2014-03-25 15:31:42

விவிலியத்
தேடல் பரிசேயரும் வரிதண்டுபவரும் உவமை பகுதி - 1


RealAudioMP3 லூக்கா நற்செய்தியில் கதைவடிவில் சொல்லப்பட்டுள்ள அற்புத உவமைகளில் நம் தேடல் பயணம் தொடர்கிறது. நாம் இதுவரை சிந்தித்துள்ள 10 உவமைகளில், பெரிய விருந்து உவமையைத் தவிர ஏனைய 9 உவமைகளும் லூக்கா நற்செய்தியில் மட்டுமே காணப்படும் ஒப்பற்ற கருவூலம். இந்தக் கருவூலத்திலிருந்து இன்று நாம் மற்றொரு உவமையைத் தெரிவு செய்கிறோம். லூக்கா நற்செய்தி, 18ம் பிரிவில், 9 முதல் 14 முடிய உள்ள இறைச்சொற்றோடர்களில் சொல்லப்பட்டுள்ள 'பரிசேயரும் வரிதண்டுபவரும்' என்ற உவமை. இதுவும் லூக்கா நற்செய்தியில் மட்டுமே காணப்படும் ஓர் உவமை.

நம் விவிலியத் தேடலில், இறைவேண்டல் பற்றிய இரு உவமைகளை, ஒன்பது மாதங்களுக்கு முன்பாகச் சிந்தித்தோம். 'நள்ளிரவில் வந்த நண்பர்', 'நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும்' என்ற இரு உவமைகளில் நம் தேடலை மேற்கொண்டோம். லூக்கா நற்செய்தி 18ம் பிரிவில் 1முதல் 8 முடிய உள்ள இறைச்சொற்றோடர்களில் 'நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும்' உவமை கூறப்பட்டுள்ளது. இவ்வுவமையைத் தொடர்ந்து, 9 முதல் 14 முடிய நற்செய்தியாளர் லூக்கா, 'பரிசேயரும் வரிதண்டுபவரும்' உவமையை உடனடியாக இணைத்துள்ளார்.

இவ்வுவமையின் ஆரம்ப வரிகளை வாசித்தால், இதுவும் இறைவேண்டலைச் சொல்லித்தரும் உவமைபோலத் தெரிகிறது. "இருவர் இறைவனிடம் வேண்ட கோவிலுக்குச் சென்றனர்" (லூக்கா 18,9) என்பவை ஆரம்ப வார்த்தைகள். இந்த வார்த்தைகளை ஒன்பது மாதங்களுக்கு முன் நான் வாசித்தபோது, இறை வேண்டலைப் பற்றிய மூன்றாவது உவமையாக இதையும் இணைக்க எண்ணியதுண்டு. லூக்கா நற்செய்தி, 18ம் பிரிவில், கூறப்பட்டுள்ள இவ்விரு உவமைகளை இயேசு ஏன் கூறினார் என்பதைக் கவனமாகப் பார்த்தால், இவ்விரு உவமைகளும் வெவ்வேறு நோக்கங்களுடன் சொல்லப்பட்ட உவமைகள் என்பது தெளிவாகும்.

'நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும்' என்ற உவமையின் ஆரம்பத்தில் நற்செய்தியாளர் லூக்கா கூறுவது இது: "அவர்கள் - அதாவது, மக்கள் - மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாடவேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்." (லூக்கா 18: 1) என்ற வார்த்தைகளில் இவ்வுவமையின் நோக்கம், மனந்தளராமல் செபிப்பது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வுவமையைத் தொடர்ந்துவரும் 'பரிசேயரும் வரிதண்டுபவரும்' உவமையின் துவக்கத்தில் இவ்வுவமையை இயேசு சொன்னதற்கான காரணம் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: "தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்." (லூக்கா 18: 9)

இடைவிடாமல் செபிப்பதற்கு, கைம்பெண்ணின் தொடர் போராட்டத்தை ஓர் எடுத்துக்காட்டாகக் கூறியுள்ளார் இயேசு. தங்களை உயர்வாகவும், பிறரைத் தாழ்வாகவும் எண்ணுவோரை அம்பலப்படுத்த 'பரிசேயரும் வரிதண்டுபவரும்' உவமையை இயேசு கூறினார். ஒன்றையொன்று தொடர்ந்து வரும் இவ்விரு உவமைகளையும் இணைத்துச் சிந்திக்கும்போது ஒரு சில எண்ணங்கள் உள்ளத்தில் எழுகின்றன.

