2014-03-22 14:57:27

தவக்காலம் 3ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 ஐந்து நாட்களுக்கு முன், (மார்ச் 18, 2014) 'தி இந்து' என்ற நாளிதழில், சிந்தனைக்களம் - வலைஞர் பக்கம் பகுதியில் வெளியான ஒரு கட்டுரை என்னை அதிகம் பாதித்தது. "பள்ளி மாணவர்களிடையே பரவும் 'ஜாதிக் கயிறு' கலாச்சாரம்" என்ற தலைப்பில், ரா.தாமோதரன் என்ற ஆசிரியர் எழுதியிருந்த அக்கட்டுரை உள்ளத்தில் பல கேள்விகளை எழுப்பியது.
"சமீபத்தில் மூன்று காட்சிகள் என் கண்ணில் பட்டன. ஆசிரியராகிய எனக்கு அது பேரதிர்ச்சியாக அமைந்துவிட்டது. இதை உன்னிப்பாகப் பார்க்கும் யாருக்கும் பேரதிர்ச்சியாகத்தான் அமையும். உம். இந்தப் பிள்ளைகள் வாழ்க்கை என்ன ஆகப்போகிறதோ? என்று நீங்கள் சொல்லத் தோன்றும்" என்று அவர் தன் கட்டுரையை ஆரம்பித்திருந்தார். பள்ளி மாணவர்களிடையில் அவர் கண்டதாகக் கூறும் மூன்று காட்சிகளை அவர் விவரித்துள்ளார்:
"முதல்காட்சி. பள்ளிக்கு வரும் ஒரு சில மாணவர்களின் பாடநூல்களில், எழுதும் குறிப்பேடில் அவருடைய பெயருடன் ஜாதிப்பெயரை எழுதி வருவது. இதை முதன்முதலில் பார்த்த எனக்குத் திக்கென்று வாரிபோட்டது. இந்த உலகம் என்ன என்று புரியாத பிஞ்சு மனதில் ஏதோ ஒரு விஷ விதை, அந்த மாணவனின் ஜாதிய அபிமானிகளால் விதைக்கப்பட்டுவிட்டது. என்னிடம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் இதைப்பற்றிக் கேட்டால், பத்தாம் வகுப்பு படிக்கும் என் அண்ணன்தான் எழுதச் சொன்னான் என்கிறான். அவனிடம் கேட்டால், எங்கள் ஊர் ஜாதி அமைப்பைச் சேர்ந்த கல்லூரி அண்ணன்கள் எழுதச் சொன்னார்கள் என்கிறான்... இப்படி எழுதாலாமா? என்கிற கனிவான கேள்விக்கு, அந்த மாணவனின் பதில், வெறும் அழுகை மட்டும்தான். அவனது அழுகை, இன்னதென்று புரியாமல் தவறு செய்துகொண்டிருக்கும் சமூகத்தின் ஒட்டுமொத்த அழுகையாகத்தான் பார்க்கிறேன்" என்று அவர் தன் முதல் காட்சியை விவரிக்கிறார்.
"இரண்டாவது காட்சி. மாணவனின் வலது கையில், கைப்பட்டை அணிவது. அதுவும் சாதாரணக் கைப்பட்டை அல்ல. ஜாதி நிறத்தில் அமைந்த கைப்பட்டை. இது ஒரு குறிப்பிட்ட ஜாதி மாணவர்கள் மட்டும்தான் செய்கிறார்களா என்றால் இல்லை. அந்தந்த பள்ளியில் இருக்கும் ஒரு சில மாணவர்கள், தம் ஜாதிக் கட்சியின் பட்டையை அணிகிறார்கள்... கைகளில் சாமிக்கயிறு போய், தற்போது கருப்பு-வெள்ளை, சிவப்பு-பச்சை,... நீலம்-சிவப்பு கலந்த ஜாதிக்கயிறுகள் அணிந்திருக்கிறார்கள், நாளைய சமுதாயத்தை முன்னேற்றப்போகிற மாணவர்கள்" என்று குறிப்பிடுகிறார்.

