2014-03-20 15:35:16

திருத்தந்தை பிரான்சிஸ் - மனித உழைப்பை வெறும் செல்வம் திரட்டும் ஒரு முயற்சியாக மட்டும் காண்பது தவறு


மார்ச்,20,2014. எஃகுக் கம்பிகள் உற்பத்தியில் Terni தொழிற்சாலை காட்டியுள்ள திறமை இத்தாலிய நாட்டின் எல்லைகளைத் தாண்டி இந்நிறுவனத்தைப் புகழ்பெறச் செய்துள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
மத்திய இத்தாலியில் அமைந்துள்ள Umbria பகுதியில் நிறுவப்பட்டுள்ள Terni என்ற எஃகுத் தொழிற்சாலை, தன் 130வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் தருணத்தில், அத்தொழிற்சாலையின் உரிமையாளர்களையும், தொழிலாளர்களையும் இவ்வியாழன் காலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்தில் சந்தித்தார்.
Terni தொழிற்சாலையுடன் தொடர்புடையவர்கள், மற்றும் Terni மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அடங்கிய 7000 பேரை இவ்வியாழன் காலை சந்தித்தத் திருத்தந்தை, அவர்களின் உழைப்பையும், தொழில் உலகில் அவர்கள் மேற்கொண்டுள்ள முனைப்பையும் பாராட்டினார்.
மனித உழைப்பு என்பதை வெறும் செல்வம் திரட்டும் ஒரு முயற்சியாக மட்டும் காண்பது தவறு, அவ்வுழைப்பின் பயனாக மனிதர்கள் மாண்படைய வேண்டும் என்பதை திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்தினார்.
Terni தொழிற்சாலையை, முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் பார்வையிட்டதை குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொழிலாளர்களும், மறைமாவட்ட மக்களும் இணைந்து வந்திருப்பது, தொழில் உலகில் கிறிஸ்தவ கண்ணோட்டம் வளர வேண்டும் என்பதற்கு ஓர் உந்துசக்தியாக அமைகிறது என்று கூறினார்.
வேலையின்றி தவிக்கும் இளையத் தலைமுறையினரைக் குறித்து தன் கவலையை வெளியிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் வளமானதொரு எதிர்காலத்தை உருவாக்கும் முயற்சியில் நாம் என்றும் மனம் தளரக்கூடாது என்ற வேண்டுதலுடன் அரங்கத்தில் கூடியிருந்தோருக்குத் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.