2014-03-15 14:45:16

ஆசிய-பசிபிக் பகுதியில் இயற்கைவளக் காடுகள் அழிந்து வருகின்றன, ஐ.நா. எச்சரிக்கை


மார்ச்,15,2014. ஆசிய-பசிபிக் பகுதியில் இயற்கைவளக் காடுகள் வேகமாக அழிந்து வருகின்றன என்றும், அப்பகுதியில் வாழும் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களுக்கு காடுகளைச் சுரண்டுகின்றனர் என்றும் ஐ.நா. வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
வெப்பநிலை மாற்றமும், தரிசு நிலங்களும் இப்பிரச்சனைக்கு மேலும் காரணங்களாக அமைந்துள்ளன என்று கூறும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தின் வல்லுனர்கள், ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது 20 இலட்சம் ஹெக்டேர் அளவு காடுகளும், புல்வெளிகளும் இழக்கப்படுகின்றன என்றும் தெரிவித்தனர்.
குறைந்தது 40 கோடி ஹெக்டேர் காடுகள் ஆபத்தான நிலையில் உள்ளன எனவும், தென்கிழக்கு ஆசியாவில் சட்டத்துக்குப் புறம்பே மரம் வெட்டுதல் அதிகமாக இடம்பெறுகின்றது எனவும் அவ்வல்லுனர்கள் கூறினர்.
ஆசிய-பசிபிக் பகுதியின் நிலப்பரப்பில் காடுகள் மற்றும் பசும்புல் வெளிகள் ஏறக்குறைய 58 விழுக்காடாக உள்ளது எனக் கூறிய FAO நிறுவன மூத்த அலுவலகர் Patrick Durst, ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது 20 இலட்சம் ஹெக்டேர் பகுதி பயனற்றதாக மாறி வருகின்றது என்று எச்சரித்தார்.
இதற்கிடையே, இந்தியா, சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் அண்மை ஆண்டுகளில் காடுகளை மீண்டும் உருவாக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் FAO நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.