2014-03-24 17:32:31

தாட்டிபத்ரி ஞானம்மா இன்னய்யா அவர்களை, புனிதர் நிலைக்கு உயர்த்தும் முயற்சிகளுக்கு, திருப்பீடம் உத்தரவு


மார்ச்,24,2014. இறைவனின் அழைப்பு, அதிகாரத்தில் உள்ள சக்தி படைத்தவர்களுக்கு வழங்கப்படுவதைவிட, எளிய மக்களுக்கே அதிகம் வழங்கப்படுகிறது என்று சென்னை மயிலைப் பேராயர் ஜார்ஜ் அன்டனிசாமி அவர்கள் கூறினார்.
புனித அன்னம்மாளின் பெயரைத் தாங்கிய இரு அருள் சகோதரிகளின் துறவறச் சபைகளுக்கு மூலகாரணமாக அமைந்த தாட்டிபத்ரி ஞானம்மா இன்னய்யா அவர்களை, புனிதர் நிலைக்கு உயர்த்தும் முயற்சிகளை, சென்னை மயிலை உயர் மறைமாவட்டம் துவக்கலாம் என்ற உத்தரவை, திருப்பீடம் அண்மையில் அளித்துள்ளது.
இந்த உத்தரவின் அடிப்படையில், ஞானம்மா அவர்களை 'இறைவனின் ஊழியர்' என்று அறிவித்து, அவர் வாழ்ந்த கீழச்சேரி என்ற ஊரில், நன்றித் திருப்பலியாற்றிய சென்னை மயிலைப் பேராயர் அன்டனிசாமி அவர்கள், புனிதர்கள் பின்பற்றியச் சாட்சிய வாழ்வை, அருள் பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் பின்பற்றவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
1822ம் ஆண்டு பிறந்த ஞானம்மா அவர்கள், வேதியர் ஒருவரை மணந்து, 5 மகன்களைப் பெற்றார். 37வது வயதில் கணவனை இழந்து, கைம்பெண் ஆன ஞானம்மா அவர்களின் மகன்களில் நால்வர் அருள் பணியாளர்களாக திருநிலை பெற்றனர்.
தன் குடும்பத்திற்குரியக் கடமைகளை நிறைவேற்றியபின், இறைவனுக்கு இன்னும் அதிகமாகப் பணியாற்ற விரும்பிய ஞானம்மா அவர்கள், "புனித அன்னம்மாள் அருள் சகோதரிகள்" என்ற பெயரில் துறவு சபையொன்றை நிறுவக் காரணமானார்.
1874ம் ஆண்டு தன் 52ம் வயதில் இறைவனடி சேர்ந்த ஞானம்மா அவர்கள் உருவாக்கிய இத்துறவு சபை, தற்போது, "சென்னை புனித அன்னம்மாள் அருள் சகோதரிகள்" மற்றும் "பிரங்கிபுரம் புனித அன்னம்மாள் அருள் சகோதரிகள்" என்ற இரு துறவு சபைகளாக இயங்கி வருகிறது.
இறையடியார் ஞானம்மா அவர்களின் புனிதத்துவ வாழ்வை வத்திக்கான் அங்கீகரிக்கும் தருணத்தில், இவரே, இந்தியாவில் பொதுநிலையைச் சேர்ந்தவர்களில் புனிதர் நிலை அடையும் முதல் பெண்ணாக இருப்பார் என்று "சென்னை புனித அன்னம்மாள் அருள் சகோதரிகள்" சபையின் தலைவர், அருள் சகோதரி லீமா ரோஸ் அவர்கள் வத்திக்கான் வானொலி தமிழ் குழுவிடம் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.