2014-03-26 15:51:17

கிறிஸ்து பிறப்பு அறிவிப்புத் திருநாள், நமது நம்பிக்கையின் அடித்தளமான திருநாள் - பேராயர் Zimowski


மார்ச்,26,2014. கிறிஸ்து பிறப்பு அறிவிப்புத் திருநாள், நமது நம்பிக்கையின் அடித்தளமான திருநாள், ஏனெனில், இந்த அறிவிப்பே இறைவனை மனித வரலாற்றில் பிரிக்கமுடியாத வண்ணம் பிணைத்தது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
திருப்பீட நலப்பணியாளர் அவையின் தலைவரான பேராயர் Zygmunt Zimowski அவர்கள், இந்த அவையின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் திருப்பலியாற்றியபோது, தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
தனித்துவம் மிக்கதொரு வழியில் இறைவனைச் சந்தித்த மரியன்னை, அந்தப் பெருமையிலேயே தங்கிவிடாமல், தன் உறவினரான எலிசபெத்தை நாடிச் சென்றது நமக்கு நல்லதொரு பாடமாக அமைகிறது என்று கூறிய பேராயர் Zimowski அவர்கள், இறைவனை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்லும் சாதனங்களாக வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை எடுத்துரைத்தார்.
வறியோரை, நோயுற்றோரை, துன்புறுவோரைத் தொடுவதன் வழியாக, நாம் இறைவனைத் தொடமுடியும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிவருவதை எடுத்துரைத்த பேராயர் Zimowski அவர்கள், துன்புறும் மனுக்குலமே கிறிஸ்துவின் உடல் என்பதை மறந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தினார்.
மரியன்னை, கருவில் இறைவனைத் தாங்கும் இத்திருவிழா, கருவில் உருவாகும் ஒவ்வொரு குழந்தையையும் நாம் கொண்டாடவேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது என்று தன் மறையுரையின் இறுதியில் கூறி, இவ்வுயிர்களைக் காப்பதற்கு மீண்டும் ஒருமுறை அழைப்பு விடுத்தார், பேராயர் Zygmunt Zimowski.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.