2014-03-14 16:58:31

செக் குடியரசின் அருள்பணியாளர் Halik அவர்களுக்கு Templeton விருது


மார்ச்,14,2014. உலகெங்கும் புரிந்துகொள்ளுதலையும், பல்சமய உரையாடலையும் ஊக்குவிப்பதற்கு அருள்பணியாளர் Tomas Halik அவர்கள் ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டும் விதமாக, அவ்வருள்பணியாளருக்கு 2014ம் ஆண்டின் Templeton விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செக் குடியரசின் அருள்பணியாளர் Tomas Halik அவர்கள் இவ்வாண்டுக்கான Templeton விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, John Templeton நிறுவனம் இவ்வியாழனன்று அறிவித்தது.
65 வயதாகும் அருள்பணியாளர் Halik அவர்கள், தனது 18வது வயதில் கத்தோலிக்கத்தைத் தழுவினார். இரகசியமாக குருத்துவப் படிப்பை முடித்த இவர், இரகசியமாகவே குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். இவர் குருவானது இவரது தாய்க்கே தெரியாது. 1989ம் ஆண்டில் செக் குடியரசில் கம்யூனிசம் வீழ்த்தப்படுவதற்கு முன்னர், அருள்பணியாளர் Halik, பல்கலைக்கழகத்திலும், கிறிஸ்தவ சமூகத்திலும் விசுவாசம் மற்றும் பேச்சு சுதந்திரத்தை மறைவாக ஊக்குவித்து வந்தார்.
1946ம் ஆண்டுக்குப் பின்னர், 1990ம் ஆண்டில் முன்னாள் செக்கோஸ்லோவாக்கியா, முதல் சனநாயகத் தேர்தல்களை நடத்தியபோது, தேசிய ஆன்மீகப் புதுப்பித்தல் என்ற கிறிஸ்தவ ஒன்றிப்புத் திட்டத்தையும் நடத்தியவர் அருள்பணியாளர் Halik.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.