2014-03-31 15:51:26

தவக்காலம் 4ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 "வெள்ளி, சனி ஆகிய இரு நாட்களில், 'ஆண்டவருக்கென 24 மணி நேரத்'தை ஒதுக்கி, நாம் மனமாற்றத்திற்கான சிறப்பு நேரமாக அதைச் செலவிடுவோம். இதை நாம் 'மன்னிப்பின் விழா' என்று கொண்டாடுவோம். காணாமற்போன மகன் திரும்பிவந்தபோது, அதை ஒரு விழாவாகக் கொண்டாடியத் தந்தையைப்போல, ஆண்டவர் நமக்கு வழங்கியுள்ள மன்னிப்பை நாம் கொண்டாடவேண்டும்"
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 23, கடந்த ஞாயிறன்று வழங்கிய மூவேளை செப உரையில் 'மன்னிப்பு விழா'வைப் பற்றி அறிவித்தார். அவரது அழைப்பை ஏற்று, உலகெங்கும் உள்ள பல கத்தோலிக்க ஆலயங்கள், வெள்ளி மாலை முதல் திறந்து வைக்கப்பட்டன. மன்னிப்பு வேண்டி வருவோரை அணைத்து, ஆறுதல் சொல்ல இரவு திருவிழிப்பு வழிபாடுகளும், ஒப்புரவு அருள்சாதனமும் கோவில்களில் நிகழ்ந்தன.
இந்த மன்னிப்பு விழாவைத் துவக்கிவைக்க, வெள்ளி மாலை 5 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் மன்னிப்பு வழிபாடு நிகழ்ந்தது. இந்த வழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பகிர்ந்த எண்ணங்களில் ஒரு சில இதோ:
"நம்மில் பாவமற்றவர் யார்? ஒருவரும் கிடையாது. திருத்தூதர் யோவான் கூறுவது இதுதான்: "பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது. மாறாக நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார். ஏனெனில் அவர் நம்பிக்கைக்குரியவர், நேர்மையுள்ளவர்" (1 யோவான் 1: 8-9). இதுதான் இந்த மன்னிப்பு விழாவில் நமக்கு நிகழ்கிறது... நம் தந்தை அன்புகூர்வதில் களைப்படைவதே இல்லை. காணாமற்போன மகன் மீண்டும் இல்லம் வந்து சேரும் அந்தப் பாதையையே பார்த்துக் கொண்டிருந்த தந்தையின் கண்கள் களைப்படையவேயில்லை. தன்னுடன் வீட்டிலேயே தங்கிய மகன் தன் மகிழ்வில் பங்கு கொள்ள மறுத்தாலும், அவர் மீது தந்தையின் அன்பு குறையவேயில்லை.... இந்த வழிபாடு முடிந்ததும், உங்களில் பலர் கடவுளுடன் நீங்கள் கொண்ட ஒப்புரவை பிறருக்கு எடுத்துச் சொல்லும் நற்செய்திப் பணியாளர்களாக மாறப்போகிறீர்கள்"
நாம் கொண்டாடிய இந்த மன்னிப்பு விழாவைத் தொடர்ந்துவரும் இஞ்ஞாயிறன்று, பார்வையற்ற ஒருவரை இயேசு குணப்படுத்தும் நற்செய்தி (யோவான் 9: 1-41) நமக்குத் தரப்பட்டுள்ளது. 'மன்னிப்பையும்' ‘பார்வை பெறுவதை'யும் இணைத்துச் சிந்திக்க தவக்காலம் நம்மை அழைக்கிறது.

2012ம் ஆண்டு நடைபெற்ற பெர்லின் திரைப்பட விழாவில் Rebelle அதாவது, 'புரட்சியாளர்' என்ற பிரெஞ்ச் மொழித் திரைப்படம் விருது பெற்றது. குழந்தைப் பருவத்திலேயே இராணுவ வீரர்களாக மாறுவதற்குக் கட்டாயப்படுத்தப்படும் சிறுவர், சிறுமியரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் இது. இத்திரைப்படத்தில் நடித்த Rachel Mwanza என்ற 17 வயது இளம்பெண், சிறந்த நடிகர் என்ற விருது பெற்றார். விருது பெற்ற இளம் பெண் இரேச்சல் நமது ஞாயிறு சிந்தனையின் மையமாகிறார். இவ்விளம் பெண்ணின் வாழ்வில், 'மன்னிப்பும்' 'பார்வை பெறுதலும்' இணைந்திருப்பதால், இப்பெண் நம் சிந்தனைகளின் மையமாகிறார்.

