2014-03-21 16:28:14

இப்பூமியின் நுரையீரல்களான காடுகளைப் பாதுகாப்பதற்கு பான் கி மூன் வலியுறுத்தல்


மார்ச்,21,2014. உலகின் சுற்றுச்சூழல் அமைப்புக்கு உயிர்நாடியாக விளங்கும் காடுகளைப் பாதுகாப்பதற்கு அனைவரும் உறுதி எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.
மார்ச் 21, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட அனைத்துலக காடுகள் நாளையொட்டி செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன், காடுகள் இப்பூமியின் நுரையீரல்களாக உள்ளன, இவை இப்பூமியின் மூன்றில் ஒரு பகுதியை ஆக்ரமித்து, பல்வேறு உயிரினங்களில் 80 விழுக்காட்டுக்கு வாழ்விடமாக அமைந்துள்ளன என்றும் கூறியுள்ளார்.
இவ்வுலகில், 160 கோடிப் பேர் தங்களின் உணவுக்கும், எரிபொருளுக்கும், வருவாய்க்கும் காடுகளை நம்பி வாழ்கின்றனர் எனவும், 65 முதல் 80 விழுக்காட்டு மக்கள், காடுகளிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகளைச் சார்ந்துள்ளனர் என உலக நலவாழ்வு நிறுவனம் கூறுவதாகவும் பான் கி மூன் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகின் ஏழைகளுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் பொருளாதாரத்துக்குக் காடுகள் உதவுகின்றன எனவும், இவற்றைப் பாதுகாப்பதற்கு மனித சமுதாயம் முனைப்போடு செயல்படுமாறும் கேட்டுள்ளார் ஐ.நா. பொதுச்செயலர்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.