மூன்றாவது காட்சியில் அவர் விவரிப்பது சிறிது குரூரமாகத் தெரிகிறது. பள்ளி மாணவர்கள், கைகளில் தங்கள் பெயரைக் ‘காம்பஸ்’ (Compass) கொண்டு கீறி, அந்தக் காயம் ஆறியபின், அப்பெயர் தழும்பாக மாறுவதை மூன்றாம் காட்சியாகக் கூறுகிறார். உடலில் பச்சைக் குத்திக் கொள்வதன் மற்றொரு வடிவம் இதுவோ? தங்கள் பெயர்களை, தங்களுக்கு நெருக்கமானவர்கள், தலைவர்கள், தலைவிகள் பெயர்களைப் பச்சைக் குத்திக்கொள்ளும் பலரைப் பார்த்திருக்கிறோம். தங்கள் சாதிகளையும் பச்சைக் குத்திக்கொள்ளும் மனிதர்களைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்களும் தங்கள் சாதிகளை, உடலிலும் மனதிலும் அழியாத தழும்புகளாக மாற்றுகின்றனரோ என்ற பயம் எழுகிறது.

இம்மூன்று காட்சிகளை விவரிக்கும் ஆசிரியர் தாமோதரன் அவர்கள், இக்காட்சிகளைக் கண்டு, பெற்றோரும் ஆசிரியரும் தலைகுனிய வேண்டும் என்று குறிப்பிடுகிறார். பெற்றோரும், ஆசிரியர்களும் மட்டும் தலைகுனியக் கூடாது. எதிர்காலத் தூண்களை துரும்புகளாக மாற்றிவரும் தமிழ் சமுதாயமே தலைகுனிந்து நிற்கவேண்டும். இவ்விதம் நான் சொன்னதும், தமிழகத்தைத் தவிர இந்தியாவின் பிறபகுதிகளில் வாழ்பவர்கள் உயர்ந்தவர்கள், உத்தமர்கள் என்று அர்த்தம் அல்ல. தமிழர்களைத் தலைகுனியச் செய்வதும் என் நோக்கம் அல்ல.
இந்த விமர்சனப் பார்வையை இன்னும் விரிவாக்கினால், உலக மக்கள் அனைவருமே தலைகுனிந்து நிற்க வேண்டியவர்கள் என்பது எளிதில் விளங்கும். பிரிவுகளும், பிளவுகளும் இல்லாத எதிர்காலத்தை, அடுத்தத் தலைமுறைக்கு உருவாக்கத் தவறியுள்ள நம் தலைமுறையினர் அனைவருமே குற்றவாளிக்கூண்டில் நிற்கவேண்டும்.

"பள்ளி மாணவர்களிடையே பரவும் 'ஜாதிக் கயிறு' கலாச்சாரம்" என்ற இக்கட்டுரையுடன் ஞாயிறு சிந்தனையைத் துவக்குவதற்குக் காரணம் உண்டு. இக்கட்டுரை என் உள்ளத்தைச் சங்கடப்படுத்தியது போலவே, இதற்கு வாசகர்கள் எழுதியுள்ள பதில் கருத்துக்களும் மனதைச் சங்கடப்படுத்தின.
சாதியம் என்ற விஷ விதை, இளையோர் மனங்களில் விதைக்கபப்ட்டுள்ளது என்ற உண்மையைச் சொன்னதும், பெரும்பான்மையான வாசகர்கள் இந்த விஷத்தை விதைப்பது யார் என்று சுட்டிக்காட்டியுள்ளனர். பள்ளிகள், மதங்கள், அரசியல் தலைவர்கள், ஊர்ப் பெரியவர்கள், பழமையில் ஊறிய நம் தாத்தா, பாட்டிகள், நாம் காணும் திரைப்படங்கள், நண்பர்கள், சாதியச் சங்கங்கள்... என்று நீஈஈஈஈளமான பட்டியல் ஒன்றை தயாரித்து, பலரைச் சுட்டிக்காட்டியுள்ளனர் வாசகர்கள்.
சுட்டும்விரல் ஒன்று முன்னோக்கி நீளும்போது, மற்ற மூன்று விரல்கள் நம்மை நோக்கி நீள்வதை நாம் அறிவோம். நம்மை நோக்கி நீளும் விரல்கள் நம்மிடம் கூறுவது இதுதான்: பிரிவுகளை, பிளவுகளை உலகில் வளர்க்க நீ எவ்வகையில் உதவி செய்துள்ளாய்? அல்லது, பிரிவுகளைக் களைய நீ எவ்வகையில் முயற்சிகள் செய்துள்ளாய்? என்ற கேள்விகளை இவ்விரல்கள் நம்மிடம் எழுப்புகின்றன.