கடந்த வாரம், ஞாயிறு சிந்தனையில், மார்ச் 18ம் தேதி வெளியான "பள்ளி மாணவர்களிடையே பரவும் 'ஜாதிக் கயிறு' கலாச்சாரம்" என்ற கட்டுரை நம்மை ஓரளவு பாதித்திருக்கவேண்டும். இளையோர் மனதில் சாதி என்ற விஷ விதைகளை பெரியவர்கள் விதைத்துள்ளனரே என்று வருத்தப்பட்டோம். அதே நாள் -மார்ச் 18ம் தேதி- La Croix என்ற பிரெஞ்ச் இதழில் இளம்பெண் இரேச்சலைக் குறித்து வெளியாகியிருந்த ஒரு கட்டுரையை என் கவனத்திற்குக் கொணர்ந்தார், வெளிநாட்டில் பணியாற்றும் அருள் பணியாளர் ஒருவர். அவலமான நிலைகள் தங்களைச் சூழ்ந்தாலும், அந்தச் சகதியிலும் இளையோர், தாமரை மலர்களாகத் தலைநிமிர்ந்து வாழ்கின்றனர் என்பதை இந்தக் கட்டுரைமூலம் என்னால் உணர முடிந்தது. இளையோரைக் குறித்து எனக்குள் வளர்ந்துள்ள இந்த நம்பிக்கையை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் எண்ணத்துடன் சிறுமி இரேச்சலை நம் சிந்தனையின் மையமாக்குகிறேன்.

ஆப்ரிக்காவின் காங்கோ குடியரசில் ஓர் எளியக் குடும்பத்தில் கடைசிக் குழந்தையாகப் பிறந்தவர் இரேச்சல். அவருக்கு 8 வயதானபோது, வாழ்க்கை முற்றிலும் மாறியது. இரேச்சலின் தந்தை, தன் மனைவியையும், மூன்று குழந்தைகளையும் அவர்கள் பிறந்து வளர்ந்த ஊரிலிருந்து, Kinshasa நகருக்கு அனுப்பிவைத்தார். விரைவில் அவர்களுடன் தானும் சேர்வதாகக் கூறியத் தந்தை, அத்துடன் அவர்கள் வாழ்விலிருந்து முற்றிலும் மறைந்தார். Kinshasaவில் அத்தாயும், குழந்தைகளும், வயதான தங்கள் பாட்டியோடு அடுக்கடுக்காய் துன்பங்களைச் சந்தித்தனர்.
அக்குடும்பத்தின் துன்பங்களுக்கு, கடைசியாகப் பிறந்த இரேச்சல்தான் காரணம் என்று அந்நகரில் இருந்த ஒரு 'போலிச்சாமியார்' கூறினார். அக்குழந்தை ஒரு சூனியக்காரி என்றும், அவரைப் பிடித்துள்ள பேயை ஓட்டிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் கூறினார். இரேச்சலின் பாட்டி, குழந்தைப் பருவத்திலிருந்தே இரேச்சலை வெறுத்தவர். எனவே, போலிச்சாமியார் இவ்விதம் சொன்னதும், பேய்பிடித்த அக்குழந்தையைத் தண்டிக்க, பாட்டி, சிறுமியின் கண்களில் மிளகாய்ப் பொடியைப் போட்டுத் தேய்த்தார். அப்போது இரேச்சலுக்கு வயது பத்து. இதைத் தொடர்ந்து, இரேச்சல் தன் வீட்டைவிட்டு ஓடிவிட்டார்.

அடுத்த 7 ஆண்டுகள், இரேச்சல், வெளி உலகில் சந்தித்த துன்பங்களை இக்கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். தன் துன்பங்களைக் கேட்டு மக்கள் கண்ணீர் விடவேண்டும் என்பது தன் நோக்கமல்ல, மாறாக, இத்தகையத் துன்பங்களைச் சந்திக்கும் ஏனைய ஆப்ரிக்கக் குழந்தைகளை எண்ணி, அவர்கள் வாழ்வில் மாற்றங்களைக் கொணர்வதற்காகவே தன் வாழ்வின் துயரங்களைத் தான் உலகின் பல அரங்குகளில் பேசி வருவதாக இரேச்சல் குறிப்பிட்டுள்ளார்.
இரேச்சல் அடைந்த துன்பங்களைப் பட்டியிலிட்டு, பரிதாப உணர்வை வளர்ப்பது என் நோக்கமுமல்ல. இக்கட்டுரையின் இறுதியில், கூறப்பட்டுள்ள அற்புத வரிகளே, இரேச்சலை நம் சிந்தனைகளின் மையமாக்கியுள்ளது. அந்த இறுதி வரிகள் இதோ:
"இரேச்சலின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தேய்த்த பாட்டியின்மீது அவர் கோபமாய் இருக்கிறாரா என்று கேட்டபோது, அவர், ‘நான் ஏன் கோபப்படவேண்டும்? அதனால் என்ன பயன்?’ என்று பதில் சொன்னார். இத்தகைய உன்னதமான சிந்தனைக்கு முன் நாம் மிகச் சிறியவர்களாகிறோம்" என்ற வார்த்தைகளுடன் இக்கட்டுரை நிறைவு பெறுகிறது.

