2014-03-21 16:27:55

“உலகின் மிகப்பெரிய தலைவர்” திருத்தந்தை பிரான்சிஸ், Fortune இதழ்


மார்ச்,21,2014. மனிதர் தலைமைப் பதவிக்காக ஏங்கும் இந்த உலகில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை “உலகின் மிகப்பெரிய தலைவர்” எனப் பெயரிட்டுள்ளது உலகளாவிய வணிக இதழான Fortune.
உலகில் மிகவும் புகழ்பெற்றுள்ளவர்கள், சிறிதளவு புகழ்பெற்றுள்ளவர்கள் எனப் பரிந்துரைக்கப்பட்ட ஐம்பது பேரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது Fortune இதழ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து திருஅவைக்குப் பெரும் உந்துசக்தியாக விளங்குகின்றார் மற்றும், மிகுந்த உயிரூட்டத்துடன் புதிய வழிகளை அமைப்பதன் மூலம், கத்தோலிக்கரல்லாத பெருமளவான மக்களைக் கவர்ந்து வருகிறார் என்று பாராட்டியுள்ளது Fortune இதழ்.
தற்போது ஏழைகளுக்கு உதவி செய்யும் கத்தோலிக்கரின் எண்ணிக்கை நான்கு பேருக்கு ஒருவர் வீதம் உள்ளது என்றும், இந்தப் பிறரன்புச் செயல் அதிகரித்து வருவதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 77 விழுக்காடு காரணம் என்றும் இந்த மார்ச் மாதத்தில் எடுத்த கருத்து கணிப்பில் தெரியவந்திருப்பதாக Fortune இதழ் அறிவித்துள்ளது.
Time இதழ் நிறுவனத்தால் 1930ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட Fortune இதழ், உலகளாவிய வணிக இதழாகும். இது வாரம் இருமுறை பிரசுரமாகின்றது.

ஆதாரம் : Zenit







All the contents on this site are copyrighted ©.