2014-03-31 15:49:33

வாரம் ஓர் அலசல் – மந்தையைத் தேடிச்சென்ற மேய்ப்பர்(திருத்தந்தை 2ம் ஜான் பால்)


மார்ச் 31,2014. பிரபல ஃபோர்டு வாகன நிறுவன அதிபர் ஹென்ரி ஃபோர்டு(Henry Ford) அவர்கள் ஒருமுறை இங்கிலாந்து சென்றிருந்தார். அங்கே அவர் தனது நிறுவனத்தின் வாகனத்தைப் பயன்படுத்தவில்லை. மாறாக, ரோல்ஸ் ராய்ஸ்(Rolls Royce) என்ற வேறு ஒரு நிறுவனத்தின் வாகனத்தைப் பயன்படுத்தினார். அவர் இங்கிலாந்தில் இருந்தபோது, இங்கிலாந்து அரசர் 5ம் ஜார்ஜ் அவர்கள் அளித்த விருந்து ஒன்றிலும் கலந்துகொண்டார். அப்போது அரசர் ஜார்ஜ் அவரிடம், ஹென்ரி, உங்களுக்கு என்னவாயிற்று? நீங்கள் உங்களது நிறுவன வாகனத்தைப் பயன்படுத்தாமல் வேறு ஒரு நிறுவனத்தின் வாகனத்தைப் பயன்படுத்துகிறீர்களே என்று கேட்டார். அதற்கு ஹென்ரி ஃபோர்டு,
“அரசே, உலகமெங்கும் மக்கள் எங்களது வாகனங்களை வாங்குவதற்குத்தான் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். நிறையப் பேர் முன்பதிவு செய்துவிட்டு எங்கள் வாகனத்துக்காக வரிசையில் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு மதிப்பும் தேவையும் எங்கள் நிறுவனத் தயாரிப்புக்கு இருக்கின்றது. எனவே தயாராகி வருகின்ற புதிய வாகனங்களையெல்லாம் எங்கள் தொழிலாளர்கள் விற்று விடுகிறார்கள். எங்கள் தொழிலாளர்களுக்கு முதலாளியின் தேவையைவிட வாடிக்கையாளர்களின் திருப்தியே முக்கியம்”
என்று பதில் சொன்னார். அன்பு நெஞ்சங்களே, சாதித்துக் காட்டியவர்கள் எல்லாருமே ஏதோ ஒரு விதத்தில் வேறுபட்டுத்தான் நிற்கிறார்கள். இது அரசியல் வாழ்வானாலும், ஆன்மீக வாழ்வானாலும், தொழில்துறையானாலும், எந்தத் துறையிலுமே சாதனையாளர்கள் வித்தியாசமாகத்தான் செயல்படுகிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, மார்ச் 28, கடந்த வெள்ளிக்கிழமையன்று வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நடைபெற்ற மன்னிப்பு விழாவில், ஒப்புரவு அருள்சாதனத்தைப் பெற்ற முதல் ஆளாக இருந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். பாவசங்கீர்த்தனம் என்ற ஒப்புரவு அருள்சாதனத்தை, இப்படிப் பொதுப்படையாகப் பெற்ற முதல் திருத்தந்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்தான். இத்திருத்தந்தை, கடந்த ஓராண்டில் செய்துள்ள வித்தியாசமான செயல்கள் மேலும் பல உள்ளன. இவ்வாறு ஒவ்வொரு திருத்தந்தையும் ஒவ்வொரு விதத்தில் வேறுபட்ட சாதனையாளர்களாகத் திகழ்கிறார்கள். 2005ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதியையோ, 2005ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதியையோ யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், இயற்கை எய்திய நாள் 2005ம் ஆண்டு ஏப்ரல் 2. அவரது இறுதிச் சடங்கு நாள் 2005ம் ஆண்டு ஏப்ரல் 8. இந்த அடக்கச் சடங்குத் திருப்பலியில் பெருங்கடலெனத் திரண்டிருந்த மக்கள், குறிப்பாக, இளையோர் இத்தாலிய மொழியில் அடிக்கடி உரக்கச் சொல்லிக்கொண்டிருந்த சொற்கள் Santo subito! என்பதே. திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களை, புனிதர் என உடனடியாக அறிவிக்க வேண்டுமென்று, அவர்கள் பலமாக ஒலி எழுப்பிக் கொண்டே இருந்தனர். முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களை 2011ம் ஆண்டு மே முதல் நாளன்று முத்திப்பேறுபெற்றவர் என அறிவித்தார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவரை 2014ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி புனிதர் என அறிவிக்கவுள்ளார். திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், அந்த அளவுக்கு அனைவரது மனங்களையும் கவர்ந்துள்ளார்.
