பாவ அறிக்கை செய்து, ஒப்புரவு அருள் அடையாளத்தை முதலில் தான் பெற்றுக்கொண்டார். பின்னர், அவர் பிறருக்கு இவ்வருள் அடையாளத்தை வழங்கச் சென்றார்.

திருத்தந்தையர் பங்கேற்ற, தலைமையேற்ற பல்லாயிரம் நிகழ்ச்சிகளை, ஒலி-ஒளி காட்சிகளாக, புகைப்படங்களாக பார்த்திருப்போம். ஆனால், அகில உலகக் கத்தோலிக்கத் திருஅவையின் தலைவரான திருத்தந்தை ஒருவர், மற்றொரு அருள் பணியாளர் முன் மண்டியிட்டு, பாவ மன்னிப்புப் பெறும் காட்சியை இதுவரை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இந்நிகழ்வு, கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைக் கோவில் என்று கருதப்படும் புனித பேதுரு பசிலிக்காவில் நிகழ்ந்தது என்பது, இன்னும் பொருளுள்ளதாகத் தெரிகிறது. இக்காட்சியை நான் கண்டபோது, 'பரிசேயரும் வரிதண்டுபவரும்' உவமையில் "இருவர் இறைவனிடம் வேண்ட கோவிலுக்குச் சென்றனர்" என்று இயேசு கூறியுள்ள ஆரம்ப வார்த்தைகளின் ஆழத்தை உணர்ந்தேன்.

இறைவனின் இல்லத்தில், அதாவது நம் கோவில்களில் நாம் அனைவரும் சமத்துவ உணர்வுடன் நுழையவேண்டும். ஆனால், நடைமுறையில் நம் கோவில்களில் நிகழ்வதென்ன? நுழை வாயிலிலேயே பாகுபாடுகள் துவங்கிவிடுகின்றன. குலம், இனம், சாதி, வறியோர், செல்வந்தர் என்ற பாகுபாடுகள் பல கோவில்களில் வெளிப்படையாக, அல்லது, மறைமுகமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பது, வேதனை தரும் உண்மை.
நமது அகந்தையால், அறியாமையால் நமக்குள் வேறுபாடுகளை உருவாக்குகிறோம். இந்த வேறுபாடுகளை நியாயப்படுத்த, இறைவனையும், அவரது வார்த்தைகளையும் பயன்படுத்துவது நம் அகந்தையின் உச்சநிலை. அகந்தையின் உச்சத்தில் அறிவாற்றல் குறைகிறது. அகந்தையின் விளைவுகளை விளக்கவே இயேசு, 'பரிசேயரும் வரிதண்டுபவரும்' என்ற உவமையைக் கூறினார்.

இறைவனிடம் வேண்ட கோவிலுக்குச் சென்ற இருவரில், ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர் என்று இயேசு அறிமுகம் செய்கிறார். இயேசு அறிமுகம் செய்யும் இவ்விருவரையும் புரிந்துகொள்வது நல்லது.
முதலில், பரிசேயர்.... 'பரிசேயர்' என்ற வாத்தையைக் கேட்டதும், நம்மையும் அறியாமல், 'வெளிவேடக்காரர்' என்ற மற்றொரு வார்த்தை நம் உள்ளங்களில் எதிரொலிப்பதை நாம் உணரலாம். பரிசேயர் என்றதும், வெளிவேடக்காரர் என்று முத்திரை குத்துவது குறுகிய, முற்சார்புடைய பார்வை. பிறர் காண, பிறர் பாராட்ட நல்லவற்றைச் செய்யும் போக்கை, 'பரிசேயத்தனம்' என்று அழைக்கும் பழக்கம் நம்மிடம் உள்ளது. இத்தகைய முற்சார்புடையக் கண்ணோட்டத்திலிருந்து வெளியேறி, பரிசேயர்களைப் பற்றி விவிலியப் பின்னணியில் அறிந்துகொள்ள முயல்வோம்.

விவிலியத்தில், 'பரிசேயர்' என்ற வார்த்தை புதிய ஏற்பாட்டில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டில் இந்த வார்த்தையின் பயன்பாடே கிடையாது. எனவே, இக்குழுவினர், பழைய, புதிய ஏற்பாடுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தோன்றியவர்கள் என்பது, விவிலிய ஆய்வாளர்களின் கணிப்பு.
'பரிசேயர்' என்ற வார்த்தை, 'perushim' என்ற எபிரேயச் சொல்லிலிருந்து உருவானது. இந்த வார்த்தையின் பொருள், 'பிரிந்தவர்கள்' அல்லது, 'தனித்து வைக்கப்பட்டவர்கள்'.
அன்னிய நாட்டவரின் ஆக்கிரமிப்பால் அடிமைப்பட்ட இஸ்ரயேல் மக்கள், அன்னியரின் பழக்கவழக்கங்களால், மத நம்பிக்கைகளால் தங்கள் தனித்துவத்தை இழந்தனர். இவர்களைக் குறித்து, மக்கபேயர் முதல் நூலில் கூறப்பட்டுள்ளது - 1 மக்கபேயர் 1: 11-15. வேற்றினத்தாருடன் இவ்விதம் சமரசம் செய்து கலந்துவிட்ட இஸ்ரயேல் மக்களிடமிருந்து தங்களையே வேறுபடுத்தி, தங்கள் தனித்துவத்தைக் கண்ணும் கருத்துமாகக் காத்துக் கொண்டவர்கள், 'பரிசேயர்கள்'. தங்களைச் சுற்றி வளர்ந்திருந்த கலப்படக் கலாச்சாரத்தில், தங்களை, 'தூய இனத்தவர்' என்று அவர்கள் எண்ணியதில் வியப்பில்லை.