இவ்வுவமைகளில் இயேசு பயன்படுத்தியிருக்கும் கதைக்களம் முதலில் நம் கவனத்தை ஈர்க்கிறது. மனிதக் கண்ணோட்டத்தின்படி, மனந்தளராமல் செபிக்கவேண்டும் என்ற கருத்தைச் சொல்ல, கோவில் பொருத்தமானதொரு கதைக்களமாகத் தெரிகிறது. ஆனால், இயேசு கோவிலைப் பயன்படுத்தவில்லை. அவரது எண்ணங்கள் வேறாக இருந்ததென்று இவ்வுவமையைப் படிக்கும்போது உணரலாம்.
தனக்கு நீதி கிடைக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்தக் கைம்பெண் நேர்மையற்ற நடுவரை நெடுங்காலமாய் தொடர்ந்தார் என்று இயேசு குறிப்பிட்டுள்ளார். நடுவரின் வீடு, நீதிமன்றம், நடந்துசென்ற பாதை என்று, எல்லா இடத்திலும் அந்தக் கைம்பெண் நடுவரைத் தொடர்ந்தார் என்பதை, இயேசு இவ்வுவமையில் மறைமுகமாகக் கூறியுள்ளார்.
இந்தத் தொடர்முயற்சியின்போது, இக்கைம்பெண் கட்டாயம் இறைவனிடமும் தன் விண்ணப்பத்தை எழுப்பியபடியே இருந்திருப்பார் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். இந்தக் கோணத்தில் சிந்திக்கும்போது, இடைவிடாமல் செபிக்கவேண்டும் என்ற பாடத்தை மட்டும் இயேசு சொல்லித்தரவில்லை, இன்னும் கூடுதலாக ஒரு பாடத்தையும் அவர் சொல்லித்தருகிறார் என்பதை உணரலாம். அதாவது, இறைவேண்டலுக்கு எந்த இடமும் தகுந்த இடமே. வீதியோரம், நீதி மன்றம், இறை உணர்வற்ற ஒருவரின் வீட்டு வாசல் என்று எவ்விடமானாலும் அங்கெல்லாம் இறைவனிடம் செபிக்கமுடியும் என்பதையும் 'நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும்' உவமையின் வழியாகச் இயேசு சொல்லித் தந்துள்ளதைப்போல் நான் உணர்கிறேன்.

இறைவேண்டலுக்கேன்று நாம் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கும் இடமான கோவிலை, மற்றொரு கருத்தை வலியுறுத்தும் கதைக்களமாக இயேசு தேர்ந்துள்ளார். தற்பெருமையுடன் வாழ்வது தவறு என்பதைச் சுட்டிக்காட்ட, தற்பெருமையை எளிதில் வளர்க்கக்கூடிய ஓர் அறிஞர்கள் அவை, ஓர் அரண்மனை, திறமையை வெளிக்கொணரும் ஒரு விளையாட்டுத் திடல் என்று எத்தனையோ கதைக்களங்கள் பொருத்தமாகத் தெரிகின்றன. ஆனால், இயேசு இவற்றைப் பயன்படுத்தவில்லை. தற்பெருமையை வெளிச்சமிட்டுக் காட்ட அவர் தேர்ந்துள்ள கதைக்களம், ஒரு கோவில். தற்பெருமை காரணமாக, இறைவனின் இல்லமே ஒரு சுயவிளம்பர அரங்கமாக மாறும் ஆபத்து உள்ளதென்பதை, 'பரிசேயரும் வரிதண்டுபவரும்' உவமை வழியாகக் இயேசு கூறியுள்ளதை உணரலாம்.

உள்ளம் என்ற கோவிலில் இறைவன் குடியிருந்தால், நாம் செல்லும் இடமெல்லாம் புனித இடங்களாகும்; அங்கெல்லாம் நம்மால் செபிக்கமுடியும். அதேநேரம், புனித இடம் என்று கருதப்படும் கோவிலே ஆனாலும், அங்கு நாம் ஏந்திச் செல்லும் உள்ளத்தில் 'நான்' என்ற அகந்தை நிறைந்திருந்தால், கோவிலிலும் செபிக்கமுடியாமல் போகும்.

