2014-03-29 15:38:55

திருத்தந்தை பிரான்சிஸ் : தனது இயலாமையை அறிபவரால் மட்டுமே, சகோதரத்துவ உறவுகளை உருவாக்க முடியும்


மார்ச்,29,2014. தனது வலுவின்மையை, தனது வரையறைகளை அறிபவரால் மட்டுமே திருஅவையிலும், சமுதாயத்திலும் சகோதரத்துவ மற்றும் உறுதியான உறவுகளைக் கட்டியெழுப்ப முடியும் என்று, இச்சனிக்கிழமையன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலிய பார்வையற்ற மற்றும் காதுகேளாத அமைப்புகளின் மாற்றுத்திறனாளிகளை, திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் இயேசுவைச் சந்திப்பது பற்றியும், இயேசு சமுதாயத்தில் மக்களைத் தேடிவந்து சந்தித்தது பற்றியும் விளக்கினார்.
யூத சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட சமாரியப் பெண்ணை இயேசு சந்தித்ததிலிருந்து, தனக்குச் சாட்சி அளிக்க அவர் எத்தகைய மக்களைச் சந்திக்க விரும்புகிறார் என்பது தெளிவாகின்றது என்றுரைத்த திருத்தந்தை, பிறவியிலேயே பார்வையற்றிருந்த மனிதர் எவ்வாறு இயேசுவுக்குச் சாட்சி சொன்னார் என்பதையும் விளக்கினார்.
அதிகபட்ச பாதுகாப்பில் இருந்த பரிசேயர்களின் தலைவர்கள் இயேசுவை பாவி என்று தீர்ப்பிட, இயேசுவால் மீண்டும் பார்வை பெற்ற அம்மனிதர் இயேசுவுக்காக வாதாடியதோடு இறுதியில் அவர்மீதான விசுவாசத்தையும் அறிக்கையிட்டார் எனவும் கூறினார் திருத்தந்தை.
சந்திப்புக் கலாச்சாரம், முற்சார்பு கலாச்சாரம் என இரு முரண்பட்ட கலாச்சாரங்களை இங்கு பார்க்கிறோம் என்றும், நோயுற்ற, மாற்றுத்திறனாளியான ஒருவர் தனது வரையறைகளுக்கு உட்பட்டு சந்திப்பின் சாட்சியாக மாறினார் என்றும் உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசு உங்களைச் சந்திப்பதற்கு வழிவிடுங்கள், அவர் ஒருவர் மட்டுமே மனிதரின் இதயத்தை உண்மையிலேயே அறிந்திருப்பவர், அவர் வாழ்வு மற்றும் நம்பிக்கைக்குத் திறப்பார் என்றும் தான் சந்தித்த மாற்றுத்திறனாளிகளிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலகில் ஏறக்குறைய 4 கோடியே 50 இலட்சம் பேர் பார்வையற்றவர்கள் மற்றும் 13 கோடியே 50 இலட்சம் பேர் பார்வைப் பிரச்சனை உள்ளவர்கள் என உலக நலவாழ்வு நிறுவனம் கணக்கிட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.