2014-03-28 16:35:40

திருத்தந்தை பிரான்சிஸ், கிரீஸ் அரசுத்தலைவர் சந்திப்பு


மார்ச்,28,2014. கிரீஸ் நாட்டு அரசுத்தலைவர் Karolos Papoulias அவர்களை இவ்வெள்ளிக் கிழமையன்று திருப்பீடத்தில் 35 நிமிடங்கள் தனியே சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அதற்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி ஆகிய இருவரையும் சந்தித்தார் அரசுத்தலைவர் Karolos Papoulias.
திருப்பீடத்துக்கும் கிரீஸ் நாட்டுக்கும் இடையே நிலவும் நல்லுறவு, குறிப்பாக, அந்நாட்டில் சமயக் குழுக்களின் அதிகாரப்பூர்வ நிலைமை, சமுதாயத்தில் மதத்தின் பங்கு, கிறிஸ்தவ சபைகளிடையே ஒத்துழைப்பு போன்ற விவகாரங்கள் இச்சந்திப்புகளில் இடம்பெற்றதாக திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
மேலும், உலக அளவில் காணப்படும் பொருளாதார நெருக்கடி, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கிரீஸ் நாட்டின் பங்களிப்பு, மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்களின் எதிர்காலம், உலகின் பல்வேறு பகுதிகளைப் பாதித்துள்ள மோதல்கள், அரசியல் உறுதியற்றதன்மை ஆகிய விவகாரங்களும் இச்சந்திப்புகளில் பேசப்பட்டதாக அப்பத்திரிகை அலுவலகம் கூறியது.
ஆண்கள், பெண்கள் என எட்டுப் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்த அரசுத்தலைவர் கிரீஸ் Karolos Papoulias அவர்கள் ஆர்த்தடாக்ஸ் சபையின் மகிமை என்ற தொகுப்பை திருத்தந்தைக்கு வழங்கினார். திருத்தந்தையும், அமைதியின் வானதூதர் என்ற உருவத்தையும், "நற்செய்தியின் மகிழ்வு"(Evangelii gaudium) என்ற தனது திருத்தூது அறிவுரை பிரதி ஒன்றையும் பரிசாக வழங்கினார்.
அவ்வாறு கொடுத்தபோது, நாம் இப்போது பேசிய அனைத்துச் சமூகப் பிரச்சனைகளும் இந்நூலில் அலசப்பட்டுள்ளன என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.