2014-03-15 14:45:23

இந்தியாவில் இன்னும் 35 ஆண்டுகளுக்கு மட்டுமே சுண்ணாம்பு கிடைக்கும்


மார்ச்,15,2014. இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதிப்பு மிகவும் முக்கியமான பிரச்சனையாக இருக்கும்வேளை, நாட்டில், இன்னும் 35 ஆண்டுகளுக்குத்தான், 'சுண்ணாம்பு' என்ற கனிம வளம் கிடைக்கும் என டில்லியில் நிருபர்களிடம் கூறப்பட்டது.
இது குறித்து டில்லியிலுள்ள உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர், எம்.சி.மேத்தா, சுற்றுச்சூழல் ஆர்வலர் புருஷோத்தம் ரெட்டி ஆகியோர் இவ்வியாழனன்று டில்லியில், நிருபர்களிடம் பேசியபோது இவ்வாறு எச்சரித்தனர்.
இயற்கை வளங்களைக் கட்டிக்காக்க வேண்டுமென்ற எண்ணம் நாளுக்கு நாள் மழுங்கடிக்கப்படுகிறது எனவும், அரசும், ஒப்பந்தங்களைப் போடுகிறதே தவிர, சுற்றுச்சூழல் குறித்த, எந்த ஒரு சட்டத்தையும், அமல்படுத்துவதில்லை எனவும் கூறிய அந்த ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து, தேசிய அளவில் வெளிப்படையாக, விவாதங்கள் நடத்தப்பட வேண்டும்; அப்போதுதான், பிரச்சனைகள் வெளிவரும் என்று கருத்து தெரிவித்தனர்.
நல்ல காற்று, நல்ல குடிநீர் என, எல்லாமே கனவாகப்போகும் நிலை வருவதற்கு முன், அவற்றுக்குத் தீர்வு காண வேண்டும். அரசியல் கட்சிகள், தங்களின் தேர்தல் அறிக்கையில், இந்த பிரச்னைக்கு, முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இது தொடர்பாக, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளோம் எனவும் அவர்கள் கூறினர்.
தேசிய அளவில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார ஆணையத்தை அமைத்திட வேண்டும். அணுமின் சக்தியை கைவிட்டுவிட்டு, சூரிய ஒளி, காற்று, நீர் ஆகியவை மூலமாக, மின்சாரம் தயாரிக்க வேண்டும். வீடுகளின் மாடியில் சூரிய ஒளி மின்சாரத் தயாரிப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

ஆதாரம் : தினமலர்







All the contents on this site are copyrighted ©.