2014-03-31 16:11:41

இளைய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்டுச் செயல்பட சலேசிய சபையினருக்கு திருத்தந்தை அழைப்பு


மார்ச்,31,2014. நாம் வாழும் இக்காலத்தின் எதிர்பார்ப்புக்களையும் சவால்களையும் புரிந்துகொள்ள, குறிப்பாக இளைய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொண்டு செயல்பட தூய ஆவி உதவுவாராக என இத்திங்களன்று சலேசிய சபை உயர்மட்டக் குழுவிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சலேசிய சபையின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அருட்திரு ஆஞ்சலோ ஃபெர்னான்டஸ் ஆர்த்திமே மற்றும் அத்துறவுசபையின் புதிய நிர்வாகக்குழுவை இத்திங்கள் காலை திருப்பீடத்தில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த திருத்தந்தை, ஆன்மாக்களுக்கான பணியில் உலகப் பொருட்களை நாடிச்செல்லாமல், இறைவனையும் அவர் அரசையும் நாடவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
புனித தோன்போஸ்கோவின் எடுத்துக்காட்டான வாழ்வு, நாம் பற்றற்ற வாழ்வை மேற்கொள்ளவேண்டும் எனக்கூறுவதுடன், ஏழைகளுக்கு நெருக்காமாயிருத்தலையும், நம் உடமைகளை நிர்வகிப்பதில் வெளிப்படையாகவும், பொறுப்புடனும் செயல்படவேண்டும் என்பதையும் எதிர்பார்க்கின்றது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இளைஞர்களுடன் பணியாற்றும் சலேசிய துறவுசபையினர், இளைஞர்களின் வேலைவாய்ப்பற்ற நிலைகள், அதன் எதிர்மறை விளைவுகள் போன்றவற்றை உணர்ந்து பணியாற்றுவதோடு, இளையோரை நீதி மற்றும் அமைதியின் கருவிகளாக உருவாக்கவேண்டும் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
உண்மை அன்பு இல்லாமையே பல்வேறு தீமைகளுக்குக் காரணம் என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.