2014-03-17 17:05:47

திருத்தந்தை பிரான்சிஸ் - இரக்கமுடையவர்களாக இருப்பதன் இரு கூறுகள்


மார்ச்,17,2014. மன்னிப்பதன் வழியாக இரக்கத்தைப் பெறுவதே நம் இதயங்களிலும் உலகிலும் அமைதியை நிலைநாட்டச் சிறந்த வழி என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கமுடையவர்களாக இருப்பது என்பது இரு கூறுகளை எதிர்பார்க்கின்றது, ஒன்று நாம் பாவிகள் என்பதை ஏற்பது, மற்றொன்று நம் இதயத்தை மேலும் விரிவாக்குவது என்று கூறினார்.
நாம் பாவிகள் என்பதை ஏற்கும்போதுதான், மற்றவர்களின் பாவங்களையும் புரிந்துகொண்டு, மன்னிக்கும் மனநிலை உருவாகும் என்று கூறியத் திருத்தந்தை, நம் இதயங்களை விரிவாக்கும்போதுதான் இரக்கத்தை ஏற்கும் அளவு இடத்தையும் கொண்டிருக்க முடியும் என்று கூறினார்.
நம் இதயங்களைத் திறப்போம், மற்றவர்களைத் தீர்ப்பிடுவதைத் தவிர்ப்போம், மன்னிக்கும் இதயம் மன்னிப்பைப் பெறுகிறது, இரக்கமே நம்மை அமைதிக்கு இட்டுச் செல்கிறது என்று மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
இதற்கிடையே, இத்திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தன் முதலாம் ஆண்டு பணிநிறைவையொட்டி வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, தொடர்ந்து தனக்காகச் செபிக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.