இரேச்சலின் வாழ்வை முற்றிலும் புரட்டிப்போட்டு, அவரை வீதிக்குக் கொணர்ந்தது - பாட்டி அவர் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தேய்த்த அந்தக் கொடூரம். அந்நிகழ்வால் அக்குழந்தை தன் கண் பார்வையையே இழந்திருக்க வாய்ப்புக்கள் இருந்தன. கண்பார்வையை இழக்காமல் அவரைக் காத்த இறைவனுக்கு நன்றி கூறுவோம். அதைவிட மேலாக, அந்நிகழ்வோ அதைத் தொடர்ந்த துன்பங்களோ அந்த இளம்பெண்ணின் மனக் கண்களைக் குருடாக்கி, அவர் வெறுப்பில் புதைந்துபோகாமல் காத்ததற்காக இறைவனுக்குச் சிறப்பான நன்றியைக் கூறுவோம். 'மன்னிப்பும்' 'பார்வை பெறுதலும்' ஒன்றோடொன்று பிணைந்தது என்பதை, இரேச்சலின் வாழ்க்கை தெளிவாகக் காட்டுகிறது.

'மன்னிப்பு' 'பார்வை பெறுதல்' என்ற இவ்விரு வார்த்தைகளையும் இணைத்து, நான் இணையத்தளத்தில் தேடியபோது, நான் கண்ட முதல் தகவல்கள் அனைத்தும் நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்டத் தகவல்களாகவே இருந்தன. மன்னிப்பதால், அகக்கண்கள் திறந்து ஆண்டவனைக் காணமுடியும் என்று அனைத்து உண்மையான மதங்களும் சொல்லித் தருகின்றன. 'கண்ணுக்குக் கண்' என்ற பழிவாங்கும் பாடங்களைச் சொல்லித் தரும் இவ்வுலகப் போக்கு, நம் அனைவரையும் பார்வை இழக்கச் செய்கிறது. 'பழிக்குப் பழி' 'பார்வை இழத்தல்' என்ற வார்த்தைகளை இணைத்து நான் தேடியபோது கிடைத்த பல உலக நிகழ்வுகளில் ஒரு செய்தி என் கவனத்தை ஈர்த்தது.

இரேச்சலின் கண்களில் அவரது பாட்டி மிளகாய்ப் பொடியைத் தேய்த்த ஆண்டு 2004. அதே ஆண்டு, ஈரானில், தன் காதலை நிராகரித்த அமேனே (Ameneh Bahrami) என்ற இளம்பெண்ணின் முகத்தில் அமிலம் வீசினார் மஜீத் (Majid Movahedi) என்ற இளைஞர். இதனால், இளம்பெண் அமேனேயின் முகமெல்லாம் எரிந்துபோய், அவரது இடது கண்ணில் பார்வை இழந்தார். 2011ம் ஆண்டு, இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, உலகை அதிர்ச்சியடையச் செய்தது. அமில வீச்சினால் தன் இடது கண் பார்வையை இழந்த இளம்பெண் அமேனே போலவே, மஜீத்தின் இடது கண்ணிலும் அமிலம் ஊற்றப்பட்டு, அவரும் பார்வை இழக்கவேண்டும் என்பதே அத்தீர்ப்பு. நீதிமன்றத்தின் இத்தீர்ப்புக்கு இளம்பெண் அமேனே முதலில் துணைபோனார் என்பது உண்மை.
இத்தீர்ப்பை செயல்படுத்தக்க்கூடாது என்று உலகின் பல மனிதாபிமான அமைப்புக்கள் விண்ணப்பித்தாலும், ஈரான் சிறை அதிகாரிகள், 2011ம் ஆண்டு மேமாதம் ஒரு நாள், இத்தீர்ப்பை நிறைவேற்ற மஜீத்துக்கு மயக்க மருந்தை முதலில் கொடுத்தனர். அவர் மயக்கத்தில் இருந்த நேரம், அமில வீச்சில் கண்ணிழந்த இளம்பெண் அமேனே அவர்கள், அத்தண்டனையை நிறைவேற்ற வேண்டாம் என்று விண்ணப்பித்ததால், மஜீத்தின் கண்களில் அமிலம் ஊற்றப்படவில்லை. இளம்பெண் அமேனே அவர்களின் அகக் கண்கள் திறந்ததால், மஜீத்தின் கண்கள் காப்பாற்றப்பட்டன.

