2014-03-26 16:02:15

அமைதி ஆர்வலர்கள் – 1912ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது(Elihu Root)


மார்ச்,26,2014. Elihu Root, அமெரிக்க ஐக்கிய நாட்டின் 41வது போர்ச் செயலர், 38வது அரசுச் செயலர், செனட்டர், வழக்கறிஞர் எனப் பல முக்கிய பொறுப்புக்களை வகித்து திறம்பட செயலாற்றியவர். பன்னாட்டு அளவில் உறவுகளை மேம்படுத்துவதற்காக இவர் ஆற்றிய பணிகளுக்காக, நொபெல் அமைதி விருது வழங்கப்படுவதாக 1912ம் ஆண்டில் நொபெல் விருதுக் குழு அறிவித்தது. ஆயினும், நொபெல் அமைதி விருது விதிமுறைகளை நிறைவேற்றிய தகுந்த நபர் 1912ம் ஆண்டில் யாரும் இல்லையெனச் சொல்லி அந்த ஆண்டில் Elihu Rootக்கு அவ்விருது வழங்கப்படவில்லை. ஆயினும், இதை இழப்பீடு செய்யும் விதமாக, 1913ம் ஆண்டில் இவருக்கு இரு விருதுகள் வழங்கப்பட்டன. நார்வே நாட்டு ஆஸ்லோவில் நொபெல் உரையை இவர் வழங்கவேண்டியிருந்தது. ஆயினும், இவர் அவ்வுரையை வழங்குவதற்கு முன்னர் முதல் உலகப் போர் தொடங்கிவிட்டது. அதனால் இவர் உரை வழங்கவில்லை. இவர் அந்த உரையில் அனைத்துலக அளவில் போரைத் தவிர்ப்பதற்கு வழிமுறைகளைப் பரிந்துரை செய்திருந்தார். அனைத்துலக உரிமைகள் குறித்து ஹாக் நகரில் நடந்த கருத்தரங்குகளைப் பாராட்டியிருந்தார். அதேசமயம், அக்கருத்தரங்குகளில் பரிந்துரை செய்யப்பட்ட கருத்துக்கள் முழுமையானதாக இல்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தார். பிரச்சனையில் ஈடுபட்டுள்ள நாடுகள் ஒன்றாக அமர்ந்து பேசி ஒரு தீர்வுக்கு வருவது, எதிர்காலத்தில் மோதல்களைத் தவிர்க்க உதவும் என Elihu Root தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். மேலும், உண்மையான பணி ஆர்வ உணர்வோடு செயல்படும் மனிதர்களே உலகுக்குச் செய்தியை வழங்க முடியும்; இம்மனிதர்களே, பண்பாடுள்ள மக்களின் மனச்சான்றைத் தட்டியெழுப்ப முடியும் எனவும் Elihu Root கூறியிருந்தார்.
1845ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி பிறந்த Elihu Root அவர்களின் தந்தை Oren Root, Hamilton கல்லூரியில் வெகு காலம் கணிதப் பேராசிரியராக வேலை செய்தார். இவர் "Cube" என்ற செல்லப்பெயரால் அழைக்கப்பட்டார். இவருடைய சகோதரர் Oren Root Jr., தந்தையைப் பின்பற்றி கணிதப் பேராசிரியராகப் பணி செய்தார். இவரும், "Square" என்ற செல்லப் பெயரால் அழைக்கப்பட்டார். 1864ம் ஆண்டில் ஹாமில்ட்டன் கல்லூரியில் தலைசிறந்த மாணவராகப் பட்டயம் பெற்றிருந்த Elihu Root, தேசிய மற்றும் பன்னாட்டுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலங்களிலும் தனது கல்லூரிக்கு எப்பொழுதும் தனது நற்சேவையை வழங்கி வந்தார். 25 ஆண்டுகளுக்கு மேலாக, ஹாமில்ட்டன் கல்லூரியின் அறக்கட்டளைக்குத் தலைவராகப் பணியாற்றினார். அதேபோல், Elihu Root அவர்களின் மகன்கள், பேரன்கள், கொள்ளுப்பேரன்கள் என எல்லாருமே இக்கல்லூரிக்கு எண்ணற்ற நற்பணிகளைச் செய்துள்ளனர். வழக்கறிஞரான Elihu Root, 1899ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர் William McKinley அவர்களால், அந்நாட்டின் போர்ச் செயலராக நியமிக்கப்பட்டார். இவர் நியமனம் குறித்துப் பாராட்டிய தியோடர் ரூஸ்வெல்ட், நுண்ணறிவுத் திறமையில் சிறந்து விளங்கும் ஒரு