இறைவனின் கட்டளைகளைக் கடைபிடிக்காமல் வாழ்ந்ததால்தான் இஸ்ரயேல் மக்கள் வேற்று நாட்டவர்களால் அடிமைப்படுத்தப்பட்டனர் என்று ஆழமாக நம்பியவர்கள் 'பரிசேயர்கள்'. எனவே, மோசே வழியாக, கடவுள் தந்த கட்டளைகளை சிறிதும் விலகாமல், நுணுக்கமாகக் கடைபிடித்தவர்கள் பரிசேயர்கள். கோவிலைச் சார்ந்து வாழ்ந்த குருக்களும் மதத் தலைவர்களும் கோவிலைத் தங்கள் அரணாகக் கொண்டு தங்கள் தனித்துவத்தை நிலைநாட்டினர். பரிசேயர்கள் கோவிலைச் சார்ந்த குருக்கள் அல்ல. அவர்கள் பொதுநிலையினர். எனவே, தங்கள் தனித்துவத்தை நிலைநாட்ட தனிப்பட்ட, அன்றாட வாழ்வில் வேறுபல முயற்சிகளை மேற்கொண்டனர்.

இறைவன் மோசேக்கு அளித்தச் சட்டங்களை இன்னும் பல பகுதிகளாகப் பிரித்து, அவற்றை நடைமுறைப்படுத்தும் வகையில், 600க்கும் மேற்பட்ட வழிமுறைகளை இவர்கள் வகுத்துக்கொண்டனர். குறிப்பாக, தூய்மைப்படுத்தும் சடங்குகள், நோன்பு இருத்தல், கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கைகள் என்ற விடயங்களில் மிக, மிக கவனமாக இருந்தனர்.
இஸ்ரயேல் மக்கள் மத்தியில், ஆண்டில் ஒரு நாள் நோன்பு நாள் என்று குறிக்கப்பட்டுள்ளது. பாவக்கழுவாய் நாள் என்று குறிக்கப்பட்ட அந்நாளில் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் வேலை ஏதும் செய்யாமல், நோன்பு இருக்கவேண்டும் என்பது கட்டளை (லேவியர் நூல் 16: 29-31). ஆனால், பரிசேயர்களோ வாரத்திற்கு இருமுறை நோன்பு கடைபிடித்தனர்.
இஸ்ரயேல் மக்களின் நிலத்தின் விளைவுகளான தானியம், திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றில் பத்தில் ஒரு பகுதியை இறைவனுக்கு அளிக்கவேண்டும் என்பது கட்டளை (இணைச் சட்டம் 14: 22-23). ஆயினும், பரிசேயர்கள் இக்கட்டளையை மிக நுணுக்கமாகக் கடைபிடிக்கும் வகையில், தங்கள் நிலத்தின் விளைவான தானியங்கள் மட்டுமல்லாமல், வீட்டைச் சுற்றி வளர்ந்த வேறு பல மூலிகைப் பொருள்களிலும் பத்தில் ஒரு பங்கை அளித்தனர். பரிசேயர்கள் கட்டளைகளை எவ்வளவு நுணுக்கமாகக் கடைபிடிக்கின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். - மத்தேயு நற்செய்தி 23:23
எனவே, இந்த உவமையில் நாம் சந்திக்கும் பரிசேயர் கோவிலில் நுழைந்ததும் எடுத்துரைக்கும் தன் புண்ணியப் பட்டியல், உண்மையான பட்டியல்தான். "வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்" (லூக்கா நற்செய்தி 18:12) என்று அவர் சொல்வது முற்றிலும் உண்மை.

