2014-03-20 15:37:16

முதல் ஆண்டு நினைவு நாளன்று அமைதிக்காக திருத்தந்தை நட்ட கற்பனை ஒலிவ மரம்


மார்ச்,20,2014. இவ்வுலகில் அமைதி வளரவேண்டும் என்ற நோக்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 19, இப்புதனன்று, ஒரு கற்பனை (Virtual) ஒலிவ மரத்தை நட்டார்.
கடந்த ஆண்டு மார்ச் 19ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையின் தலைமைப்பணியை ஏற்ற திருப்பலியை கொண்டாடியதன் முதல் ஆண்டு நினைவாக, இந்த முயற்சியை மேற்கொண்ட திருத்தந்தை அவர்கள், இதன் தொடர்ச்சியாக குழந்தைகளும் இளையோரும் கற்பனை ஒலிவ மரங்களை சமூக வலைத்தளங்களில் வளர்த்து, அமைதிக் காட்டை உருவாக்கவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
"சந்திப்புக் காலாச்சார பள்ளிகள்" என்று பொருள்படும் Scholas Occurrantes (World School Network for Encounter) என்ற அமைப்பினரை இப்புதன் மாலை புனித மார்த்தா இல்லத்தில் சந்தித்தத் திருத்தந்தை, கற்பனை ஒலிவ மரத்தை சமூக வலைதளத்தில் நட்டார்.
குடும்பங்களில் தொடங்கும் அமைதி, பள்ளிகளிலும், விளையாட்டுத் திடல்களிலும் பரவி, அமைதிக் கலாச்சாரம் உலகெங்கும் பரவேண்டும் என்பதே திருத்தந்தையின் விருப்பம் என்று Scholas Occurrantes அமைப்பின் இயக்குனர் Enrique Palmeyro அவர்கள் Zenit செய்தியிடம் கூறினார்.
கடந்த ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அர்ஜென்டீனா, இத்தாலி ஆகிய நாடுகளின் கால்பந்தாட்ட வீரர்களைச் சந்தித்தபோது, சந்திப்புக் காலாச்சார பள்ளிகளின் உலக அமைப்பு ஒன்றை உருவாக்கினார் என்று Zenit செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இந்த முயற்சியில் அடங்கியுள்ள சவால்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நன்கு அறிந்துள்ளதாகவும், இருப்பினும் உலகில் சந்திப்புக் கலாச்சாரத்தை வளர்ப்பது தன் கனவு என்றும் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / Zenit








All the contents on this site are copyrighted ©.