2014-03-25 15:41:00

காற்று மாசடைதலே உலக நலவாழ்வுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல், உலக நலவாழ்வு நிறுவனம்


மார்ச்,25,2014. காற்று மாசடைவதே உலகின் நலவாழ்வுக்கு ஒரே பெரிய அச்சுறுத்தல் என்று WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.
உலகில் 2012ம் ஆண்டில் இடம்பெற்ற இறப்புகளுள் எட்டுப் பேருக்கு ஒருவர், காற்று மாசுகேடு தொடர்புடைய நோயால் இறந்துள்ளனர் என்று, WHO நிறுவனத்தின் புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதய நோய், நுரையீரல் நோய், நுரையீரல் புற்றுநோய், ஸ்ட்ரோக் போன்ற நோய்களால் பலர் இறந்துள்ளதற்கு, காற்று மாசுபாடே காரணம் என்றும், இந்தியா, இந்தோனேசியா, மேற்கு பசிபிக் உட்பட தென்கிழக்கு ஆசியப் பகுதி, காற்று மாசுகேடால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அவ்வாய்வு கூறுகின்றது.
சமையல் நெருப்புடன் வேலை செய்யும் பெண்களும் அவர்களின் குழந்தைகளும் அளவுக்கு மீறி பாதிக்கப்படுவதாகவும், இந்தியா, சீனா போன்ற அதிவேகத் தொழில் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் இந்த வெளிப்புற காற்று மாசுகேடு ஒரு முக்கிய பிரச்சனை என்றும் உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.
அதேநேரம், வெளிப்புற காற்று மாசுகேட்டைக் கட்டுப்படுத்தும் கொள்கைகளை அரசுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் WHO நிறுவனம் கேட்டுள்ளது.
2012ம் ஆண்டில் ஏறக்குறைய 70 இலட்சம் பேர் காற்று மாசுகேடால் இறந்துள்ளனர். .

ஆதாரம் : AFP







All the contents on this site are copyrighted ©.