2014-03-24 17:27:48

சீரோ ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் இறைபதம் சேர்ந்ததையொட்டி திருத்தந்தை பிரான்சிஸின் இரங்கல் செய்தி


மார்ச்,24,2014. சீரோ ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை Ignatius Zakka Iwas இறைபதம் சேர்ந்ததையொட்டி தன் இரங்கற்செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பல்வேறு துன்பகாலங்களில் தன் மக்களை மனவுறுதியுடனும் ஞானத்துடனும் சீரோ ஆர்த்தடாகஸ் முதுபெரும் தந்தை நடத்திச்சென்றுள்ளதாக தன் பாராட்டை வெளியிட்டுள்ள திருத்தந்தை, அவரை அமைதி மற்றும் உரையாடலின் மனிதர் என அழைத்துள்ளார்.
இரண்டாம் வத்திக்கான பொதுச்சங்கத்தில் முதுபெரும் தந்தை பார்வையாளராக பங்கேற்றதை நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை, சிரிய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை, திருஅவைக்கு ஆற்றியுள்ள பங்களிப்பையும் பாராட்டியுள்ளார்.
ஈராக்கில் பிறந்த முதுபெரும் தந்தை Ignatius Zakka Iwas, 1980ம் ஆண்டு முதல் சீரோ ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் முதுபெரும் தலைவராக பணியாற்றிவந்துள்ளார். இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜெர்மனியில் தன் 80ம் வயதில் காலமானார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.