நம்மிடம் வேரூன்றியுள்ள பிரிவுகளை வேரறுக்க நாம் எவ்வகையில் முயற்சிகளைத் துவக்கலாம் என்பதை இயேசு இன்று நமக்குச் சொல்லித் தருகிறார். இந்த உண்மையை சொல்லித்தர அவர் தேர்ந்துள்ள பள்ளிக்கூடம்... ஒரு கிணற்றடி. அதுவும், யூதர்களின் வெறுப்புக்கும், ஏளனத்திற்கும் உள்ளான சமாரியர் வாழ்ந்த பகுதியில் இருந்த ஒரு கிணற்றடி. ஆச்சரியங்களைத் தருவதில் இயேசுவை மிஞ்ச இனி ஒருவர் பிறந்துதான் வரவேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. யோவான் நற்செய்தியில் (யோவான் 4 : 5-42) இன்று நாம் சந்திக்கும் இயேசு, நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்... சொல்லப்போனால், அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார். ஒரு சராசரி யூதன் செய்யக்கூடாத பல செயல்களை இயேசு துணிந்து செய்தார். பல நூறு ஆண்டுகள், பகைமை, பிரிவு, பிளவு ஆகிய உணர்வுகளில் ஊறிப் போயிருந்த யூதர், சமாரியர் என்ற இரு குலத்தவரின் பிரதிநிதிகளாக இயேசுவும் ஒரு சமாரியப் பெண்ணும் கிணற்றடியில் சந்திக்கின்றனர்.
இயேசு அந்தச் சமாரியப் பெண்ணிடம் வலியச்சென்று "குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்." (யோவான் 4:8) என்று கேட்கிறார். வெகு எளிதாக, மேலோட்டமாக ஆரம்பமான இந்த உரையாடல் வெகு ஆழமான உண்மைகளைத் தொடுகின்றது. இந்த உரையாடலின் முடிவில், சமுதாயத்தின் ஓரத்தில் வாழ்ந்த ஒரு பெண், அந்த ஊரையே இயேசுவின் பாதம் கொண்டு வந்து சேர்த்த பெருமையைப் பெறுகிறார். இறைவனைப் பற்றிப் பேச யாருக்குச் சிறிதும் தகுதியில்லை என்று உலகம் ஒதுக்கிவைத்ததோ, அவர்களே இயேசுவை உலகறியச் செய்த தலைசிறந்த சாட்சிகள் ஆயினர் என்பதை விவிலியமும், திருஅவை வரலாறும் கூறியுள்ளன.

