2014-03-28 16:36:03

மடகாஸ்கர் ஆயர்களிடம் திருத்தந்தை : குடிமக்களுக்கான பணியில் எப்பொழுதும் நீதியையும் ஒன்றிப்பையும் தேடுங்கள்


மார்ச்,28,2014. பல ஆண்டுகளாக கடினமான சூழலை எதிர்நோக்கியுள்ள மடகாஸ்கர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் ஒவ்வொரு மனிதரின் உரிமைகளும் கடமைகளும் மதிக்கப்பட வேண்டுமெனக் கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆயர்கள் ஐந்தாண்டுக்கொருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் அட் லிமினா சந்திப்பில், இவ்வெள்ளியன்று மடகாஸ்கர் நாட்டின் 25 ஆயர்களைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், அதிகாரிகளுடன் சுமுகமான உறவை மேற்கொண்டு, குடிமக்களுக்கான பணியில் நீதியையும் ஒன்றிப்பையும் எப்பொழுதும் தேடுமாறு வலியுறுத்தினார்.
ஆயர்களின் செயல்களும் பேச்சும் அவர்களுக்கிடையே ஒற்றுமை நிலவுவதை வெளிப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, நற்செய்தி அறிவிப்புக்கும் மனித முன்னேற்றத்துக்கும் இடையே இருக்கும் நெருக்கமான தொடர்பைச் சுட்டிக்காட்டினார்.
மடகாஸ்கர் சமுதாயத்தின் கல்வியறிவை மேம்படுத்தவும், அரசுப் பள்ளிகளில் கிறிஸ்தவ விழுமியங்கள் போதிக்கப்படுவதில் கவனம் செலுத்தவும் ஆயர்கள் முயற்சிக்குமாறும் கூறிய திருத்தந்தை, உறுதியான குடும்பங்களைக் கட்டி எழுப்பவும், கிறிஸ்தவர்களின் விசுவாச வாழ்வு அன்றாட வாழ்வில் வெளிப்படுத்தப்படவும் ஆவன செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
குருத்துவ மற்றும் துறவற வாழ்வுக்கானப் பயிற்சிகளில் கன்னிமையும் பணிவும் உயரிய இடத்தைக் கொண்டிருப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்குமாறும், தனிமை, வளங்கள் பற்றாக்குறை, பலவீனமானவர்கள் என ஒவ்வொரு குருவின் வாழ்வு நிலையைப் புரிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை ஆயர்கள் செய்யுமாறும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்தியப் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மடகாஸ்கர் தீவு நாட்டின் ஆயர்களின் பணிகளை ஊக்குவித்ததோடு அந்நாட்டினருக்குத் தனது ஆசீரையும் செபங்களையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.