பொதுவாக, பரிசேயர்கள் இயேசுவுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டவர்களாக நற்செய்திகளில் சித்திரிக்கப்பட்டுள்ளனர். எனவே, பரிசேயர்கள் என்றதும் நம் மனதில் எதிர்மறை உணர்வுகள் வெளிப்படுகின்றன. ஆனால், புதிய ஏற்பாட்டின் வேறு சில பகுதிகளில் இவர்களைக் குறித்த உயர்வான எண்ணங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, "அந்நேரத்தில் பரிசேயர் சிலர் இயேசுவிடம் வந்து, 'இங்கிருந்து போய்விடும்; ஏனெனில் ஏரோது உம்மைக் கொல்லவேண்டும் என்றிருக்கிறான்' என்று கூறினர்." (லூக்கா நற்செய்தி 13:31) என்று இயேசுவை எச்சரித்ததாக வாசிக்கிறோம். அதேபோல், பரிசேயர் ஒருவரும், பரிசேயர் தலைவர் ஒருவரும் இயேசுவை விருந்துண்ண அழைத்தனர் என்பதையும் நாம் லூக்கா நற்செய்தியில் (7:36; 14:1) காண்கிறோம்.
பரிசேயர்களில் ஒருவரான நிக்கதேம் என்பவர், உண்மையை அறிந்துகொள்ள, இயேசுவைத் தேடி வந்தார் என்பதை யோவான் நற்செய்தி கூறுகிறது (யோவான் 3:1). இயேசுவின் மரணத்திற்குப் பிறகு, இவர் இயேசுவின் அடக்கத்திற்கு உதவி செய்தார் என்பதையும் யோவான் நற்செய்தி சுட்டிக்காட்டுகிறது (யோவான் 19:39). கமாலியேல் என்ற பரிசேயர் இயேசுவின் சார்பாக வாதாடியதை, திருத்தூதர் பணிகள் நூலில் (5:34-39) காண்கிறோம்.
கிறிஸ்தவ மறையின் மாபெரும் தூண் எனக் கருதப்படும் திருத்தூதர் பவுல், ஒரு பரிசேயர் என்ற உண்மை, இக்குழுவினரைக் குறித்து நாம் கொண்டிருக்கும் எண்ணங்களை ஓரளவு உயர்த்துகிறது. (திருத்தூதர் பணிகள் 23: 6-9; பிலிப்பியர் 3: 5-9) சட்டத் திட்டங்களை, சடங்குகளை, சம்பிரதாயங்களை எள்ளளவும் பிசகாமல் பின்பற்றிய பரிசேயர்கள், மக்கள் மத்தியில் மதிப்பு பெற்றிருந்தனர்.

இஸ்ரயேல் மக்களின் பெருமை, மகுடம், பரிசேயர்கள் என்றால், இஸ்ரயேல் குலத்தின் அவமானம், காலடித் தூசி, என்று கருதப்பட்டவர்கள், வரிதண்டுபவர்கள். தங்களை அடிமைப்படுத்திய வேற்று நாட்டினரோடு சமரசம் செய்து வாழ்வதே இஸ்ரயேல் மக்களுக்கு அவமானம் என்று கருதப்பட்டது. வரிதண்டுபவர்களோ, சமரசம் என்ற நிலைக்கும் கீழாகத் தாழ்ந்து வேற்று நாட்டினர் முன் சரண் அடைந்தவர்கள். தங்களை அடிமைப்படுத்தியவர்களிடம் இவர்களாகவே விருப்பப்பட்டு தங்களை அடிமைகளாக அளித்தவர்கள். உரோமைய அரசுக்கு வரி வசூல் செய்து தந்தனர். இவர்களிடம், நேர்மை, நாணயம், நாட்டுப்பற்று, இறைப்பற்று என்று பல அம்சங்கள் தொலைந்து போயிருந்தன.
சொந்த நாட்டில் வேற்றுநாட்டவர் ஆதிக்கத்தை வெறுத்தவர்கள் இஸ்ரயேல் மக்கள். தங்கள் சொந்த மண்ணில் வேற்றுநாட்டவருக்கு வரி செலுத்துவதை வெறுத்தனர். இந்த வரியை வசூல் செய்வது தங்களில் ஒருவர் என்பது இவர்கள் வெறுப்பை அதிகரித்தது. சொந்த நாட்டைக் காட்டிக் கொடுத்த கூலிப்படையினர் இந்த வரிதண்டுபவர் என்ற வெறுப்பு அவர்களுக்கு.
குறிக்கப்பட்ட வரியையும் கடந்து, தங்களுக்கென்று ஒரு தொகையையும் சேர்த்து, வரிதண்டுபவர்கள் வசூல் செய்தனர். வரிதண்டுபவரான சக்கேயுவின் இல்லத்தில் இயேசு உணவருந்தச் சென்றிருந்தபோது, தான் செய்த தவறுகளைப் பட்டியலிடும் சக்கேயு, பிறரை தான் ஏமாற்றி பணம் பறித்ததாகக் கூறுகிறார். (லூக்கா 19: 8) எனவே, இந்த உவமையில் இயேசு குறிப்பிடும் வரிதண்டுபவர் தன்னை ஒரு பாவி என்று இறைவன் முன் சொன்னது, உண்மைக்குப் புறம்பானது அல்ல.

இயேசு அறிமுகம் செய்த இவ்விரு நாயகர்களும் கோவிலில் சொன்ன வார்த்தைகள் நம் அடுத்தத் தேடலின் மையமாகும்.








All the contents on this site are copyrighted ©.