2014-03-22 16:08:36

திருத்தந்தை பிரான்சிஸ், நைஜீரிய அரசுத்தலைவர் சந்திப்பு


மார்ச்,22,2014. நைஜீரிய அரசுத்தலைவர் Ebele Jonathan Goodluck அவர்களை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் தனியே சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி ஆகிய இருவரையும் சந்தித்தார் நைஜீரிய அரசுத்தலைவர் Goodluck.
திருப்பீடத்துக்கும் நைஜீரிய நாட்டுக்கும் இடையே நிலவும் ஒத்துழைப்பு, கல்வி, நலவாழ்வு, பல்சமய உரையாடல் போன்ற துறைகளில் திருஅவை ஆற்றிவரும் பணிகள் போன்ற விவகாரங்கள் இச்சந்திப்புகளில் இடம்பெற்றதாக திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
மனித மாண்பையும், சமய சுதந்திரம் தொடங்கி அனைத்து அடிப்படை உரிமைகளையும் பாதுகாத்தல் போன்ற விவகாரங்கள் வலியுறுத்தப்பட்டதோடு, அந்நாட்டில் இடம்பெறும் அனைத்து வன்முறைகளுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது எனக் கூறிய திருப்பீட பத்திரிகை அலுவலகம், அந்நாடு விரைவில் அமைதியான நல்லிணக்க வாழ்வுக்குத் திரும்பும் என்ற நம்பிக்கையும் இச்சந்திப்புகளில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறியது.
ஆப்ரிக்காவின் மத்திய மற்றும் சஹாராவையடுத்த பகுதிகளில் இடம்பெறும் மோதல்கள் குறித்தும், நைஜீரியாவில் கத்தோலிக்கத் திருஅவையின் நிலைமை குறித்தும், உலகை அச்சுறுத்திவரும் பல்வேறு மோதல்கள், உரையாடல் மூலமாக முடிவுக்குக் கொண்டுவரப்படுமாறும் இச்சந்திப்புகளில் பேசப்பட்டதாக அப்பத்திரிகை அலுவலகம் கூறியது.
நைஜீரியாவின் முஸ்லிம் பிரதிநிதி தவிர மற்ற மதங்களின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்த அரசுத்தலைவர் Goodluck அவர்கள், திருத்தந்தைக்கு கம்பளம் ஒன்றைப் பரிசாக வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.