2014-03-19 15:48:01

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதலாம் ஆண்டு பணி நிறைவுக்கு, கனடா நாட்டு ஆயர்கள் அனுப்பியுள்ள மடல்


மார்ச்,19,2014. கடந்த ஆண்டு மார்ச் 13ம் தேதியன்று, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் மேல் மாடத்தில் முதல் முறையாக மக்கள் முன் நீங்கள் தோன்றியபோது உங்களிடம் காணப்பட்ட எளிமையும், மக்களிடம் செபத்திற்காக நீங்கள் அளித்த விண்ணப்பமும், உங்கள் புன்னகையும் எங்கள் மதிப்பையும் அன்பையும் உங்களுக்குப் பெற்றுத்தந்தன என்று கனடா நாட்டு ஆயர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அனுப்பியுள்ள ஒரு மடலில் கூறியுள்ளனர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் முதல் ஆண்டு பணியை நிறைவு செய்யும் வேளையில் அவருக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ள கனடா நாட்டு ஆயர்கள் பேரவையின் தலைவர், பேராயர் Paul-André Durocher அவர்கள், திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் முக்கியமான பணிகளுக்கு தங்கள் ஒத்துழைப்பும், செபங்களும் உறுதியாக உண்டு என்று கூறியுள்ளார்.
குடும்பங்களை மையப்படுத்திய இரு சிறப்பு மாமன்றங்கள், அர்ப்பண வாழ்வுக்கென ஒதுக்கப்பட்டுள்ள ஆண்டு, வத்திக்கான் உயர் மட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய மாற்றங்கள் என்று திருத்தந்தை அறிவித்துள்ள முக்கியமான பணிகளில் தாங்களும் திருத்தந்தையுடன் இணைவதாக இம்மடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உடன்பிறந்தோர் என்ற உணர்வு இவ்வுலகில் வளர திருத்தந்தை மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் பலன் தர தங்கள் சிறப்புச் செபங்கள் உண்டு என்ற உறுதியுடன் கனடா ஆயர்களின் மடல் நிறைவு பெறுகிறது.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.