1520ம் ஆண்டுக்குப் பின்னர் இத்தாலியரல்லாத ஒருவர் கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பொறுப்பை வகித்த புகழுக்குரியவர் திருத்தந்தை 2ம் ஜான் பால். இவர் 1978ம் ஆண்டு அக்டோபர் 16ம் நாள், திருஅவையின் 264வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். ஆன்மாக்களை இறைவனிடம் அழைத்துவருவதில் தணியாத் தாகம் கொண்டிருந்த இத்திருத்தந்தை, 129 நாடுகளுக்குத் திருப்பயணம் மேற்கொண்டார். எல்லா நாட்டுக் கத்தோலிக்கரும் உரோமைக்கு வர இயலாது. ஆதலால் நானே அவர்களைத் தேடிச் செல்கிறேன் என்று பயணங்களை மேற்கொண்டார் இவர். இவர், 1986ம் ஆண்டு பிப்ரவரி 1 முதல் 10 வரை, பின்னர் 1999ம் ஆண்டு நவம்பர் 5 முதல் 9 வரை இந்தியாவிலும், 1995ம் ஆண்டு சனவரி 20, 21 தேதிகளில் இலங்கையிலும் திருப்பயணங்களை மேற்கொண்டார். இத்திருப்பயணங்களில், நீதியுடன்கூடிய அமைதிக்கும், தனிமனித மாண்புக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.
திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் 1986ம் ஆண்டு பிப்ரவரி முதல் நாள் சனிக்கிழமையன்று புதுடில்லி விமான நிலையத்தில் நடந்த வரவேற்பு நிகழ்வில் உங்கள் அனைவருக்கும் "நமஸ்கார்" என்று சொல்லி தனது உரையைத் தொடங்கினார். எனது பயணம் சமய மற்றும் மனிதக் கூறுகளைக் கொண்டுள்ளது. உங்கள் நாட்டின் வளமையான கலாச்சாரத்தை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்வதற்காக இங்கு வந்துள்ளேன். இயன்ற அளவு உங்களில் பலரைச் சந்தித்து உங்கள் வாழ்வு அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ள வந்துள்ளேன். ஒற்றுமை மற்றும் அமைதியின் பணியாளனாக இந்தியாவுக்கு வந்துள்ளேன், ஜெய்ஹிந்த் என்று சொல்லி இவ்வுரையை நிறைவு செய்தார். இதே நாளில் டெல்லி ராஜ்காட் சென்று மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி ஆற்றிய உரையில், நாட்டுத் தந்தையான மகாத்மா காந்தி, "அகிம்சாவின் திருத்தூதர்", இவரின் நினைவிடத்திலிருந்து இந்த எனது திருப்பயணம் தொடங்குவது முழுவதும் பொருள்ளது, பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் மகாத்மா காந்தி பற்றிக் குறிப்பிட்டது போல, இந்த நாட்டில் ஒளிர்ந்த ஒளி சாதாரண ஒளி அல்ல என்று பேசினார். இந்த ஒளி மறைந்துவிட்டாலும், அவரின் போதனைகளும், எடுத்துக்காட்டான வாழ்வும் இலட்சக்கணக்கான மனிதரின் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்று புகழ்ந்தார் திருத்தந்தை 2ம் ஜான் பால். மேலும் அவர் சொன்னார்....
“மனித சமுதாயத்தின் நாயகனாகிய மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்த இங்கு வந்துள்ளேன். ஏழ்மை, பசி, நோய் ஆகியவை இன்னும் நம் உலகிலிருந்து ஒழிக்கப்படவில்லை. உலகில் ஆயுதக் குவிப்பு நம் மனங்களில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சமத்துவமற்ற வளர்ச்சி, சிலருக்குச் சாதகமாக உள்ளது. இதுபோன்ற நிலைகள் அமைதிக்கு ஊறு விளைவிக்கின்றன மற்றும் அநீதியை அதிகரித்துள்ளன. எனினும், அமைதியிலும் நீதியிலும் நல்லதோர் உலகத்தைக் கட்டியெழுப்புவது கடவுளின் உதவியுடன் செயல்படும் மனித மனங்களைச் சார்ந்துள்ளது. இதற்கான தீர்வு, மனித இதயத்தில் இருக்கின்றது என்பதை மக்கள் தலைவர்களும், நல்மனத்தவரும் நம்பிச் செயல்பட வேண்டும். "புதிய இதயத்திலிருந்து அமைதி பிறக்கின்றது". "அன்பின் சட்டம் உலகை ஆள்கிறது... உண்மை, பொய்மையை வெல்கிறது, அன்பு வெறுப்பை வெற்றி காண்கிறது..." என்று மகாத்மா காந்தி மீண்டும் சொல்கிறார்...”
என்று கூறினார் திருத்தந்தை 2ம் ஜான் பால். 1986ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி புதன்கிழமையன்று சென்னை மெரினா கடற்கரையில் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் புனித அருளானந்தர் நினைவாக நிகழ்த்திய திருப்பலியில், மாபெரும் இந்நாடு, குறிப்பாக, தமிழ்நாடு, மூன்று மாபெரும் புனிதர்கள் மற்றும் புகழ்பெற்ற துறவு சபைகளின் சிறந்த முன்னோடிகளிடமிருந்து இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியைப் பெறும் தனிப்பட்ட சலுகையைக் கொண்டுள்ளது என்று கூறினார RealAudioMP3 ். இந்த நகருக்கு அருகில் புனித தோமையார் மறைசாட்சியானார். முத்துக்குளித்துறைக் கடற்கரையில் உழைத்து ஜப்பான் வரை அயராமல் மறைப்பணியாற்றினார் புனித பிரான்சிஸ் சவேரியார். இவரைப் பின்பற்றி தமிழ்நாடு வந்து, கிறிஸ்துவுக்குச் சாட்சியாக, 1693ம் ஆண்டு பிப்ரவரி 4ம் நாள் மறைச்சாட்சியானவர் புனித ஜான் டி பிரிட்டோ. நாமும் இவர்களைப் போல் சாட்சிகளாக வாழ அழைக்கப்படுகிறோம் என்று கூறினார் திருத்தந்தை 2ம் ஜான் பால்.
