2014-03-15 14:45:09

அருள்சகோதரி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான விடயம் குறித்த தீர்ப்பு, அரசுக்கும், இந்துத் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதைக் காட்டுகிறது


மார்ச்,15,2014. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் 2008ம் ஆண்டில் கத்தோலிக்க அருள்சகோதரி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான விவகாரம் தொடர்பாக மூன்று பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது, உண்மையாகவே நீதியைக் கேலி செய்வதாக உள்ளது எனக் கூறினார் Sajan George.
கட்டாக் நீதிமன்றம் வழங்கியுள்ள இத்தீர்ப்புப் பற்றி கருத்து தெரிவித்த, இந்தியக் கிறிஸ்தவர்களின் உலக அவையின் தலைவர் Sajan George, இவ்வழக்கில் விசாரிக்கப்பட்ட 9 பேரில் மூன்று பேர் மட்டுமே குற்றவாளிகள் எனவும், ஆறு பேர் குற்றமற்றவர்கள் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது கேட்டுத் தாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்துத் தீவிரவாதிகளால் திட்டமிட்டுச் செய்யப்பட்ட இவ்வன்முறைக்கு, அரசு அதிகாரிகளின் ஆதரவு இருப்பதை இத்தீர்ப்பு வெளிப்படையாகக் காட்டுகிறது எனவும் குற்ற அறிக்கை தயாரித்தல், புலன்விசாரணைகள் என, பல்வேறு மட்டங்களில் இந்தப் பாலியல் வன்செயல் தீர்ப்பு குறித்த விடயத்தில் தவறுகள் நடந்துள்ளன எனவும் Sajan George குறை கூறினார்.
2008ம் ஆண்டில் கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்க்கு எதிராக இடம்பெற்ற வன்முறையில் அருள்சகோதரி மீனா பார்வா இந்துத் தீவிரவாதக் கும்பல் ஒன்றால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விவகாரத்தில் 10 பேர் குற்றவாளிகள் என முன்னர் குற்றம் சாட்டப்பட்டனர். அவர்களில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றொருவர் காணாமற்போய்விட்டார்.
இக்குற்றம் தொடர்பாக 29 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.