2014-03-20 15:38:35

மக்களின் செபங்களே தன்னைப் பாதுகாக்கவேண்டும் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெளிவுபடுத்தினார் - கர்தினால் சாந்த்ரி


மார்ச்,20,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி தனக்காக வேண்டிக்கொள்ளும்படி மக்களிடம் விண்ணப்பித்தபோது, மக்களின் செபங்களே தன்னைப் பாதுகாக்கவேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தினார் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
வடஇத்தாலியின் Trieste நகரில் அமைந்துள்ள புனித Justus பேராலயத்தில் மார்ச் 19, இப்புதன் மாலை, உரையாற்றிய கீழை வழிபாட்டு முறை பேராயத்தின் தலைவர் கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணிவாழ்வின் முதல் ஆண்டைக் குறித்துப் பேசினார்.
கடந்த ஆண்டு, மார்ச் 19ம் தேதி தன் தலைமைப் பணியை ஏற்றத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித யோசேப்பு திருக்குடும்பத்தின் காவலராக இருந்ததுபோல், தன் பணியின் தலையாயக் கடமை திருஅவை என்ற குடும்பத்தைக் காப்பது என்று கூறியதை கர்தினால் சாந்த்ரி அவர்கள் நினைவுகூர்ந்தார்.
திருஅவை என்ற குடும்பத்தின் காவலர்கள் என்ற கருத்தை வாழ்ந்துகாட்டியவர்கள், புனிதர்களாக உயர்த்தப்படவிருக்கும் திருத்தந்தையர் 23ம் ஜான், மற்றும் 2ம் ஜான்பால் ஆகிய இருவரும் என்று கர்தினால் சாந்த்ரி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
"முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களின் வாழ்வும், அவரின் உருவமும்" என்ற தலைப்பில் கர்தினால் சாந்த்ரி அவர்கள் வழங்கிய இவ்வுரையில், திருத்தந்தை 2ம் ஜான்பால் தன் வாழ்வின் இறுதியில் பேச்சற்று இருந்தாலும், அவரது கனிவு மிகுந்த உருவம் பல பாடங்களைக் கூறியது என்று எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.