1986ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி சென்னையில் கிறிஸ்தவமில்லாத பிற சமயப் பிரதிநிதிகளையும் சந்தித்தார் திருத்தந்தை 2ம் ஜான் பால். RealAudioMP3 இந்தியா தொன்மையான மத மரபுகளின் தொட்டில். மதம், மனிதருக்கு ஆழமான அர்த்தத்தைக் கொடுக்கின்றது என்பது, இந்தியரின் நம்பிக்கை. வறுமை, நோய், அறியாமை மற்றும் துன்பம் நிறைந்துள்ள உலகில், உண்மையான ஆன்மீகம் மனிதரின் மனத்தை மட்டுமல்ல, முழு உலகையும் நல்ல நிலைக்கு மாற்றக் கூடியது. உண்மையான ஆன்மீகம், துன்புறும் அல்லது தேவையில் இருக்கும் மக்களுக்கு விடுதலையளிப்பதில் கருத்தாய் இருக்கின்றது. மனிதமற்ற வாழ்வுநிலைகளை ஒழிப்பது உண்மையான ஆன்மீகத்துக்குக் கிடைக்கும் வெற்றியாகும். ஒவ்வொரு மனிதரும், அவர் ஏழையோ வசதியற்றவரோ யாராயிருந்தாலும் அவர் மதிக்கப்படவும், சுதந்திரமாய் வாழவும் தகுதியுடையவர். இவ்வாறு திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், ஒவ்வொரு மனிதரின் மாண்புறு வாழ்வை வலியுறுத்தி, பட்டினத்தார் பாடல் ஒன்றையும் மேற்கோள் காட்டினார். இவர் பிப்ரவரி 9ம் தேதி ஞாயிறன்று மும்பை சிவாஜி பூங்காவில் இந்தியாவை அன்னைமரியிடம் அர்ப்பணித்தார். RealAudioMP3
1995ம் ஆண்டு சனவரி 21ம் தேதி சனிக்கிழமை, இலங்கைத் தலைநகர் கொழும்பு பண்டாரநாயக்கே நினைவு அரங்கத்தில் பிறசமயப் பிரநிதிகளைச் சந்தித்தார் திருத்தந்தை 2ம் ஜான் பால். உங்கள் மரபுகளில் இருக்கின்ற கருணை மற்றும் அகிம்சைக் கொள்கைகள், அமைதியைக் கட்டியெழுப்பும் இலங்கை மக்களின் முயற்சிகளுக்குத் தூண்டுதலின் ஊற்றாய் அமையும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஒவ்வொரு மனிதரையும் மதித்து நீதியில் கட்டப்படும் அமைதி நிலைத்து நிற்கும். உங்கள் நாட்டின் நீண்டகால மரபான சமய நல்லிணக்கம், தனிநபரின் அமைதி மற்றும் நல்வாழ்வுக்காகவும், இலங்கை மற்றும் ஆசியா முழுவதின் நன்மைக்காகவும் என்றும் உறுதியாக வளரும் என்ற எனது நம்பிக்கையை மீண்டும் வெளிப்படுத்துகிறேன். உங்களின் பிரசன்னத்தில், இலங்கை மற்றும் உலகம் அனைத்துக்குமான நல்ல எதிர்காலத்தைக் காண்கிறேன். உங்கள்மீது மிகுந்த நம்பிக்கை வைத்து உரோம் திரும்புகிறேன் என்றும் அச்சந்திப்பில் கூறினார் திருத்தந்தை 2ம் ஜான் பால்.
RealAudioMP3 அன்பு வத்திக்கான் வானொலி நேயர்களே, அடிப்படை மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டுமென்று இன்றும் போராடி வருகின்றனர் இலங்கைத் தமிழ் மக்கள். கடந்த வாரத்தில் நடந்து முடிந்த ஐ.நா. மனித உரிமைகள் அவைக் கூட்டத்திலும் இது தெளிவாகத் தெரிந்தது. இலங்கைத் தமிழர்களுக்கு நீதியுடன்கூடிய அமைதி விரைவில் கிடைக்க முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களிடம் செபிப்போம். ஏப்ரல் 2, இப்புதன், திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களை, இறைவன் இவ்வுலகினின்று அழைத்துக்கொண்ட நினைவு நாள். இத்திருத்தந்தை விரும்பிய நீதியில் அமைதி, நாடுகளில் தழைத்தோங்கட்டும்.







All the contents on this site are copyrighted ©.