2014-03-18 16:25:01

உக்ரைன் திருஅவையின் தற்போதைய நிலைமையை திருத்தந்தை உன்னிப்பாய் கவனித்து வருகிறார்


மார்ச்,18,2014. உக்ரைன் குடியரசு, கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பதட்டநிலைகளை எதிர்நோக்கிவரும்வேளை, அந்நாட்டின் கிரேக்க-கத்தோலிக்கத் திருஅவையின் நிலைமை குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மிகவும் கருத்தாய்க் கவனித்து வருகிறார் என, உக்ரைன் தலத்திருஅவைத் தலைவர் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இத்திங்களன்று வத்திக்கானில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உக்ரைன் கிரேக்க-கத்தோலிக்க வழிபாட்டுமுறையின் தலைவர் பேராயர் Sviatoslav Shevchuk இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த மூன்று மாதங்களாக உக்ரைனில் இடம்பெற்றுவரும் நிகழ்வுகள் குறித்து திருத்தந்தையிடம் தான் விளக்கியதாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் உக்ரைன் திருஅவைமீது மிகுந்த அக்கறையுடன் உள்ளார் எனவும் கூறினார் பேராயர் Shevchuk.
மேலும், உக்ரைனின் கிரிமியா தன்னாட்சிப் பகுதி இரஷ்யாவுடன் இணைவதற்கு முன்வைத்த விண்ணப்பத்தை இரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.