நம் தேடல் பயணத்தைத் துவங்கியுள்ள 'பரிசேயரும் வரிதண்டுபவரும்' என்ற உவமைக்கும் தவக்காலத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு. நாம் தற்போது கடைபிடித்துவரும் தவக்காலத்தில் இன்னும் சரியாக மூன்று வாரங்கள் எஞ்சியுள்ளன. மார்ச் 26, இப்புதன் முதல் ஏப்ரல் 16, புனித வாரப் புதன் முடிய கணக்கிட்டால், மூன்று வாரங்கள் உள்ளன. இத்தருணத்தில் நாம் 'பரிசேயரும் வரிதண்டுபவரும்' உவமையில் நம் பயணத்தைத் துவக்குவதை பொருத்தமாகக் கருதுகிறேன்.
கீழை வழிபாட்டு முறை ஆர்த்தடாக்ஸ் திருஅவை, தவக்காலத்திற்கு முன்னேற்பாடாக, தயாரிப்பு காலம் என்று மூன்று வாரங்களை ஒதுக்கிவைத்துள்ளது. இந்தத் தயாரிப்புக் காலத்தில் 'வரிதண்டுபவரும் பரிசேயரும்' உவமைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
பொதுவாக இவ்வுவமையை, 'பரிசேயரும் வரிதண்டுபவரும்' என்று அழைப்பதே வழக்கம். இவ்வழகத்திற்கு மாறாக, கீழை வழிபாட்டு முறை ஆர்த்தடாக்ஸ் திருஅவையில் இந்த உவமையை, 'வரிதண்டுபவரும் பரிசேயரும்' என்று அழைப்பது நம் கவனத்தை ஈர்க்கிறது. வரிதண்டுபவருக்கு அவர்கள் முதலிடம் கொடுப்பது, பொருளுள்ளதாகத் தெரிகிறது.
அவர்கள் கூறும் கருத்து இதுதான். தவக்காலம் என்பது மனமாற்றத்திற்கு நம்மை அழைக்கும் காலம். மனமாற்றம் என்பது தாழ்ச்சியுடன் துவங்கவேண்டும். அந்தத் தாழ்ச்சிக்குத் தலைசிறந்த எடுத்துகாட்டு, இவ்வுவமையில் கூறப்பட்டுள்ள 'வரிதண்டுபவர்'. எனவே, இந்த உவமையைக் கொண்டாடும் ஞாயிறுடன் தவக்காலத் தயாரிப்புக்கள் துவங்கட்டும் என்ற எண்ணம் கீழை வழிபாடு முறை ஆர்த்தடாக்ஸ் திருஅவையில் கடைபிடிக்கப்படுகின்றது. இத்திருஅவை உறுப்பினர்கள் தவக்காலத்திற்கு முன்னதாக 3 வாரங்கள் எடுத்துக்கொள்ளும் இவ்வுவமையை, நாம் தவக்காலத்தின் இறுதி மூன்று வாரங்கள் கருதுவதால் பயன்பெறுவோம்!

லூக்கா நற்செய்தியில் மட்டுமே கூறப்பட்டுள்ள இந்தத் தனித்துவம் மிக்க உவமைக்குச் செவிமடுப்போம்.
லூக்கா நற்செய்தி, 18: 9-14
தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்:இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர். பரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: 'கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.' ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, 'கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்' என்றார்.இயேசு, “பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்என்றார்.

இந்த உவமையைக் கேட்கும் ஒவ்வொரு நேரமும், என்னையும் அறியாமல் என் மனதில் எழும் ஓர் எண்ணம்: "அப்பாடா, நான் அந்தப் பரிசேயரைப் போல இல்லை" என்ற ஒரு திருப்தி. பரிசேயருடன் என்னை ஒப்பிட்டு அடையும் திருப்தி, அவரைவிட என்னை நேர்மையாளர் என்று உயர்த்திக்கொள்ளும் ஒரு முயற்சி. இப்படி எண்ணும்போது எனக்கும் பரிசேயருக்கும் வேறுபாடுகள் உள்ளனவா என்ற கேள்வி எழுகிறது. அதே நேரம், என்னை அந்த வரிதண்டுபவர் நிலையில் இணைக்கிறேனா என்ற கேள்வியும் எழுகிறது.

குழந்தைகளுக்கு இவ்வுவமையை விளக்கிக் கூறிய ஓர் ஆசிரியர் இறுதியில் கண்களை மூடி செபிக்கத் துவங்கினார்: "கடவுளே, எங்களை அந்தப் பரிசேயரைப்போல மாற்றாமல் இருப்பதற்காக உமக்கு நன்றி" என்று செபித்தார். இந்த ஆசிரியரின் செபத்திற்கும், இவ்வுவமையில் பரிசேயர் சொன்ன செபத்திற்கும் வேறுபாடு உள்ளதா?
பரிசேயர் என்றதும், நம் மனங்களில் பெரும்பாலான நேரங்களில் ஓர் எதிரொலி போல் ஒலிக்கும் மற்றொரு சொல் 'வெளிவேடக்காரர்'. பரிசேயர்களைப் பற்றிய முற்சார்பு எண்ணங்கள் பலவற்றைச் சுமந்து இவ்வுவமைக்குச் செவிமடுக்கும்போது, இந்த ஆசிரியரைப் போல எண்ணவும், வேண்டவும் நாம் முற்படுவோம். எனவே வருகிற வாரங்களில், குறிப்பாக, இந்தத் தவக்காலத்தில் மீதமுள்ள இந்த வாரங்களில், இயேசு கூறும் இவ்வுவமையைத் திறந்த மனதுடன் நெருங்கி நம் தேடலைத் தொடர்வோம்.








All the contents on this site are copyrighted ©.