2014-03-19 15:49:02

துன்புறும் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் அமைதி விருதை அர்ப்பணிக்க விரும்புகிறேன் - கர்தினால் Sandri


மார்ச்,19,2014. பல்வேறு காரணங்களுக்காக உலகின் பல நாடுகளில் துன்புறும் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும், நான் பெற்றுள்ள இந்த விருதை அர்ப்பணிக்க விரும்புகிறேன் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
Ducci அறக்கட்டளை, மார்ச் 18, இச்செவ்வாய் மாலை, 2014ம் ஆண்டுக்கான அமைதி விருதுகளை உரோம் நகரில் வழங்கியபோது, அவ்விருதுகளைப் பெற்றவர்களில் ஒருவரான கீழைவழிபாட்டு முறை திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் Leonardo Sandri அவர்கள் இவ்வாறு கூறினார்.
உரோமையின் ஆயரும், திருஅவையின் தலைவருமான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சார்பிலும், கீழை வழிபாட்டு முறை திருப்பேராயத்தின் சார்பிலும் இவ்விருதைப் பெற்றுக் கொள்வதாகக் கூறிய கர்தினால் Sandri அவர்கள், தங்கள் கிறிஸ்தவ நம்பிக்கைக்காக உலகெங்கும் துன்புறும் மக்களுக்கு, குறிப்பாக, உக்ரைன், ஈராக், எகிப்து, சிரியா ஆகிய நாடுகளின் மக்களுக்கு இவ்விருதை தான் அர்ப்பணிப்பதாகக் கூறினார்.
கலாச்சாரங்களுக்கு இடையிலும், மதங்களுக்கு இடையிலும் நல்லுறவையும், உரையாடலையும் வளர்க்கும் முயற்சிகளில் ஈடுபடுவோரில் தலைசிறந்தவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக Ducci அறக்கட்டளை அமைதி விருதுகளை வழங்கி வருகிறது.
2014ம் ஆண்டுக்கான இவ்விருதுகளை, சிரியாவின் இஸ்லாமியத் தலைவர் Ahmad Badr Al-Din Hassoun அவர்களுக்கும், அமைதி ஆர்வலரும், எழுத்தாளருமான Manuela Dviri அவர்களுக்கும் Ducci அறக்கட்டளை வழங்கியது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.