2014-03-29 15:39:02

படைப்பைப் பாதுகாக்க வேண்டுமென்ற பொறுப்பை மனிதக் குடும்பம் முழுவதும் உணர வேண்டும், திருத்தந்தை பிரான்சிஸ்


மார்ச்,29,2014. படைப்பைப் பாதுகாப்பதற்குத் தாங்கள் கொண்டிருக்கும் பொறுப்பை மனிதக் குடும்பங்களும், இவ்வுலகமும் உணர்நது செயல்பட வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுள்ளார்.
“குடும்பம் படைப்பின் பாதுகாவலர்” என்ற தலைப்பில், திருப்பீட குடும்ப அவையும், Greenaccord அமைப்பும் இணைந்து உரோமையில் இச்சனிக்கிழமையன்று நடத்திய கூட்டத்துக்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வாழ்வின் கொடையைப் பாதுகாக்கும் சலுகையைக் கொண்டுள்ள குடும்பம், படைப்பு எனும் மாபெரும் கொடையை மதித்துப் பாதுகாப்பதைக் கற்றுக்கொடுக்கும் அடிப்படைத் தளமாகவும் அமைந்துள்ளது என, தனது செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இக்கூட்டத்தினருக்குத் தனது ஆசீரையும் வழங்கியுள்ளார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இச்செய்தியை, அவரின் பெயரால் இக்கூட்டத்துக்கு அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.
மேலும், கடவுளுக்கு இடமளிக்காத ஒரு சமுதாயத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்; இது தினம்தினம் நம் இதயங்களை மரத்துப்போகச் செய்கின்றது என்று, இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.