2014-03-22 15:24:55

மார்ச் 23, தவக்கால நற்செய்தி : யோவான் 4, 5-42


அக்காலத்தில் இயேசு சமாரியாவில் உள்ள சிக்கார் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தார். யாக்கோபு தம் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே அந்த ஊர் இருந்தது. அவ்வூரில் யாக்கோபின் கிணறும் இருந்தது. பயணத்தால் களைப்புற்றிருந்த இயேசு கிணற்று ஓரமாய் அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல். அவருடைய சீடர் உணவு வாங்குவதற்காக நகருக்குள் சென்றிருந்தனர். சமாரியப் பெண் ஒருவர் தண்ணீர் மொள்ள வந்தார். இயேசு அவரிடம், “குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்” என்று கேட்டார். அச்சமாரியப் பெண் அவரிடம், “நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?” என்று கேட்டார். ஏனெனில் யூதர்கள் சமாரியரோடு பழகுவதில்லை. இயேசு அவரைப் பார்த்து, “கடவுளுடைய கொடை எது என்பதையும் 'குடிக்கத் தண்ணீர் கொடும்' எனக் கேட்பவர் யார் என்பதையும் நீர் அறிந்திருந்தால் நீரே அவரிடம் கேட்டிருப்பீர்; அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்” என்றார். அவர் இயேசுவிடம், “ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்? எம் தந்தை யாக்கோபை விட நீர் பெரியவரோ? அவரே எங்களுக்கு இக்கிணற்றை வெட்டித் தந்தார். அவரும் அவருடைய மக்களும் கால்நடைகளும் இதிலிருந்துதான் தண்ணீர் குடிப்பது வழக்கம்” என்றார். இயேசு அவரைப் பாhத்து, “இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்” என்றார். அப்பெண் அவரை நோக்கி, “ஐயா, அத்தண்ணீரை எனக்குக் கொடும்; அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது; தண்ணீர் மொள்ள நான் இங்கு வரத்தேவையும் இருக்காது” என்றார். இயேசு அவரிடம், “நீர் போய், உம் கணவரை இங்கே கூட்டிக் கொண்டு வாரும்” என்று கூறினார். அப்பெண் அவரைப் பார்த்து, “எனக்குக் கணவர் இல்லையே” என்றார். இயேசு அவரிடம், “'எனக்குக் கணவர் இல்லை' என நீர் சொல்வது சரியே. உமக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள் என்றாலும் இப்போது உம்முடன் இருப்பவர் உம் கணவர் அல்ல. எனவே நீர் கூறியது உண்மையே” என்றார். அப்பெண் அவரிடம், “ஐயா, நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டுகொண்டேன். எங்கள் முன்னோர் இம்மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால் நீங்கள் எருசலேமில்தான் வழிபட வேண்டும் என்கிறீர்களே” என்றார். இயேசு அவரிடம், “அம்மா, என்னை நம்பும். காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள். யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது. காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது! அப்போது உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர். தம்மை வழிபடுவோர் இத்தகையோராய் இருக்கவே தந்தை விரும்புகிறார். கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும்” என்றார். அப்பெண் அவரிடம், “கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்” என்றார். இயேசு அவரிடம், “உம்மோடு பேசும் நானே அவர்” என்றார். அந்நேரத்தில் இயேசுவின் சீடர் திரும்பி வந்தனர். பெண் ஒருவரிடம் அவர் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றனர். எனினும் 'என்ன வேண்டும்?' என்றோ, 'அவரோடு என்ன பேசுகிறீர்?' என்றோ எவரும் கேட்கவில்லை. அப்பெண் தம் குடத்தை விட்டுவிட்டு ஊருக்குள் சென்று மக்களிடம், “நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் சொன்ன மனிதரை வந்து வாருங்கள். அவர் மெசியாவாக இருப்பாரோ!” என்றார். அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு இயேசுவிடம் வந்தார்கள். அதற்கிடையில் சீடர், “ரபி, உண்ணும்” என்று வேண்டினர். இயேசு அவர்களிடம், “நான் உண்பதற்குரிய உணவு ஒன்று உண்டு. அது உங்களுக்குத் தெரியாது” என்றார். “யாராவது அவருக்கு உணவு கொடுத்திருப்பார்களோ” என்று சீடர்கள் தங்களிடையே பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களிடம், “என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு. ‘நான்கு மாதங்களுக்குப் பின்தான் அறுவடை’ என்னும் கூற்று உங்களிடையே உண்டே! நிமிர்ந்து வயல்வெளிகளைப் பாருங்கள். பயிர் முற்றி அறுவடைக்குத் தயாராய் உள்ளது. அறுப்பவர் கூலி பெறுகிறார்; நிலைவாழ்வு பெறுவதற்காக மக்களைக் கூட்டிச் சேர்க்கிறார். இவ்வாறு விதைப்பவரும் அறுப்பவரும் ஒருமிக்க மகிழ்ச்சியடைகின்றனர். நீங்கள் உழைத்துப் பயிரிடாததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் உழைத்தார்கள்; ஆனால் நீங்கள் அந்த உழைப்பின் பயனை அடைந்தீர்கள். இவ்வாறு 'விதைப்பவர் ஒருவர்; அறுவடை செய்பவர் வேறு ஒருவர்' என்னும் கூற்று உண்மையாயிற்று” என்றார். 'நான் செய்தவை அனைத்தையும் என்னிடம் சொன்னார்' என்று சான்று பகர்ந்த பெண்ணின் வார்த்தையை முன்னிட்டு அவ்வவூரிலுள்ள சமாரியர் பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். சமாரியர் அவரிடம் வந்தபோது அவரைத் தங்களோடு தங்குமாறு கேட்டுக்கொண்டனர். அவரும் அங்கு இரண்டு நாள் தங்கினார். அவரது வார்த்தையை முன்னிட்டு இன்னும் பலர் அவரை நம்பினர். அவர்கள் அப்பெண்ணிடம், “இப்போது உன் பேச்சைக் கேட்டு நாங்கள் நம்பவில்லை; நாங்களே அவர் பேச்சைக் கேட்டோம். அவர் உண்மையிலே உலகின் மீட்பர் என அறிந்து கொண்டோம்” என்றார்கள்.








All the contents on this site are copyrighted ©.