2014-03-31 16:14:28

கிறிஸ்துவின் ஒளிக்கு உங்களைத் திறங்கள், திருத்தந்தை பிரான்சிஸ்


மார்ச்31,2014. தற்பெருமை அல்லது அகப் பார்வையற்ற நிலையால் தடைசெய்யப்படாமல், கிறிஸ்துவின் ஒளிக்கு உங்களைத் திறங்கள் என்று, இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஏறக்குறைய நாற்பதாயிரம் விசுவாசிகளிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிறவியிலேயே பார்வையிழந்தவர்க்கு இயேசு பார்வையளித்த இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிலநேரங்களில் நாம் நமது தற்பெருமையின் உச்சகட்டத்தில் மற்றவர்களை, ஏன், ஆண்டவரைக்கூட தீர்ப்பிடுகிறோம், ஆனால் கிறிஸ்தவப் பண்புகளுக்கு முரணாக இருக்கும் நடத்தைகளை விட்டொழித்து, நம் வாழ்வில் நாம் கனிதரும்படியாக, கிறிஸ்துவின் ஒளிக்கு நம்மைத் திறப்பதற்கு அழைக்கப்படுகிறோம் என்று கூறினார்.
மறைநூல் வல்லுனர்கள் இயேசுவின் பணியையும், வார்த்தைகளையும் குறைத்து மதிப்பிடும் வழிகளைத் தேடினர், அதன்மூலம், அவர்கள் தங்களின் அகவாழ்வின் பார்வையற்ற நிலையில் மிக மிக ஆழமாய் மூழ்கிக்கொண்டிருந்தனர் என்றும், தங்களின் முற்சார்பு எண்ணங்களால் தங்களைப் பூட்டி வைத்திருந்த அவர்கள் ஏற்கனவே ஒளியைக் கொண்டிருப்பதாக நம்பினார்கள், இதனால் இயேசு பற்றிய உண்மைக்கு அவர்கள் தங்களைத் திறக்கவில்லை என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.
தெளிவாகத் தெரிந்த அனைத்தையும் மறுப்பதற்கு, தங்களால் இயன்ற அனைத்தையும் மறைநூல் வல்லுனர்கள் செய்தார்கள் என்றும் கூறிய திருத்தந்தை, இயேசுவால் குணப்படுத்தப்பட்ட பார்வையிழந்தவர், இந்த வல்லுனர்களின் செயல்களுக்கு மாறாக, சிறிது, சிறிதாக ஒளியை நெருங்கினார் என்றும் விளக்கினார்.
பார்வையற்றிருந்த மனிதரின் பயணம், இயேசுவின் பெயரை அறிவதிலிருந்து ஒவ்வொரு கட்டமாக நடந்தது என்றும், இயேசுவால் குணப்படுத்தப்பட்ட பின்னர் அவர் முதலில் இயேசுவை இறைவாக்கினர் என்று கருதி, பின்னர் கடவுளுக்கு நெருக்கமான மனிதரானார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இப்புதுமை, பலரின் அகப் பார்வையற்ற தன்மையை விளக்குகிறது என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆண்டவருக்கு நம்மைத் திறப்பதற்குப் பயப்படக் கூடாது, அவர் நம்மை நல்லவர்களாக்க, நமக்கு ஒளியைக் கொடுக்க, நம்மை மன்னிப்பதற்கு அவர் நமக்காக எப்போதும் காத்திருக்கிறார், இதை நாம் மறக்கக் கூடாது என்றும் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார்.
மேலும், உலகில் அமைதி நிலவுவதற்காக, இத்தாலியின் லொரேத்தோவிலிருந்து உரோமைக்கு நடைப்பயணமாக வந்த படைவீரர்களை இவ்வுரையின் இறுதியில் வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.