மனிதர், தீர்ப்பளிப்பதில் பெரும் யுக்தியைக் கையாளக் கூடியவர், உரிமைக்காகப் பேசுவதில் முற்றிலும் அச்சமற்றவர் என்று Elihu Root பற்றிக் குறிப்பிட்டார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் போர்ச் செயலர் என்ற பணியானது, அந்நாட்டில் போர்த் துறைக்குத் தலைவராக இருப்பது. அதாவது அந்நாட்டின் கடற்படை விவகாரங்கள் உட்பட, இராணுவ விவகாரங்களுக்குத் தலைவராக இருப்பது. இவ்வாறு நியமனம் செய்யப்படுபவர், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவரின் அமைச்சரவையில் உறுப்பினராக இருப்பார்.
Elihu Rootக்கு இராணுவத்தில் அனுபவம் இல்லாமல் இருந்தாலும்கூட, போர்ச் செயலராகப் பணியாற்றிய ஐந்து ஆண்டுகளில் தனது வழக்கறிஞர் திறமையை வைத்து, அமெரிக்க ஐக்கிய நாட்டு இராணுவத்தைச் சீரமைத்து, அதை விரிவுபடுத்தி, இராணுவப் போர்க் கல்லூரியையும் ஆரம்பித்தார். இஸ்பானிய-அமெரிக்கப் போர் முடிவுற்ற பின்னர், அமெரிக்க ஐக்கிய நாட்டின்கீழ் வந்த கியூபா, பிலிப்பைன்ஸ், புவர்த்தோ ரிக்கோ ஆகிய பகுதிகளை திறமையுடன் நிர்வாகம் செய்தார். அரசுத் தலைவர் McKinley இறந்த பின்னர், அரசுத் தலைவர் பொறுப்பேற்ற தியோடர் ரூஸ்வெல்ட்டும் இவரை, போர்ச் செயலராக வைத்திருந்தார். அந்நாட்டின் அரசுச் செயலர் இறந்ததையொட்டி 1905ம் ஆண்டில் Elihu Rootஐ அரசுச் செயலராக நியமித்தார் ரூஸ்வெல்ட். இந்தப் பணியின்போது, Elihu Root மிக முக்கியமான பணியைச் செய்தார் எனச் சொல்லலாம். பன்னாட்டு அளவில் பதட்டநிலைகள் எழுந்தபோது அனைத்துலகச் சட்டத்தின்கீழ் அப்பிரச்சனைகளைத் தணிக்க முயற்சித்தார். பிரச்சனைகள் குறித்து நாடுகள் ஒன்றோடொன்று பேசி, தீர்வு காண்பதே உலகில் அமைதியைப் பெற சிறந்த வழி என்பதை இவர் ஆழமாக உணர்ந்தார். ஆயினும், இதற்கு அதிக காலம் எடுக்கும், இருந்தபோதிலும், ஞானம், பொறுமை, கடும்முயற்சி ஆகியவற்றின் மூலம் அமைதியைப் பெறலாம் என்றும் இவர் கூறினார். Elihu Root, 1937ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி காலமானார்.
மனிதர் தவறுவதில்லை. ஆனால் அவர்கள் முயற்சிகளைக் கைவிடுகின்றனர். நரி எப்போதும் ஆட்டை நீர் ஊற்றில் அமுக்கும் வேலையைச் செய்கின்றது என்று சொன்னவர் Elihu Root. அமெரிக்க வரலாற்றில் சிறந்த நிர்வாகிகளில் ஒருவராக இவர் மதிக்கப்படுகிறார். 1912ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது பெற்ற Elihu Root அவர்களின் எண்ணங்கள் இக்காலத்தில் செயல்படுத்தப்பட்டால் நாடுகளிலும், நாடுகளுக்கு இடையேயும் அமைதி நிலவும். தற்போது இரஷ்யா, உக்ரைன் நாட்டின் கிரிமியா தன்னாட்சிப் பகுதியை தன்னோடு இணைத்துக்கொண்டதால் பிரச்சனை உருவாகியுள்ளது. உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவி விலகியுள்ளார். வெனெசுவேலா நாட்டில், அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்ய சதித்திட்டம் தீட்டினார்கள் என்று அந்நாட்டின் மூன்று விமானப்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு நாடுகளில் மட்டுமல்ல, நாடுகளுக்கு இடையிலும் பிரச்சனைகள் காணப்படுகின்றன. உலகம் அமைதியில் வாழட்டும். அமைதி ஆர்வலர்கள் அதிகமாகட்டும்.








All the contents on this site are copyrighted ©.