'கண்ணுக்கு கண்' என்று வாழும் இவ்வுலகப் போக்கிற்கு மாற்றுச் சாட்சியங்களாக இரேச்சல், அமேனே போன்ற இளம்பெண்கள் 'மன்னிப்பு' பாடங்களைச் சொல்லித் தருவதால், இவ்வுலகம் இன்னும் முழுமையாகக் குருடாகாமல் வாழ்கிறது. உடலில் உள்ள கண்களில் வேதனையை அனுபவித்தாலும், ஊனக் கண்களின் பார்வையை இழந்தாலும், அகக் கண்களால் அற்புதமான உண்மைகளைக் காணமுடியும் என்பதைச் இரேச்சல், அமேனே என்ற இவ்விரு இளம்பெண்களும் நமக்குச் சொல்லித்தருகின்றனர்.

இதேபோல், இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் பார்வை இழந்த மனிதரும், உடலில் மட்டும் பார்வை பெறாமல், உள்ளத்திலும் பார்வை பெறுவதைக் காண்கிறோம். இயேசு பார்வை இழந்தவரை குணமாக்கியப் புதுமை, யோவான் நற்செய்தி 9ம் பிரிவில் முதல் ஏழு இறைவார்த்தைகளில் முடிவடைகிறது. ஆனால், இப்புதுமையைத் தொடர்ந்து 34 இறைவார்த்தைகள் வழியாக யோவான் ஒரு இறையியல் பாடமே நடத்துகிறார். நாம் அனைவரும் அகம், புறம் இவற்றில் பார்வை பெறுவது, பார்வை இழப்பது என்பன குறித்த பாடங்கள்.
பார்வை இழந்த மனிதர் உடல் அளவில் மட்டுமல்லாமல், உள்ளத்திலும் பார்வை பெறுகிறார். தன் விசுவாசக் கண்களால் இயேசுவைக் கண்டு கொள்கிறார். இதற்கு நேர் மாறாக, உடல் அளவில் தெளிவான பார்வை கொண்டிருந்ததாக எண்ணிக்கொண்டிருந்த பரிசேயர்கள், படிப்படியாகத் தங்கள் அகத்தில் பார்வை இழப்பதையும் யோவான் கூறியுள்ளார்.

பார்வை பெற்றவர் தன் ஊனக் கண்களால் இயேசுவை இன்னும் பார்க்கவில்லை, ஆனால், அகக் கண்களால் பார்க்க ஆரம்பித்துவிட்டார். எனவே, பரிசேயர்கள் கேட்ட கேள்விகள் அவரை பயமுறுத்தவில்லை. அவரது சாட்சியம் தீவிரமாக, ஆழமாக ஒலித்தது. அதைக் கண்டு, அவரைக் கோவிலிலிருந்து, யூத சமூகத்திலிருந்து வெளியேற்றினர் பரிசேயர்கள். அதுவரை ஒதுங்கியிருந்த இயேசு, இப்போது அவரைச் சந்தித்தார். அந்த சந்திப்பில் அம்மனிதரின் சாட்சியம் இன்னும் ஆழப்பட்டது. முழுமை அடைந்தது. அக ஒளி பெற்ற அவர் இறுதியில் இயேசுவைச் சந்தித்தபோது, அவரது அகம் முழுவதும் இறை ஒளியால் நிறைந்தது. இயேசுவின் முன் "ஆண்டவரே, நம்பிக்கை கொள்கிறேன்" என்று முழுமையாய் சரணடைகிறார்.

உள்ளத்தில் ஏற்படும் உணர்வுகளால் எப்படி பார்வை இழக்கிறோம் என்பதைப் பலவாறாக நாம் கூறுவோம். பொதுவாக, எந்த ஒரு உணர்ச்சியுமே ஒரு எல்லையைத் தாண்டும் போது, அந்த உணர்ச்சி நம்மைக் குருடாக்கி விடுவதாகத் தான் அடிக்கடி கூறுகிறோம். 'கண்மூடித்தனமான காதல்' என்றும், "கண்ணு மண்ணு தெரியாமல்" செயல்படுதல் என்றும் எத்தனை விதமான எண்ணங்கள் நம் பேச்சு வழக்கில் உள்ளன!

உள்ளத்தில் கொந்தளிக்கும் உணர்ச்சிகளால், குறிப்பாக, வெறுப்பால், மன்னிக்க முடியாத ஆத்திரத்தால் நமது அறிவுக் கண்கள் குருடாகிப் போகாமல் வாழ இறைவனின் அருளை நாடுவோம். இரேச்சல், அமேனே போன்ற எத்தனையோ நல்ல உள்ளங்கள் நமக்குச் சொல்லித்தரும் இந்த அற்புதப் பாடத்தை வாழ்வாகக முயல்வோம். மன்னிப்பு பெறுவதாலும் தருவதாலும் நாம் பெறும் பார்வை பழுதற்றதாய், பாசமுள்ளதாய் அமையட்டும்!








All the contents on this site are copyrighted ©.