2014-03-20 15:39:42

நற்செய்தி கூறும் பரிவு, நம்பிக்கை ஆகிய உயர்ந்த பண்புகளை திருத்தந்தை பிரான்சிஸ் தன் வாழ்வில் வெளிப்படுத்தினார் - இந்தியக் கர்தினால் கிரேசியஸ்


மார்ச்,20,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் முதலாம் ஆண்டு பணிவாழ்வில் மக்களை எளிதில் கவர்ந்தார் என்றும், நற்செய்தி கூறும் பரிவு, நம்பிக்கை ஆகிய உயர்ந்த பண்புகளை தன் வாழ்வில் வெளிப்படுத்தினார் என்றும் இந்தியக் கர்தினால் ஒருவர் கூறினார்.
மார்ச் 19, இப்புதனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் தலைமைப் பணியேற்பு நாளின் முதலாம் ஆண்டை நிறைவு செய்ததற்காக நன்றித் திருப்பலியாற்றிய மும்பைப் பேராயர், கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
தன் எளிமையாலும், பணிவாலும் உலகினர் கவனத்தை ஈர்த்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அகில உலகத் திருஅவைக்கு நம்பிக்கை ஆண்டில் அளவற்ற வரங்களைக் கொணர்ந்தார் என்று கர்தினால் கிரேசியஸ் அவர்கள் கூறினார்.
வறுமையில் வாடும் சகோதர சகோதரிகளுடன் நம்மையே அனுபவப்பூர்வமாக இணைப்பது ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் தவக்காலச் செய்தியில் கூறியுள்ளதை, கர்தினால் கிரேசியஸ் அவர்கள் தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
தன் தலைமைப் பணியைத் துறந்த முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் நாம விழா, இப்புதனன்று நாம் கொண்டாடிய புனித யோசேப்பின் திருவிழா என்பதையும் கர்தினால் கிரேசியஸ் அவர்கள் நன்றியோடு நினைவு கூர்ந்தார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.