இந்த நற்செய்திப் பகுதி இன்றைய உலகில் நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளைக் கிளறிவிடுகிறது. பல பாடங்களையும் சொல்லித் தருகிறது. கிணற்று மேட்டில் நடக்கும் ஓர் உரையாடல் இது. கிணற்று மேடு, டீக்கடை பெஞ்ச், ஊரின் நடுவே உள்ள ஆலமரத்தடி என்று வெகு சாதாரண, வெகு எளிய இடங்களில் சமுதாயம், அரசியல், வாழ்வின் அடிப்படைத் தத்துவங்கள் அலசப்படுவது நமக்கெல்லாம் தெரிந்ததுதான். இந்த மிகச் சாதாரணமான இடங்களில் இறைவனைப் பற்றிய பாடங்களையும் கற்றுக் கொள்ளலாம் என்பதை இயேசு இன்று நமக்கு உணர்த்துகிறார்.
தவித்த வாய்க்குத் தண்ணீர் தருவதிலும் சமுதாயப் பிளவுகள் குறுக்கிடுவதை இந்த உரையாடல் தெளிவாக்குகிறது. இந்தப் பிளவுகளைக் கடந்து செல்லும்போதுதான் உயிருள்ள ஊற்று நீரை நாம் பருக முடியும் என்பதை இயேசு தெளிவாக்குகிறார்.

தண்ணீரைப்பற்றி பேசும்போது, நெருடலான பல எண்ணங்கள் மனதில் அலைமோதுகின்றன. ஐக்கிய நாடுகள் நிறுவனம் மார்ச் 22ம் தேதியை உலகத் தண்ணீர் நாள் என்று சிறப்பிக்கிறது. இவ்வாண்டு, கொண்டாடப்பட்ட உலகத் தண்ணீர் நாளன்று, "ஐ.நா.வின் வாழ்வுக்கென நீர்" என்ற விருதை (U.N.Water for Life Award) இந்தியாவும், சிங்கப்பூரும் பெற்றுள்ளன. கடந்த ஆண்டு, பயனுள்ள வகையில் நீரைப் பராமரித்ததற்காக இவ்விரு நாடுகளும் இவ்விருதைப் பெற்றுள்ளன. நீரைப் பராமரிப்பதில் இந்தியா தலைசிறந்த நாடு என்று ஐ.நா.அவை அறிவித்துள்ள விருது, நம்மைத் தலைநிமிரச் செய்கிறது. அதே நேரம், தண்ணீரை வைத்து நம்மிடையே வளர்ந்துள்ள சமுதாய அவலங்கள், நம்மைத் தலைகுனிய வைக்கின்றன.

இறைவன் தந்த அற்புதக் கொடைகளில் ஒன்றான தண்ணீரை, பல வழிகளில் நாம் சீரழித்துள்ளோம். தண்ணீர் தொடர்பாக மனித சமுதாயம் இழைத்துள்ள பல குற்றங்களில், சமுதாயத்தைப் பிரிக்கும் ஓர் ஆயுதமாக தண்ணீரை நாம் மாற்றியுள்ளோம் என்பதே, என்னைப் பொறுத்தவரை, நமது பெரும் குற்றம். பல ஆண்டுகளுக்கு முன், சாதிக்கொரு கிணறு, குளம் என்று பிரிவுகள் செய்தோம். இந்த அவலம் இன்றும் பல இடங்களில் தொடர்வதை அவ்வப்போது நாம் கேள்விப்படுகிறோம். தண்ணீரை மையப்படுத்தி வேறு வகையான பிரிவுகள் இன்று உருவாகியுள்ளன. தண்ணீர் ஒரு பொருளாதார முதலீடு என்பதை உணர்ந்துள்ள பல செல்வர்கள், தண்ணீரைத் தனியுடைமையாக்கி வரும் கொடூரம் பெருகிவருகிறது. தவித்த வாய்க்குத் தண்ணீர் தந்த நம் பண்பாடு குறைகிறது. மறைகிறது. தண்ணீரைக் காசாக்கும் வியாபாரம் வளர்ந்து வருகிறது. இந்த வியாபாரத்தால் தண்ணீர் 'நீலத் தங்கமாய்' (Blue Gold) மாறி வருகிறது.
இந்தியாவின் மற்றொரு காந்தி என்ற புகழுக்குரியவரும், இயற்கையைப் பாதுகாக்கப் பல வழிகளிலும் போராடி வரும் பசுமைப் புரட்சி வீரருமான, 87 வயதான சுந்தர்லால் பகுகுணா கூறியது இது: "முதல், இரண்டாம் உலகப் போர்கள் ஐரோப்பிய நாடுகளின் தீராதப் பேராசை பசியால் உருவானது. மூன்றாம் உலகப் போரென்று ஒன்று வந்தால், அது நீரைப் பங்கிடுவது குறித்துதான் எழும்." இதே அச்சத்தை உலகத் தலைவர்கள் பலரும் வெளிப்படுத்தியுள்ளனர். தண்ணீரை ஒரு சாதிய ஆயுதமாகப் பயன்படுத்துவோருக்கும், தனியுடமைத் தங்கமாகப் பாவிக்கும் சுயநலச் செல்வந்தர்களுக்கும் சமாரியக் கிணற்றடியில் நடத்திய ஒரு பாடத்தின் வழியாக, இயேசு சாட்டையடி வழங்குகிறார்.

