2014-03-19 15:51:19

இலங்கையில் கைதுசெய்யப்பட்ட அருள் பணியாளர் பிரவீன் மகேசன் விடுதலை


மார்ச்,19,2014. இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களின் கீழ் மார்ச் 16ம் தேதி காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட அருள் பணியாளர் பிரவீன் மகேசன் அவர்களும், சமுதாய ஆர்வலர் ருக்கி பெர்னாண்டஸ் அவர்களும் மார்ச் 19, இப்புதனன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கத்தோலிக்கத் திருஅவையும், இன்னும் பல சமுதாய அமைப்புக்களும் தங்களுக்கு அளித்த ஆதரவால் தாங்கள் விடுதலை அடைந்துள்ளோம் என்று அருள் பணியாளர் மகேசன் அவர்கள் ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டு, தன் நன்றியைக் கூறினார்.
இறைவனின் கருணையாலும், மக்களின் செபங்களாலும் தானும், அருள் பணியாளரும் விடுதலை செய்யப்பட்டுள்ளோம் என்று கூறிய சமுதாய ஆர்வலர் ருக்கி பெர்னாண்டஸ் அவர்கள், சமுதாயப் பணியில் ஈடுபட்டுள்ள தன் நண்பர்களுக்கு அரசினால் வரக்கூடிய தொல்லைகள் தீரவேண்டும் என்று வலியுறுத்தினார்.
தங்களுக்குக் கிடைத்த ஆதரவைப் போல, தகுந்த காரணங்கள் இன்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பலருக்கும் நீதி கிடைக்க மக்கள் ஆதரவு தருவர் என்று தான் நம்புவதாகவும் சமுதாய ஆர்வலர் ருக்கி பெர்னாண்டஸ் அவர்கள் கூறினார்.
அருள் பணியாளர் பிரவீன் மகேசன் அவர்களும், சமுதாய ஆர்வலர் ருக்கி பெர்னாண்டஸ் அவர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னதாகக் கைதான, சமுதாய ஆர்வலர் ஜெயக்குமாரி பாலேந்திரன் அவர்கள் தொடர்பாக தகவல்களை சேகரிக்கச் சென்றிருந்தபோது கைதாயினர்.
ஜெயக்குமாரி அவர்கள் இன்னும் தடுப்புக் காவலிலேயே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.