இறைவனின் கொடையான தண்ணீரை சாதி, இனம், பொருளாதாரம் என்ற கூறுகளில் பிரித்துள்ளது போதாதென்று, இறைவனையும் பல காரணங்களுக்காகப் பிரித்து கூறுபோடும் மடமை முயற்சிகளில் மனித சமுதாயம் ஈடுபட்டுள்ளதையும் இயேசு இன்றைய நற்செய்தியில் சுட்டிக்காட்டுகிறார். இறைவனைத் தொழுவதற்கு மலைகளையும், எருசலேம் புனித நகரையும் தேடாதீர்கள் என்று கூறும் இயேசு, தொடர்ந்து அப்பெண்ணிடம் கூறும் அழகிய எண்ணங்களை இன்றைய நற்செய்தியிலிருந்து கேட்போம்:
யோவான் நற்செய்தி 4 : 21, 23-24
இயேசு சமாரியப் பெண்ணிடம், “அம்மா, என்னை நம்பும். காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள்... உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர். தம்மை வழிபடுவோர் இத்தகையோராய் இருக்கவே தந்தை விரும்புகிறார். கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும்என்றார்.

கடவுளையும், இயேசுவையும் சிறைப்படுத்தும் பல இலக்கணங்கள், எல்லைக்கோடுகள் அனைத்தும் இன்றைய நற்செய்தியில் அழிக்கப்படுகின்றன. அதேபோல், மனிதர்கள் மீது நாம் சுமத்தும் பாகுபாடுகள், முத்திரைகள் எல்லாம் அழிக்கப்படுகின்றன.
மனிதர்கள் வகுத்த வரம்புகளை, வேலிகளைத் தாண்டிய உண்மை இறைவனை உள்ளத்தில் கண்டு அவரை வாழ்வெல்லாம் வழிபடுவதற்கு இந்தத் தவக்காலம் நமக்கு உதவட்டும். அதேபோல், தவித்த வாய்க்குத் தண்ணீர் தருவதிலும் பிளவுகளை வளர்த்துவரும் நம் சமுதாயம், பாகுபாடுகளைத் தாண்டி உயிருள்ள ஊற்றான இறைவனைப் பருகவும் இந்த தவக்காலம் நமக்கு உதவுவதாக.
பிரித்தாள்வதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் இந்திய அரசியல் தலைவர்கள், ஒட்டுவேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இத்தலைவர்கள், இறைவனையும், மதத்தையும், சாதியையும் பகடைக் காய்களாகப் பயன்படுத்தி, மக்களைப் பிரிக்கும் மாயவித்தைகளை, இந்திய மக்கள் சரிவரப் புரிந்துகொள்ள வேண்டும் என்று இறைவனை உருக்கமாக மன்றாடுவோம்.








All the contents on this site are copyrighted ©.